இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei  இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் பங்காளராக மாறும் வகையில் இலங்கை கிரிக்கட் சபையுடன் பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்  அனுசரணையானது, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது என அனைத்து வகையான ஆட்டங்களின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் தேசிய மட்டத்திலான அணிகளை உள்ளடக்கியுள்ளது. 

நாடளாவியரீதியில் ரசிகர்களைக் கொண்டுள்ள இலங்கையின் மிகவும் பிரபலமான விளையாட்டான கிரிக்கட்டிற்கு Huawei அனுசரணையளிக்க முன்வந்துள்ளமை, உள்நாட்டு விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் வர்த்தக நாமத்தின் பிரபலபத்தை மேலும் மேம்படுத்தும்.

Huawei Technologies Lanka Co., (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங் மற்றும் இலங்கை கிரிக்கட் சபையின் தலைமை அதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான  திலங்க சுமதிபால ஆகியோருக்கிடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பரிமாறப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பங்குடமை தொடர்பில் Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங் கருத்து வெளியிடுகையில்,

“தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனர் மற்றும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமம் என இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கு ஆதரவளிக்கும் எமது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உதவும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது”. 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,“கனவுகளின் வலிமை மீது நம்பிக்கை கொண்டுள்ள சமூகங்களுக்கு அவற்றை நனவாக்கிக் கொள்ள Huawei தொடர்ந்தும் உதவி வருகின்றது. வர்த்தகநாமம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவு அதிகரித்துச் செல்கின்றமைக்கு மத்தியில், உலகெங்கிலும் வேறுபட்ட கலாச்சார பின்னணிகளைக் கொண்டுள்ள, எதிர்கால வாடிக்கையாளர்களை Huawei மென்மேலும் உள்ளீர்த்து வருகின்றது. இத்தகைய செயற்பாடுகளின் மூலமாக, தனது பங்காளர்களுடன் கூட்டாக இணைந்து வெற்றி உணர்வை முன்னெடுக்கவும், உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் மேம்பட்ட வகையில் தொடர்பாடலை முன்னெடுக்கவும் உலகளாவிய அனுசரணையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு Huawei, திட்டமிட்டுள்ளது,” என்று கூறினார்.

மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் பாரிய வளர்ச்சி கண்டுள்ள ஒரு வர்த்தக நாமம் என்ற வகையில், கடந்த ஆண்டின் முற்பகுதியில் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத் தூதுவராக, தொழில்சார் உதைபந்தாட்ட நட்சத்திரமான லயனல் மெஸ்ஸியை Huawei நியமனம் செய்திருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையுடன் Huawei கொண்டுள்ள உறவுமுறையானது 2014 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமயத்தில் ஸ்மார்ட்போன் முன்னோடி நிறுவனம் தனது அனுசரணையை வழங்கியிருந்தது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதிலும், ஸ்மார்ட் சாதனங்களின் வர்த்தகநாமம் என்ற வகையிலும் சர்வதேசரீதியாக முன்னிலை வகித்து வருகின்ற Huawei, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஓசானியா பிராந்தியங்களின் மத்தியில் பல நாடுகளுக்கு அனுசரணையளித்து வருகின்றது. விளையாட்டு அணிகள் மற்றும் ரசிகர்கள் என ஒவ்வொரு விளையாட்டையும் நேசிக்கும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப இந்த அணுகுமுறை உதவுகின்றது.

சர்வதேசரீதியாக முன்னிலை வகிக்கும் ஒரு வர்த்தக நாமம் என்ற வகையில், பல்வேறுபட்ட பங்குடமைகளின் கீழ் பல்வேறு விளையாட்டுக்களுக்கு Huawei அணுசரனையளித்து வருகின்றது. ஆர்சனல் உதைபந்தாட்டக் கழகம், AC Milan மற்றும் IPL போட்டிகளில் Royal Challengers Bangalore கிரிக்கட் அணி போன்றவற்றுடனான பங்குடமைகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. Huawei அண்மையில் Washington Redskins NFL அணிக்கு அனுசரணையை வழங்கி முதன்முறையாக அமெரிக்க விளையாட்டுக் கழகம் ஒன்றுடன் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளதுடன், 2012 ஆம் ஆண்டு முதலாக தேசிய Rugby League போட்டிகளில் Canberra Raiders அணிக்கு அனுசரணையளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.