(லியோ நிரோஷ தர்ஷன்)

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக சிலர் தற்போது மக்களுக்கு சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இதற்காக அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்கின்றனர். அத்தகைய முறையற்ற அரசியல் துண்டுதல் செயல்களுக்காக எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் குறை கூறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பொலன்னறுவை லங்காபுர மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

வருடத்திற்கு சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களுள் சுமார் தொண்னூராயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை பெறுவதற்கான தகைமையை பெற்றுக்கொண்ட போதிலும், அவர்களுள் இருபத்தையாயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர் .

எனவே ஏனைய மாணவர்களின் உயர் கல்விக் கனவினை நிறைவேற்றுவதற்காக அரச பல்கலைக்கழகங்களைப் போன்று உயர் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களும் நாட்டில் உருவாகவேண்டும் நாட்டின் எந்தவொரு பிள்ளையினதும் கல்வி உரிமையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாராலும் வரையறுக்க முடியாது.

அவ்வாறே வருடாந்தம் சுமார் 80,000 மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதுடன், தமது கல்வியை பெறுவதற்காக குறைந்த வருமானமுடைய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமது வீடு வாசல்களை அடகு வைத்து கல்வியை தேடி நாட்டை விட்டு செல்லும் துயரமான நிலைமையே இங்கு காணப்படுகின்றது.

தனியார் பல்கலைக்கழகங்களைப் போன்று ஏனைய கல்வி நிறுவனங்களும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்திற்கு ஏற்ப கல்வியை வழங்க வேண்டும் என்ற  கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.  மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்களது வேண்டுகோள்களுக்கேற்ப பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.