ஜெயக்குமார் எழுதிய “என் நாட்டவர்க்கும் இறைவன்” நூல் வெளியீடு 

08 Apr, 2025 | 03:40 PM
image

ஜெயக்குமார் (பாரதிபாலன்) எழுதிய “என் நாட்டவர்க்கும் இறைவன்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் திருகோணமலை நகராட்சி மன்றத்தில் நடைபெற்றது. 

இதன்போது உரையாற்றிய நூலாசிரியர் ஜெயக்குமார் பேசுகையில், 

“இன்றைய தமிழரில் பெரும்பான்மையானவர்கள் வைதிக இந்துக்களாக இருந்தாலும், அவர்கள்  முன்னர் பிற மதங்களான பௌத்த, சமண, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களிலும் இருந்து தொண்டாற்றியவர்கள். 

தமிழைச் செம்மை செய்து சதுர் அகராதி தந்த கிறித்தவரான பெஸ்கி எனும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர், ஐம்பெருங்காப்பியம், திருக்குறள் முதலான அறநூல்களை தமிழுக்கு வழங்கிய சமண, பௌத்த மதத்தைச் சேர்ந்த புலமைமிக்க அறிஞர்கள், “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று பாடிய இஸ்லாமியச் சித்தர்கள் போன்றோரால் எமது தமிழ் வளம் பெற்றும் ஏற்றம் பெற்றும் காணப்படுகிறது. அவர்கள் வழியே இந்த நூல் வெளியீட்டுக்கு வந்தவர்களை சிறப்பித்து வந்தனம் கூறவேண்டியது அடியேனின் உயரிய கடமை. 

இந்த நூலில் காணப்படும் மேலை நாட்டவரான கிறித்தவ மதபோதகர் ஒருவர் தமிழராகி தமிழ் நாட்டிலே தமது  கல்லறையிலே உறங்கிக்கொண்டிருக்கும் தரிசனத்தை முதற்கண் காண்பிக்க விழைகின்றேன். 

அவரே கனடா நாட்டைச் சேர்ந்த ஜி.யு.எபோப் என்னும் கிறித்தவ மதபோதகர். அவர் 19ஆம் நூற்றாண்டிலே கிறித்துவ மதம் பரப்பவென தென்னிந்தியாவின் தமிழ்நாட்டுக்கு சென்றார். அங்கே அவர், தமிழரின் தலைசிறந்த ஏடுகளில் மனம் பதித்து தமிழர் தம் உலக வேதமான திருக்குறளையும் இந்நூலின் நாயகரான  மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்தார்.

1898ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இலண்டன் ஒக்ஸ்போட் (oxford) பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், மாணிக்கவாசகர் பற்றிய தமது ஆய்வுரையை இவ்வாறு ஆற்றினார். 

“ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். மாணிக்கவாசகர் மேற்கத்திய மரபிலிருந்து ஏதும் கற்றுக்கொண்டார் என்பதை எனது, இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் மறுக்கின்றார்கள்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதபோதகர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள். ஆனால், அனைவரும் சொல்வது போல் கருதுவது போல் சென்தோமஸ் அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பண்டேனியர் தமிழ்நாட்டுக்கு சென்று கிறிஸ்தவ மதபோதனை செய்தார். பிறகு நெட்றோரியக் குழுவினர் சென்றனர். அந்த நெட்றோரியக் குழுவினர் மிகவும் சாமர்த்தியசாலிகள். சொல்லப்போனால், கேரள நாடான திருவாங்கூர் மன்னர், நெட்றோரியக் கிறித்தவர் ஆனார். அக்காலத்தில் மாணிக்கவாசகர் வாழ்ந்தார் என்பது சரித்திர மரபு.

ஆனால், நெட்றோரியன் மதபோதனைகள் ஆன்மிகத்தை அவ்வளவாகத் தழுவவில்லை. சொல்லப்போனால், இந்தக் குறையை கிறிஸ்தவர்களான எம்மால் “மிலேச்சன்” என்று சொல்லப்படும் சைவர் ஒருவர் நீக்கினார். 

இந்தக் குறை நிறைவை இனிய தமிழ்ப் பண்களால் தமிழ்நாடு எங்கும் பரப்பினார். நாம் மட்டும் இவற்றைப் புரிந்துகொண்டு மதபேதமின்றி ஒருவரை ஒருவர் நேசித்தால் குறைகள் எல்லாம் நிறைவுபடும். உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விட புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்திப் பண்புகளுடன் நம் மனதைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை. அவரது பக்திப் பண்களில் கனித்து கண்ணீர் மல்கி ஈடுபட்ட அனைவரும், இறைவன் பால் நெருங்கி நெருங்கி வருபவர்கள்.  திருவாசகம் என்பது எம் உள்ளத்தை உருக்கும் பக்திக் கீர்த்தனைகள் கொண்ட அருள் நூல்.

… ஒரு வார்த்தை சொல்லுகிறேன். தமிழகத்து இந்துக்கள் தீவிர மத ஈடுபாட்டில் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. இந்து மக்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர்கள் கடவுளை நம்புவது மட்டுமல்ல, காதலிப்பவரும் கூட…

இவ்வாறு தமது ஆய்வுரையில் தெரிவித்த கனடா நாட்டைச் சேர்ந்த ஜீ.யூ. போப் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டதோ தாம் மரணித்த பிறகு தமது கல்லறையிலே `இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகின்றான்' என  பொறித்துவிடுங்கள்…” என்பதாகும். 

அத்தகைய மேற்குலக மதபோதகர் தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டவாறு தமிழ்நாட்டில் அவர் மரணித்த பிறகு அவரது கல்லறையிலே அந்தத் தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டு இருப்பது  நம் தமிழ் ஆன்மாக்களின் பரிசுத்தத்தை அங்கே காண்பிக்கிறது.  

இது இவ்வாறிருக்க இந்நூலுக்கு முன்னர் அடியேன் எழுதிய “தமிழர்தம் உலக வேதமும் புனித ஞானியும்” என்கிற திருக்குறள் ஆய்வு நூலிலே ஒரு சம்பவம் வருகிறது. அது இந்துக்களின் இருக்கு வேதம் பற்றியது. 

இந்துக்கள் போற்றும் வேத ஆரியர்கள் எனப்படுவோர் கீப்ருக்களான யூதர்களே என்பதை மேற்படி புராண வேதகால வரலாற்றுக் கதை கூறும் சம்பவங்களைக் கிரகிக்கும்போது, உள்வாங்கவே முடிகிறது. 

வேத ஆரியரின் இருக்கு வேத புருஷ சூக்தத்தில், பிரஜாபதியாகிய புருசன் தன்னையே பலியாக்கி இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதோடு, உலக மக்களின் உய்வுக்காக பலி செலுத்தவென குறிக்கப்பட்ட ஆட்டின் நான்கு கால்களில் இருந்தும் இரத்தம் பீறிட்டு வரவேண்டும். ஆட்டின் மேலுள்ள வஸ்திரத்தை நான்கு பூசாரிகள் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆடு பலிபீடத்தின் தூணோடு கட்டப்படல் வேண்டும். ஆட்டின் எலும்பை முறிக்கக் கூடாது. ஆட்டுக்கு சாமா செடியின் கசாயம் குடிக்கக் கொடுக்க வேண்டும். ஆடு திரும்ப உயிரோடு எழுப்பப்படல் வேண்டும். ஆட்டின் மாமிசத்தைப் புசிக்க வேண்டும். 

இவ்வாறான இந்துக்களின் இருக்கு வேத புருச சூக்தம் கூறும் ஒன்பது இலட்சணங்களையும் கிறிஸ்தவர்கள் இறைதூதர் என வணங்கும் இயேசுநாதருடன் ஒப்பிடலாம். அவருக்கு சூட்டிய மகுடத்தையும், அவரது கை கால்களில் ஆணி அடிக்கப்பெற்றதையும், அவரது கால் முறிக்கப்படாது இருந்ததையும், இயேசுநாதர் சிலுவையில் அறையப்பெற்ற பின் கசப்பு கலந்த காடி கொடுக்கப்பட்டதையும், அவர் மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததையும், ஏற்றுக்கொண்டவர்கள், இயேசு தமக்காக மரித்ததை நினைவுகூர அவரது மாமிசத்தை சாப்பிடுவது போல பரிசுத்த இராப்போசன பந்தியில் அதனைக் கைகொள்வதுடன் ஒப்பிடலாம்.  

பெரும்பான்மைத் தமிழ் இனத்தவர் இன்று வரை  இந்து மதத்தில் ஒழுக முற்பட்டபோதும், அவர்கள் முன்னர் அவைதிக மதத்தினராய் பௌத்தராகவும், சமணர்களாகவும் இருந்தவர்கள். 

ஐம்பெருங்காப்பியங்கள், அரிய இலக்கண நூல்கள் மற்றும் சித்தர் பாடல்கள் போன்றவை அரிய பொக்கிஷங்களாக சமுதாய மேம்பாட்டுக்காக அவர்களால் படைக்கப் பெற்றன.

அத்தோடு உலகப் பிரசித்தி பெற்ற திருக்குறள் நூலையும் தமிழ் இலக்கணங்களையும் கொடையாக நல்கியவர்கள் அவர்களே… அவர்கள் வழி தமிழினத்தின் ஆன்மிகப்பாதை சீராக்கப்பட்டும் இருந்திருக்கிறது. 

உதாரணமாக, இந்துக்களின் முருகன் எனும் கந்தக் கடவுளின் பெயரில் எழுந்த “கந்தபுராணம்” நூலில் இறை துதியாக வரும் “திகட சக்கர சண்முகம்…” என எழும் பாடலின் இலக்கணத்தில் தவறு இருப்பதென அன்றைய நூல் அரங்கேற்றச் சபை மொழிகிறது. அதற்குரிய இலக்கணம் சரியானதே என நிறுவ “வீரசோழியம்” எனும் இலக்கண நூல் பிரகாரம் கந்தபுராண நூல் சரியானதே என நிரூபிக்கப்பட்டு  நூல் அரங்கேற்றம் இடம்பெறுகிறது.  

“வீரசோழியம்” நூலின் ஆசிரியர் தமிழ் பௌத்த மதத்தவரான பெரும் பற்றியூர் புத்த மித்தரனார் எனும் தமிழ் பௌத்த புலவர். அப்புலவர் படைத்த இந்நூல் கி.பி 11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரான வீரராஜேந்தரசோழன் காலத்தில் அரங்கேறிய சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். அதனாலேயே வீரராஜேந்திரன் நினைவாக “வீரசோழியம்” எனும் பெயரில் அந்த தமிழ் இலக்கண நூல் வழங்கப்பெற்றது.  

அதில் ழகரம், ளகரம், டகரம், தகரம், நகரம் என்னும் இவற்றின் புணர்ச்சி விதி மாறுதல்களை தெளிவுற உணர்த்தும் அற்புத இலக்கண நூல் அதுவே. 

இவ்வாறான உயரிய இலக்கணப் படையலான வீரசோழிய பழைய ஏட்டை பின் நாளிலே தேடிக் கண்டெடுத்து தமிழ்நாட்டில் அச்சுவாகனம் ஏற்றிய பெருமை ஈழத்தமிழரான சீ.வை.தாமோதரம் பிள்ளை அவர்களையே சாரும்.

20.01.2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் நடைபெற்ற சீவை.தாவின் 119ஆவது ஆண்டு நினைவு விழாவின்போது, எனது “உலகவேதம்” எனும்  திருக்குறள் பற்றிய நூல் விழாக்குழுவினரால் வெளியிடப்பட்டது. அப்போது இச்சம்பவத்தை அடியேன் குறிப்பிட்டுள்ளேன். 

 மேற்படி வீரசோழிய இலக்கணப் பிரகாரம், கந்த புராணம் அரங்கேறுகிறது.

இவ்வாறு புத்தமித்திரனாரின் வீரசோழியத்துடன் கந்தபுராணம் செய்த வைதிகரான கச்சியப்ப சிவாச்சாரியார், பௌத்தர்களின் பூசனை மொழியான பாளி மொழி வழி எழுந்த சுலோகத்தை தமிழ் முறையில் கையாண்டு இறைவனை தோத்தரிக்கின்றார். 

கந்த புராணம் கூறும் கச்சியப்பரின் பக்திப் பா வரிகள் வருமாறு :

வான்முகில் வழாது பெய்க 

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க 

குறைவிலாது உயிர்கள் வாழ்க 

நான்மறை அறங்கள் ஓங்க 

நற்றவம் வேள்வி மல்க 

மேன்மைகொள் சைவ நீதி 

விளங்குக உலகம் எல்லாம்… 

என்றவாறு இந்த கந்த புராணத்தை சைவர்கள் போற்றித் துதிக்கின்றனர். அவ்வாறான கச்சியப்பர் தோத்திர வரிகளுக்கு பாளி மொழி கொண்ட அந்த மங்கல சுலோகம் பௌத்தம் பெரிதும் அறிந்த அதி முக்கிய சுலோகம். “தேவோவ ஸத்து கலனா ஸஸ சம்பத கொடிசா பிடோபவத்து லோகேசா ரஜவத்து தம்பிகோ…” என்பதே அந்த பௌத்த பாளி மொழியில் எழுந்த அந்த புனித சுலோகம். தமிழிலே இதற்குப் பொருள் கொள்வதானால், “மாதம் மும்மாரி பொழியட்டும், களனிகள் பசுமையில் நிறையட்டும், உயிர்கள் அனைத்தும் வாழட்டும், எங்கும் நீதி சமனாய் ஓங்கட்டும்” என்பதாகும். 

இது போலவே “வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடி உயரக் கோன் உயர்வான்…” எனப் பாடிய அவ்வை மூதாட்டியோ அசோக மன்னரால் சத்திய புத்தரன் எனப் போற்றப் பெற்ற தமிழ் மன்னனான அதியமான் பிறந்த நாளை வாழ்த்தும்போதே இந்த தேவோவ சத்து… பாழி வழி  வரப்புயர்வைப் பாடியுள்ளார்.  

எனவே, மதம் கடந்து இனம் கடந்து உறவுகள் பரிசுத்தமாக ஒன்றிணைய இறைவனே ஏற்படுத்தி வைத்த சம்பவங்களே இவை. 

முன்னைய பௌத்த தமிழர் சேவை இவ்வாறு இருக்க, தமிழ் சமண மதத்தினரும் தமது உயர்ந்த சேவைகளால் தமிழரை ஒருங்குபடுத்த அறநூல்கள் பல படைத்ததுடன் தமிழுக்கு சிறந்த தொண்டாற்றி இருக்கின்றனர். அவர்கள் சமத்துவ நடைமுறைகளை உலகத்தோடிணைந்து வந்திருக்கின்றனர். 

வட இந்திய பூர்விக மொழியான சமணர்களின் பிரகிருத மொழி இயேசுகிறிஸ்து நாதரின் தாய்மொழியான அரமிக் மொழியோடு அவர்களது முன்னைய உலக வணிகத் தொடர்பால் நட்புறவாகி இருந்திருக்கிறது.

மொழியியல் ரீதியாக இரு மொழிகளும் பயன்படுத்தும் முக்கிய பல நடைமுறைச் சொற்கள் தத்தமக்குள் கடன் பெற்று மக்கள் சேவையே மகேசன் சேவை என தொண்டாற்றியதை மொழியியல் ஆய்வுலகமும்  ஏற்றுக்கொண்டுள்ளது.    

 இந்நாளில் தமிழ் மீனவர்கள் கடல் வாழ்க்கையில் பயன்படுத்தும் ஏலேலோ அல்லது ஏலையா மந்திரத்துக்கு வருவோம். இந்த ஏலையா ஏலேலோ மந்திரம் தமிழர் சமணராக இருந்தபோது பெறப்பெற்ற அரிய சொத்தாகும்.

அவர்களில் இல்லற சமணர்களான உலக நோன்பிகள் பிற நாடுகளுக்குச் சென்று கப்பல் வணிகத்தால் பொருளீட்டும்போது நகராத பாரமான கப்பல் சுமையை நகர்த்த, கரை நோக்கி இழுக்க மந்திரமாகப் பயன்படுத்தியதே இந்த ஏலேலோ ஏலையா மந்திரம். 

சமணர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது, தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி நெறிப்படுத்தியவர்களுள் முதல்வரானவர். உருவத்தில் சிறியவரான  குந்தாச்சாரியாரும் ஒருவர். அவர் தென்னாட்டின் சமண தீர்த்தங்கராக இருந்தவர். அவருக்கு பத்மநந்தி என்ற பெயருடன் தூக்குவதற்கு இலேசான சிறியவரான காரணத்தால் ஏலாச்சாரியார் எனவும் அழைக்கப்பெற்றவர். 

இந்த ஏலாச்சாரி என்பதில் வரும் “ஏலா” என்பதற்கு பிராகிருத மொழி தரும் பொருளோ தூக்குவதற்கு இலேசான பாரமற்ற என்ற பொருளைக் குறிக்கிறது. தீர்த்தங்கரரான ஏலாச்சாரியாரை தொழுதபடியே அந்த சமண கடல் வணிகர்கள், பாரத்தை இழுக்கப் பயன்படுத்திய, தூக்குவதற்கு இலேசான பாரமற்ற என்பது குறித்த ஏலையா கடல்படு திரவியம் சேர்க்கும் தூக்குவதற்கு (இழுப்பதற்கு) இலேசான பாரமற்ற என்பது கடல்தொழிலார் மந்தரமாக்கப் பெற்றது.

அந்த சமணத் தீர்த்தங்கரரான தென்னாட்டு ஏலாச்சாரியாரே உலக வேதமான திருக்குறளை இயற்றிவர் என்ற நம்பிக்கை சமணர்களிடம் உள்ளது. பின்னாளிலே அந்த சமண ஏலாச்சாரியாரையை மறைத்துவைத்த  வைதிகர் வழிவந்தோர், திருவள்ளுவரையும் உருவத்தில் சிறிய அகத்தியரையும் புனைகதையாக உருவாக்கியுள்ளனர்.  ஈழத்து அரசன் ஏலேலசிங்கனுடன் திருவள்ளுவருக்கு இருந்த தொடர்புடன் ஏலேலோ ஏலையா வரலாறுகளாய் போலிமையாக அவை எழுந்திருக்கின்றன. 

சமணம் மறைந்து வைதிகம் செல்வாக்குப் பெற்ற பின்னாளில் மீனவர்கள் பயன்படுத்தும் மந்திரச் சொல்லாகி அந்த ஏலேலோ ஏலையா நீடு நிலைத்து வளர்ந்தே செல்கிறது. 

இது போலவே யாழ்ப்பாணம் பிறந்த வரலாறும் பிறவியிலேயே பார்வையற்ற யாழ்பாடிப் பாணன் எனும் அந்தகக் கவிவீர ராகவன் என்பவன் தமிழ் நாட்டில் இருந்து ஈழத்து மன்னனான ஏலேல சிங்கனிடம் பரிசில் வாங்க அவைக்கு வந்து யாழ் மீட்டிப் பாடினான் எனவும் அவன் பார்வையற்று இருந்தமையால் மன்னர் அவனைப் பார்ப்பது சகுனப்பிழை என கருதி தம் இருவருக்கும் இடையே திரை தொங்கவிட சம்பவத்தை மேற்படி ஈழ வரலாறும் கூறுகிறது. 

யாழ்பாடியை மெச்சிய மன்னன் அந்த அந்தகனுக்கு மணற்றியை பரிசாக வழங்கவே அவனது யாழ்பாடி என்று பெயர் பிற்காலத்தில் யாழ்ப்பாணம் என வழங்கப்பெற்றது என கூறப்படுகிறது. இந்த அந்தகன் மீட்டிய யாழ் என்பது இந்தியாவை ஆட்சி செய்த அக்பர் காலத்து தான்சேன் என்ற அந்தக இசைவாணனையும் நினைவுபடுத்துகிறது. 

இவற்றை நோக்கும்போது, எமது யாழ்ப்பாணம், முன்னைய சமணச்சாயல் கொண்ட ஊராக இருந்திருக்கலாமா என்பதும் எனது ஆய்வாகும். 

சமணர்களின் ஒரு பிரிவினர் இருந்த பிரதேசமே “யாழ்ப்பாணம்” என வழங்கப்பட்டமையாகலாம்  என மேற்படி எனது முன்னைய “உலகவேதமும் புனிதஞானியும்” எனும் நூலிலே சுட்டிக்காட்டியுள்ளேன்.

மொனியர் வில்லியம் என்ற ஐரோப்பிய அறிஞர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியில் சமண சுவேதம்பரர்களின் ஒரு பிரிவினர் யாபனியர் என அழைக்கப்பெற்றனர் எனவும், அவர்கள் சமண முனிவரான உமாஸ்வதி எழுதிய தத்துவார்த்த சூத்திரவழி வழிபாடு இயற்றும் யாபன பிரிவினர் எனவும் கூறியிருப்பது யாழ்ப்பாணம் பிறந்த வரலாற்றை மாறுபட கூறுவதாக ஏற்கலாமா? 

அத்துடன் யாழ்ப்பாணத்தில் தாவர உணவு புசிப்பவர்கள் அந்த தாவர உணவை ஆருகதக்கறி எனக் கூறி வந்தனர். ஆருகதர் என்பது அருகத் என்பதாக சமணத்தை குறிக்கும். இவர்கள் தவிர தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய உறவுகளுக்கு வருவோம். அவர்களும் தமது வழிபாட்டில் சமத்துவ சிந்தையுடன் தமிழரை ஒன்றுபடுத்தினர். 

“காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று  பாடிய இஸ்லாமிய சித்தர்கள் செத்தும் பிழைத்த சீதக்காதி, உமறுப் புலவர் முதலான இஸ்லாமியத் தமிழர்கள் தமிழைப் பரிசுத்தப்படுத்தியவர்களே. 

 பிறைநோன்புடன் அரபிய மக்காவில் உலகெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஒன்று கூடும்போது, அவர்கள் அணியும் வேட்டி சால்வை முறைமை தமிழ் இந்துக்களின் கலாசார ஆடையை ஒத்த முறைமையைக் காண்பிக்கிறது. 

இவ்வாறு அவர்களையும் உள்வாங்கியபடி ஐரோப்பிய கொலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம் தழுவிய தமிழர்களும், வைதிக ஆதிக்கம் தலைதூக்கிய பின்னர் முன்பிருந்த சமண, பௌத்தர்களை வைதிகம் சாதியவழி கீழ் மக்கள் ஆக்கியதுடன் இஸ்லாத்திலும் அவர்கள் இணைந்து சமத்துவம் காத்ததையும் மதமாற்றம் பெற்றதையும் வரலாறுகளாய் ஏற்போம்” என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47