தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்தி வருகின்றது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் எனவும் அதுவரையில் மாகாணசபை முறைமையை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலின்போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் இந்த வாக்குறுதியினை தேசிய மக்கள் சக்தி வழங்கியிருந்தது. தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று ஆறு மாதங்கள் கடந்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் பதவியேற்று நான்கு மாதங்கள் கடந்து விட்டன. ஆனாலும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கை குறித்தோ எந்தவித அக்கறையும் அற்ற நிலையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியல் தீர்வு காணப்படும் வரையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்படும் என்ற உறுதி மொழியைக்கூட அரசாங்கம் தற்போது மீறும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றது. மாகாணசபை தேர்தல்களை நடத்தும் விவகாரத்திலும் அரசாங்கம் இழுத்தடிப்பு போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் இடம்பெறவுள்ள நிலையில் வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளை அரசாங்கத் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னர் இவ்வருடம் வேறு எந்தத் தேர்தலும் இடம்பெறாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் எனினும் இவ்வருடம் அந்தத் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனாலேயே இத்தகையத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறுகையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த வருடத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றோம். ஆகையால் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சர்கள் இருவரது கருத்துக்களிலும் முரண்பாடான நிலைமை தெரிகின்றது. இந்த வருடம் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது என்று நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகின்ற நிலையில் வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியிருக்கின்றார்.
இதேபோன்றுதான் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திலும் அரசாங்கமானது உரியவகையில் செயற்படவில்லை. புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த டிசம்பர் மாதமளவில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மூன்று நான்கு வருடங்களுக்குள் புதிய அரசியலமைப்புக்கான இறுதி யோசனையை பொதுமக்களிடம் கையளிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இதேபோன்றே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும் புதிய அரசியலமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்றும் அதற்கான பூர்வாங்க பேச்சுக்கள் இடம்பெறுவதுடன் புதிய குழுக்களுக்கும் நியமிக்கப்படும் எனவும் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
புதிய அரசியலமைப்பு விடயத்திலும் அரசாங்கத்திடம் நிலையான கொள்கை இல்லை என்பது இந்த கருத்துக்களிலிருந்து தெரிகின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்வரை மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியும் தற்போது பிசுபிசுத்துள்ளதாகவே தெரிகின்றது. உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கான தேர்தல் இந்த வருடம் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. ஆனால், தற்போது அமைச்சர்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது அந்தத் தேர்தல் பிற்போடப்படும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸநாயக்க சிலதினங்களுக்கு முன்னர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். மாகாணசபை தேர்தல் இந்த வருடம் நடைபெறாது என்றால் எப்போது நடைபெறும் என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும்.
பழைய தேர்தல் முறைமையின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயன்று வருகின்றமையானது அரசாங்கமானது கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குகின்ற செயற்பாட்டையே எடுத்துக்காட்டுகின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த ஏழு வருட காலமாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாகாணசபை தேர்தல் முறைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் எல்லை மீள்நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாததையடுத்து அந்த முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது.
இதனால் தேர்தலை நடத்த முடியாத சட்ட சிக்கல் உருவாகியிருந்தது. இதனைத் தீர்க்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தார். அந்தப் பிரேரணையை அமுல்படுத்துவதன் மூலம் பழைய முறையில் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
இதற்கிணங்கவே தேர்தல்களை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருந்தது. ஆனால், தற்போது சில சட்ட திட்டங்களை சுட்டிக்காட்டி அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்குமுனைவதாகவே தெரிகின்றது.
இலங்கையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைமைகளினால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனாலும் மாகாணசபை முறைமையினை அழுல்படுத்த வேண்டுமானால் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும். இந்த விடயத்தில் வெறும் சாக்குப் போக்குக்களை கூறி கால நேரத்தை அரசாங்கம் வீணாக்கக்கூடாது.
இந்த விடயத்தில் இந்தியாவும் அழுத்தங்களை கொடுக்கவேண்டும். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர். இன, மத பேதமற்றவகையில் இந்த ஆதரவு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு குறித்தும் கலந்துரையாடல்களை நடத்த முடியும். அதன் மூலமாக அரசியல் தீர்வுக்கான அணுகுமுறையை சிந்திக்க முடியும்.
இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் இந்தவிடயம் தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளதாகவே தெரிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் இனியாவது சிந்திக்கவேண்டும். நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினை உட்பட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டு விட்டே புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என அரசாங்கத்தரப்பு கூறுவது தவறான செயற்பாடாகவே உள்ளது.
எனவே, பொருளாதார பிரச்சினை உட்பட்ட விவகாரங்களுக்கும் அரசியல் தீர்வு குறித்த விடயத்துக்கும் சமாந்தரமாக இடமளிக்கப்பட வேண்டும். இவ்வாறு செயற்பட்டால்தான் நாட்டின் எதிர்காலம் சுபீட்சமடையும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM