(லியோ நிரோஷ தர்ஷன்)

நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை மீறியேனும் உயிர்களை பாதுகாக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , ஜனநாயகத்தின் பரம எதிரி பயங்கரவாதம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாகிஸ்தானின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ''சமாதானத்திற்கான இலங்கையின் போராட்டமும் கற்றுக்கொண்ட பாடங்களும் " என்ற தொனிப்பொருளிலான மாநாட்டின் சிறப்பு அதிதியாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார். 

இங்கு அவர் உரையாற்றியதுடன் கேள்விகளுக்கும் பதிலளித்தார். 

போரின் பின்னர் 14 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தினோம். அதே போன்று போர் முடிவடைந்து ஓரு மாதத்திற்குள் 595 சிறுவர் போராளிகளை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தேன்.  இவை அச்சுறுத்தலான விடயங்கள் என்றாலும் கூட முக்கியமான விடயமென கருதி செய்தோம். 

ஆசியாவில் எம்மை போன்ற நாடுகளுக்கு மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக கற்பிக்க வருகின்றனர். நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை மீறியேனும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பின்வாங்க போவதில்லை. ஆனால் நாட்டை பாதுகாத்த படையினருக்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மேற்குலக சக்திகளின்  நோக்கங்களுக்கு அமைவாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். 

பயங்கரவாதிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்தில் நல்லது கெட்டது என்று வேறுப்பாடில்லை. ஜனநாயகத்தின் பரம எதிரி பயங்கரவாதம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.