மோடியின் கொழும்பு விஜயம் உறவுகளை மேம்படுத்தவும் தகராறுகளுக்கு தீர்வினைக் காணவும் உதவ வேண்டும்

08 Apr, 2025 | 12:53 PM
image

2019ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் (ஏப்ரல் 4 - 6) அதனுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் காட்சிகளுக்கு அப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை வெளிக்காட்டியிருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதுடில்லியுடனான உறவுகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு தலைவர்களுக்கு இலங்கை வழங்குகின்ற அதியுயர் கௌரவ விருதான 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' மோடிக்கு வழங்கப்பட்டமை, இரு தரப்பு உறவுகளில் முதல் தடவையாக செய்யப்பட்டிருப்பதாக வர்ணிக்கப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகியவை உறவுகளை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும் அக்கறையை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. 

2024 ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி, அதற்கு இரு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகியவற்றை தொடர்ந்து ஜே.வி.பி. ஆட்சியதிகாரத்துக்கு வந்ததை அடுத்து  (ஜே.வி.பி.யின் இந்திய விரோத கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது) இந்தியாவுடனான உறவுகள் நட்பார்வம் இல்லாமல் - கண்டிப்பாக முறைப்படியானதாக மாத்திரமே இருக்கும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. புதுடில்லியின் பாதுகாப்பு அக்கறைகளை கொழும்பு கருத்தூன்றிய முறையில் கவனத்தில் எடுக்காமல் போகலாம் என்றோர் அச்சமும் இருந்தது.

ஆனால், இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் எதிராக இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்தப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற தனது நாட்டின் நீண்டகால நிலைப்பாட்டை திசாநாயக்க மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. "இரு நாடுகளினதும் பாதுகாப்பு பின்னிப் பிணைந்ததாகவும் பரஸ்பரம் தங்கியிருப்பதாகவும்"  கூறியதன் மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னால் உள்ள காரண காரிய அடிப்படையை மோடி தெளிவாக உணர்த்தினார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை பாதுகாப்புத் துறையில் குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை விதிமுறைப்படுத்தியிருக்கக்கூடும் என்ற போதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை பொறுத்தவரை அக்கறையுடன் செயற்படுவதில் உண்மையான நாட்டம் இருக்கிறது என்பதை நிரூபிக்கவேண்டியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுத்ததேயாகும். ஆனால், திருகோணமலை துறைமுகத்தையோ அல்லது இலங்கையின் வேறு எந்த துறைமுகத்தையுமோ மூன்றாவது நாடு ஒன்று இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று 1987ஆம் ஆண்டில் காணப்பட்ட புரிந்துணர்வு இந்தியாவின் ஐயுறவுகளை அகற்றுவதற்கு உதவவில்லை என்பதை இலங்கை நிச்சயமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு முக்கியமானதாக இருந்துவரும் - நீண்டகாலமாக தொல்லை தந்து கொண்டிருக்கின்ற மீனவர் பிரச்சினை மோடியின் கொழும்பு விஜயத்தின்போது விரிவாக ஆராயப்பட்டிருப்பது நல்லதோர் அறிகுறியாகும். ஆனால், இரு நாடுகளினதும் மீனவர் சமூகங்களுக்கு இடையில் அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு மோடியின் விஜயம் வழிவகுக்க வேண்டும்.

அண்மையில் பாக்கு நீரிணையின் இரு தரப்புகளிலும் உள்ள மீனவர்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். அந்த சந்திப்பில் ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டுமானால், தொடர்ந்து இன்னொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். நெகிழ்வுத்தன்மையான ஓர் அணுகுமுறை நிலைபேறான தீர்வொன்றைக் காண்பதற்கு உதவும். 

மோடியின் இலங்கை விஜயத்தில் இன்னொரு முக்கிய விளைவு அவருடனான சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்  தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சியில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை  அங்கீகரித்துக்கொண்டு இந்தியாவின்  "நியாயபூர்வமான" ஈடுபாட்டுக்கு அவர்கள் விடுத்த கோரிக்கையாகும்.

ஒரு அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கையாக மாகாண சபைகளை நிறுவுவதற்கு வழிவகுத்த சமாதான உடன்படிக்கையை இவற்றில் பல கட்சிகள் முழுமையாக ஆதரிக்கவில்லை என்ற விமர்சனம் இலங்கையிலும் கூட இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தாராளமான பொருளாதார உதவிகளை வழங்கக்கூடிய நிலையில் இருக்கும் புதுடில்லி நடுநிலையான ஓர் அவதானி என்ற பாத்திரத்தை வகித்து இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக கருத்தொருமிப்பைக் காணவேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

(தி இந்து, ஆசிரிய தலையங்கம், 8 ஏப்ரல் 2025) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த தேர்தல்?

2025-06-16 17:47:31
news-image

இலங்கை கடல் பரப்பில் கரையொதுங்குவது என்ன?...

2025-06-16 16:29:56
news-image

முட்டாள்களாக்கப்படும் தமிழ் மக்கள்

2025-06-16 10:15:35
news-image

ஜனாதிபதியின்  கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும்...

2025-06-15 15:56:50
news-image

அரசியலமைப்புப் பேரவையில் மீளப்பெறப்பட்ட அநுரவின் பரிந்துரை

2025-06-15 18:29:30
news-image

இலங்கையை கட்டிப் போட்ட இந்தியா

2025-06-15 16:07:02
news-image

மக்கள் காங்கிரஸ், பிரமுகர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதா?

2025-06-15 16:04:36
news-image

இராணுவ மயமாக்கப்படும் பொலிஸ்

2025-06-15 15:14:32
news-image

நிழல் அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள்

2025-06-15 15:50:31
news-image

ஜி7 எனும் சர்வதேச கூட்டு

2025-06-15 15:50:03
news-image

நீண்டகால திட்டமிடலை வேண்டிநிற்கும் முஸ்லிம்கள்

2025-06-15 14:16:55
news-image

இஸ்ரேலின் போர் வெறி : வலதுசாரி...

2025-06-15 14:16:24