91ஆவது புனிதர்களின் சமர் வெற்றிதோல்வியின்றி முடிவு

Published By: Vishnu

05 Apr, 2025 | 07:52 PM
image

(நெவில் அன்தனி)

மருதானை புனித சூசையப்பர் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் அணிக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட 91ஆவது புனிதர்களின் சமர் (மாபெரும் கிரிக்கெட் போட்டி) இன்றைய தினம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

நினைத்துப்பார்க்க முடியாத 19 ஓவர்களில் 172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய புனித சூசையப்பர் 13 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

புனிதர்களுக்கு இடையிலான கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக மூன்று நாள் போட்டியாக நடத்தப்பட்ட இந்த வருடப் போட்டி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.

இரண்டு அணிகளும் முதலாவது இன்னிங்ஸில் சம அளவில் மோதிக்கொண்டதுடன் புனித சூசையப்பர் முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டதால் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 3 ஓட்டங்களால் மாத்திரம் புனித பேதுருவானவர் முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த புனித சூசையப்பர் 7 விக்கெட்களை இழந்து 240 ஓட்ட்ஙகளைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் புனித பேதுருவானவர் அணி பிரகாசிக்கத் தவறியதுடன் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்தப் போட்டியில் புனித பேதுருவானவரின் முதலாவது இன்னிங்ஸில் 9ஆம் இலக்க வீரர் லஷ்மிக்க பெரேரா அரைச் சதம் குவித்ததுடன் கடைசி விக்கெட்டில் தரின் சென்விதுவுடன் (2 ஆ.இ.) 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

புனித சூசையப்பரின் முதல் இன்னிங்ஸில் 5ஆம் இலக்க வீரர் யெனுல தேவ்துச 86 ஓட்டங்களைப் பெற்றார்.

புனித பேதுருவானரின் இரண்டாவது இன்னிங்ஸில் நேதன் டேவிட் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

புனித சூசையப்பர் பந்துவீச்சில் மானச மதுபாஷன 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்த வீரர்களே இந்த வருட புனிதர்களின் சமரில் திறமையாக விளையாடினர்.

விருதுகள்:

சிறந்த களத்தடுப்பாளர்: சேனுஜ வக்குனேகொட (புனித சூசையப்பர்)

சிறந்த பந்துவீச்சாளர்: மானச மதுபாஷன (புனித சூசையப்பர்)

சிறந்த துடுப்பாட்ட வீரர்: நேதன் டேவிட் (புனித பேதுருவானவர்)

சகலதுறை வீரர்: லஷ்மிக்க பெரேரா (புனித பேதுருவானவர்)

ஆட்டநாயகன்: யெனுல தேவ்துச (புனித சூசையப்பர்)  

எண்ணிக்கை சுருக்கம்

புனித பேதுருவானவர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 243 (லஷ்மிக்க பெரேரா 58, டிலன தம்சார 44, அசதிச டி சில்வா 38, நேதன் டேவிட் 29, மானச மதுபாஷன 77 - 3 விக்., டேமியன் டி சில்வா 48 - 2 விக்., நுஷான் பெரேரா 50 - 2 விக்., யெனுல தேவ்துச 58 - 2 விக்.)

புனித சூசையப்பர் 240 7 விக். டிக் (யெனுல தேவ்துச 86, சேனுஜ வக்குனேகொட 48, அவீஷ சமாஷ் 32, ஜொஷுவா செபெஸ்டியன் 80 - 4 விக்., லஷ்மிக்க பெரேரா 64 - 3 விக்.)

புனித பேதுருவானவர் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 168 (நேதன் டேவிட 53, ஜேசன் பெர்னாண்டோ 45, எனோஸ் பீட்டர்சன் 34, மானச மதுபாஷன 57 - 5 விக்., நுஷான் பெரேரா 35 - 2 விக்., யெனுல தேவ்துச 49 - 2 விக்.)

புனித சூசையப்பர் 2ஆவது இன்: வெற்றி இலக்கு 172 ஓட்டங்கள் - ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 70 - 2 விக். (அபிஷேக் ஜயவீர 31 ஆ.இ., அவீஷ சமாஷ் 20, யெனுல தேவ்துச 14 ஆ.இ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right