தன் வாழ்நாள் முழுவதும்,பல்லி,உடும்பு,பாம்பு,முதலை போன்ற உயிரினங்களின் மேல் தீராக் காதல் கொண்டு, அவற்றின் காவலனாக விளங்கியவர் தான் ஸ்டீவ் இர்வின். `முரட்டு முதலை வேட்டைக்காரன்’ (The Crocodile Hunter) என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், ஒரு அவுஸ்திரேலியன்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகில் எஸ்ஸென்டென் (Essendon) என்ற இடத்தில், 1962ஆம் ஆண்டு பிறந்த இவர், 1970இல், தன் குடும்பத்துடன் குயின்ஸ்லேண்டுக்கு அருகிலிருக்கும் பீா்வா (Beerwah) என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தார்.
அங்கே `பீர்வா ரெப்டைல் எண்ட் ஃபானா பார்க்’ (Beerwah Reptile and Fauna Park) என்ற ஒரு உயிரியல் பூங்காவை ஆரம்பித்து நடத்தினார்கள் ஸ்டீவின் அப்பாவும் அம்மாவும். அந்த உயிரியல் பூங்காவில் வாழ்ந்து, வளர்ந்ததாலோ என்னவோ, ஸ்டீவுக்கு பல்லி, முதலை, பாம்புகள் மேலெல்லாம் அலாதியான அன்பு.
அவற்றின் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளும் விசித்திரமான அறிவு அவருக்கு இருந்தது. ஸ்டீவ், விஷமுள்ள பாம்பு ஒன்றை முதன் முதலாகப் பிடித்தபோது அவரின் வயது ஆறு மட்டுமே.
அவருக்கு ஒன்பது வயதானபோது, தன் அப்பாவோடு அவர் பார்த்த வேலை, ஆற்றில் படகுகள் மீது மோதி தள்ளி, தொந்தரவு தரும் முதலைகளைப் பிடிக்கும் வேலை. வளர வளர முதலை போன்ற உயிரினங்களின் மீதான காதல் அவருக்கு அதிகமானது.
முதலைகளை மீட்டுப் பராமரிக்கும் அமைப்பில் தன்னார்வலரானார். அடர்ந்த காடுகளுக்குள் சென்று மாதக் கணக்கில் பழியாகக் கிடந்தார். மற்றவர்களின் கைக்குச் சிக்கும் நிலையில் இருந்த பல முதலைகளை மீட்டார்.
அவற்றில் வழிதவறி வந்த பல முதலைகளை அவற்றின் இருப்பிடத்தில் பத்திரமாகச் சேர்த்தார். சிலவற்றை தன்னுடைய பெற்றோர் நடத்தும் உயிரியல் பூங்காவுக்கு எடுத்துப் போய் காப்பாற்றினார். அப்படி அவர் மீட்ட முதலைகளின் எண்ணிக்கை 100க்கும் மேலிருக்கும்.
இர்வினின் மனைவி டெர்ரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். கடந்த 1991ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற டெர்ரி, இர்வினின் வனவிலங்குகள் சரணாலயம் பற்றி கேள்விப் பட்டிருந்தார். இர்வினை கண்டதும் டெர்ரிக்கு காதல் பற்றிக் கொண்டது.
‘இர்வினை பார்த்ததுமே எனக்கு டாஸன் தான் நினைவுக்கு வந்தார்’ என டெர்ரி கூறுவார். காதல் மலர்ந்த நான்கே மாதங்களில் திருமணத்தில் முடிந்தது.
இந்த தம்பதியினருக்கு, இரண்டு குழந்தைகள். மூத்தவள் பிந்தி. 1998ஆம் ஆண்டு பிறந்தாள். இர்வினின் சாகச நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு, ‘இப்படியெல்லாம் ஒரு மனிதன் விலங்குகளுடன் பயமற்று உலவ முடியுமா’ என்ற கேள்வி நிச்சயம் எழும்.
1990ஆம் ஆண்டு முதல் டிஸ்கவரி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இர்வினின் ஆவணப்படங்கள் பார்ப்போரை பதைக்க வைத்தது. அனகொண்டா, மலைப்பாம்பு எல்லாம் குழந்தை போலத்தான் இர்வினின் கையில் இருக்கும்.
கடந்த 1996ஆம் ஆண்டு, இர்வினின் ‘த க்ரொக்கடைல் ஹன்டர்’ நிகழ்ச்சி முதன் முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பார்த்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான இரசிகர்கள் இர்வினுக்கு உருவானார்கள். சுமார் 50 கோடி மக்களை ‘குரொக்கடைல் ஹன்டர்‘ நிகழ்ச்சி சென்று சேர்ந்தது.
இதற்கிடையிலே ரொபர்ட் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது, அவரை கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் முர்ரே என்ற 6 அடி நீள முதலைக்கு அவரின் தாய், ஸ்டீவ் இர்வின் உணவு வழங்கிய நிகழ்ச்சி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட, மக்கள் பதைப் பதைத்துப் போனார்கள்.
இர்வினுக்கு கண்டனங்கள் குவிந்தன. இர்வின் மன்னிப்பு கேட்ட பின்னரே பிரச்சினையின் தீவிரம் அடங்கியது. இப்போது,ரொபர்ட்டும் தந்தையைப் போலவே முதலை வீரனாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் முழுவதும் சுற்றுச் சூழலுக்காகவும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றவும் இர்வின் உழைத்தார். இறுதியாக அவர், தான் நேசித்த துறையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மரணித்து விட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் திகதி, அவுஸ்திரேலிய கடற்பகுதியில் ‘ஆபத்தான கடல் விலங்கினங்கள்’ பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கைமீன் (stingray) அவரின் இதயத்தில் நேரடியாக குத்தியதால் மரணத்தை தழுவினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM