(எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாவை - ஹொரண வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மேல் மாடியின் படுக்கை அறையில் இருந்து, அந்த கோடீஸ்வரரின் மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

26 வயதான தரிந்தி ஆலோக்கா எனும் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்ப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கோடீஸ்வர வர்த்தகரும் அவரது மனைவியும் வெளியில் சென்றிருந்த நேரம் அந்த யுவதியின் இளைய சகோதரி பாடசாலை சென்றுள்ளார். இதன் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 பாடசாலை விட்டு வந்த இளைய சகோதரி தனது மூத்த சகோதரி அவரது அறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அது தொடர்பில் பெற்றோருக்கு அறிவிக்கவே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் விடயம் கொட்டாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த யுவதி அவரது அறையில் உறங்கும் கட்டிலிலேயே சடலமாக கிடந்ததுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி அவரது கட்டிலின் அருகில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவரது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் விஷேட பாட நெறியொன்றினை பூர்த்தி செய்திருந்த குறித்த யுவதி அடுத்த மாதம் வெளிநாடொன்றுக்கு செல்ல இருந்த நிலையிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் ஐந்து பொலிச் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் கொலை தொடர்பிலான பல தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

 குறித்த யுவதிக்கும் மாத்தறை பகுதியைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று இருந்துவந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  26வயதான தரிந்தி ஆலோக்கா என்ற குறித்த யுவதி மாத்தறையை சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவரை காதலித் வந்தாகவும் பின்னர் காதலில் பிரச்சினை உருவானதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதியை காதலித்த இளைஞர் நேற்று முன்தினம் அவரை காண வந்துள்ளதாக அருகிலிருந்து சி.சி.ரி.வி. காணொளி மூலம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னரே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.