தேநீரை தவிர்த்தால்?

11 Apr, 2025 | 05:26 PM
image

தேநீர் அருந்துவதை திடீரென நிறுத்தினால், சிலருக்கு மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாம். அந்தளவு, நம்மில் பலருக்கு தேநீர் மீதான காதல் அதிகம்.

காலை, மாலை என இரண்டு வேளைகள் கட்டாயம் தேநீர் வேண்டும் என்று கூறுபவர்கள் பலர். இருப்பினும் சிலர், இரண்டு தடவைகளுக்கும் அதிகமானளவில் தேநீர் அருந்துவது உண்டு.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் தேநீர் அருந்துவது பிரச்சினையில்லை. ஆனால் அதிக அளவில் தேநீர் குடிப்பது நிச்சயமாக நம் உடலில் நாள்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள்.

தேநீரை தவிர்ப்பதன் நன்மைகள்

தேநீரை தவிர்ப்பதால், நமது உடலில் கெஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக நமக்கு ஆழ்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட உறக்கம் கிடைப்பதோடு பதட்டம் குறைகிறது.

அதிகளவில் தேநீர் குடிப்பது, நம் உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தை குறைக்கிறது. எனவே அடிக்கடி தேநீர் குடிப்பதை கைவிடுவது சிறந்தது.

செரிமான பிரச்சினைகள் மற்றும் ஒரு சில வகையான புற்றுநோய்கள் தடுக்கப்படுகிறது.

தேநீர் குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

தேநீருக்கு பதில்?

ஒருவேளை தேநீரை முற்றிலுமாக தவிர்க்க நினைத்தால், அதற்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி செய்யலாம். சாமந்திப்பூ, புதினா போன்ற கெஃபைன் இல்லாத தனித்துவமான சுவை கொண்ட மூலிகை தேநீர்கள் நம் உடலுக்கு சாதகமான பல விளைவுகளை தருகிறது.

வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து குடிப்பது தேநீரைப் போல நமக்கு கதகதப்பையும், சௌகரியத்தையும் தர உதவுகிறது.

நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்கள் கெஃபைன் மற்றும் டானின் உள்ள தேநீரை தவிர்க்க வேண்டும்.

மேலும், கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் தேநீரை மிதமான அளவு உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அதிகப்படியான தேநீர் வளர்ந்து வரும் சிசுவை பாதிக்கலாம்.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகையினால் அவதிப்படும் நபர்கள் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள டானின் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது. எனவே இரத்த சோகை நிலை இன்னும் மோசமாக கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right