விலங்குகளுடன் வாழ்ந்து விலங்குகளாக மாறிய மனிதர்கள்…!

Published By: Digital Desk 2

05 Apr, 2025 | 11:56 AM
image

‘த ஜங்கிள் புக்’ புத்தகம் பற்றி அறியாதவர் இருக்க வாய்ப்பில்லை. அந்தளவு உலகப் பிரசித்தி பெற்ற புத்தகம் அது. 

ஆங்கில எழுத்தாளரான, ரட்யார்ட் கிப்ளிங்க் எழுதிய இப்புத்தகமானது, ஓநாய்களால் வளர்க்கப்படும் மௌக்லி எனும் சிறுவனைப் பற்றியது. 

இப்புத்தகத்தை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. அவை, பார்க்கப் பார்க்க அலுக்காத ஓர் அற்புதம்.

இக்கதையின் கருப்பொருள், காட்டில் ஓநாய் கூட்டத்துடன் வாழும் ஒரு சிறுவனைப் பற்றியது. விலங்குகளோடு விலங்காக வாழும் அவன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, சுவாரஷ்யமாகவும், நாம் இரசிக்கும் வகையிலும் தந்திருப்பது தான், கதாசிரியரின் வெற்றியே.

இனி விடயத்துக்கு வருவோம். உண்மையில், விலங்குகளோடு வாழ்ந்த மனிதர்கள் இவ்வுலகில் இருக்க முடியுமா என்று கேட்டால்? அதற்கு பதில் ஆம். இருந்திருக்கின்றார்கள். 

மௌக்லியைப் போல ஓநாய்களோ, வேறு விலங்குகளோ ஒரு குழந்தையை வளர்த்திருக்கின்றனவா? அது சாத்தியமா?

உலகம் முழுவதும் தேடிப் பார்த்தால் அப்படிச் சில நிகழ்வுகள் உண்மையிலேயே நடந்திருக்கின்றன. ஓநாய்கள் மட்டுமல்ல நாய், ஆடு, கரடி, குரங்கு போன்ற விலங்குகள் மனிதக் குழந்தைகளுக்கு ஆதரவளித்து, வளர்ப்புப் பெற்றோராக இருந்திருக்கின்றன. 

1. ஓநாய் மனிதன்

1867ஆம் ஆண்டு, இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷார் மாவட்டதிலுள்ள ஓர் அடர்ந்த காட்டினுள் வேட்டையர்கள் சிலர் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு ஓநாய் கூட்டம் அவர்களது பாதையை கடக்கிறது.

அந்த கூட்டத்தில் விநோதமான வகையில், நான்கு கால்களில் ஒரு உருவம் நடந்து போவதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட, நொடிப்பொழுதில் அந்த ஓநாய் கூட்டம் மறைந்துவிடுகிறது.

அந்த விநோத விலங்கை வேட்டையாடும் நோக்கத்தில் இவர்களும் ஓநாய் கூட்டத்தின் காலடி பாதையை பின்தொடர, அந்த கூட்டம் ஒரு குகையை சென்றடைந்ததை அறிகின்றனர்.

குகையின் வாயிலில் தீயை மூட்ட, புகையினால் உள்ளிருந்த ஓநாய் கூட்டம் திசைக்கு ஒன்று சிதற, அப்போது தான் அந்த விநோத உருவம் விலங்கல்ல, அது ஒரு 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் என்று தெரியவருகிறது.

பிறகு அந்த ஒநாய்க் கூட்டத்தை வேட்டையாடி விரட்டியடித்து, அந்த விநோத சிறுவனை, நகருக்குள் அழைத்து வந்தனர். அவன், ஆக்ராவிலுள்ள சிகாந்த்ரா அநாதை இல்லத்தில் ஒப்படைக்கப்படுகிறான்.

சனிக்கிழமை இல்லத்திற்கு வந்ததால், தினா சனிச்சார் என்று அங்கிருந்த பாதிரியாரால் ஞானஸ்தானம் செய்யப்பட்டு பெயர்சூட்டப்பட்டது.

அதுவரை மனிதர்களையே பார்க்காத அந்த சிறுவனுக்கு அங்கிருந்த சூழல் முற்றிலும் புதுமையாக இருந்தது. நான்கு கால்களில் நடந்து, பற்களை கூர்மையாக்கிக் கொண்டு என அவன் மனிதர்களுடன் இருந்தாலும் ஓநாயை போலவே நடந்து கொண்டான்.

அதே போல் சமைத்த உணவை அளித்தபோதும், அதை மிருகத்தை போல் நுகர்ந்து பார்த்து, அவற்றை தள்ளி விட்டு பச்சையாக இறைச்சியை உண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்களால் நிற்க கற்றுக் கொண்டாலும் நான்கு கால்களில் நடப்பதையே அவன் விரும்பினான்.  அவனுக்கு மனிதர்களின் மொழி புரியாததால் அவன் எது தேவையாக இருந்தாலும் ஊளையிட்டே கேட்டு வாங்கிக் கொண்டான்.

காலப்போக்கில் அவன், உணவருந்த, ஆடை அணிய கற்றுக் கொண்டதாக ஒரு சில குறிப்புக்கள் கூறுகின்றன. இருப்பினும் நம்மை போல் சாதாரண மனிதனாக அவனால் கடைசி வரை இருக்க முடியவில்லை. கடைசி வரை அவனால் மனித மொழி பேச முடியவில்லை. அவன் மனித இனத்திடம் கற்றுக்கொண்ட ஒரே பழக்கம், புகைப்பழக்கம்.

புகைப்பழக்கத்துக்கு ஆளான அவன், தன்னுடைய முப்பத்தி ஐந்தாவது வயதில் காசநோயால் இறந்து போனான்.

இவரது வாழ்க்கை குறிப்பை அடிப்படையாய் வைத்து தான், ஜங்கிள் புக் புத்தகத்தை எழுதியதாக நம்பப்படுகிறது.

2. நாய்ப்பெண்

1991ஆம் ஆண்டு உக்ரைனில் 7 வயதான சிறுமியொருத்தி, காட்டில் நாய்களுக்கு நடுவே கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டாள். தேடிப்பார்த்தலில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் கைவிடப்பட்ட அந்த சிறுமி, நாய்களோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறாள் என்று கண்டறியப்பட்டது.

ஆனால், அந்தச் சிறுமியால் பேசவே முடியவில்லை. அவள், நாய்களைப் போலவே தன்னைச் சுத்தம் செய்து கொண்டாள். நாய்களைப் போலவே பல செயல்களையும் செய்தாள். அவளின் பெயர் ஒக்ஸனா. இருப்பினும், பெரும்பாலானோர் அவளை ‘நாய்ப் பெண்’ என்றே அழைத்தார்கள்.

உறைய வைக்கும் குளிரிலிருந்து ஒக்ஸனாவை நாய்கள் காப்பாற்றியிருக்கின்றன. உணவு கொடுத்திருக்கின்றன. அவளை 5 ஆண்டுகள் வளர்த்திருக்கின்றன.

3.நாய் சிறுவன்

1998ஆம் ஆண்டு மொஸ்கோ காவலர்களால் இவான் என்ற சிறுவன் மீட்கப்பட்டான். பிச்சை எடுத்து வாழ்ந்த அவன், 2 ஆண்டுகள் நாய்களுடன் வசித்தவன். அவனுக்கு மனிதர்கள் யாரிடமும் பழக்கம் இல்லை.

நாய்கள்தான் கடும் குளிர்காலத்தில், அவன் மீது படுத்துக் குளிரிலிருந்து அவனைக் காப்பாற்றியிருக்கின்றன. அவனைத் தொந்தரவு செய்தவர்களை விரட்டி அடித்திருக்கின்றன. அந்த சிறுவனையும் ‘நாய் சிறுவன்’ என்றே அனைவரும் அழைத்தார்கள். 

ஒக்ஸனாவின் செயல்களில் பெரும்பாலும் நாய்களின் பண்புகள் இருந்தன. ஆனால் இவான் நகரத்தில் வசித்ததால் மனிதப் பண்புகளுடன் இருந்தான்.

அதேசமயம், ஒக்ஸனாவும் இவானும் தங்கள் பாதிப்பிலிருந்து விலகி, பிற்காலத்தில் இயல்பான மனிதர்களாக மாறினார்கள். இவான் இராணுவத்தில் சேர்ந்தார். ஒக்ஸனா விலங்குகள் பண்ணையில் வேலை செய்தார்.

4. குரங்கு மனிதன்

1988ஆம் ஆண்டு உகாண்டாவில் 6 வயது சிறுவன் ஜோன் ஸெபுன்யா காட்டில் குரங்குகளோடு வசித்தபோது கண்டறியப்பட்டான். அவனது அம்மா இறந்த பிறகு வழி தவறி காட்டில் தொலைந்த அவனை, அடுத்த 3 ஆண்டுகள் குரங்குகளே பராமரித்து வந்துள்ளன.

குறிப்பாக, அவனுடைய கதை, நிஜமான மௌக்லி, டார்ஸன் போன்றது. குரங்குகள் அவனுக்கு உணவு ஊட்டிவிட்டுள்ளன, மரத்துக்கு மரம் தாவும் வித்தையைக் கற்றுக் கொடுத்துள்ளன. மற்ற விலங்குகளிடமிருந்து அவனைக் காப்பாற்றியிருக்கின்றன. அவனுடன் சேர்ந்து விளையாடியிருக்கின்றன. அத்துடன், குரங்குகளைப் போலவே அவனுடைய தோல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஜோன் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான். அவனுக்கு மனிதர்களின் பழக்கங்களைக் கற்றுக் கொள்வது மிகச் சிரமமாக இருந்தது. மறுவாழ்வு மையத்தில் வளர்ந்த ஜோன், 32 வயதில் இயல்பான மனிதனாக மாறினார். 

5. நாய் காப்பாற்றிய பெண்

கடந்த 2014ஆம் ஆண்டு, ரஷ்யாவின் யாகுடியா கிராமத்தில் வசித்த 4 வயது கரினா சிகிடோவா எனும் சிறுமி, தன் நாய் நைடாவுடன் அருகில் இருந்த காட்டுக்குள் சென்றிருந்தாள். திரும்பி வர வழி தெரியவில்லை. ஓநாய்களும் கரடிகளும் வசிக்கும் அந்தக் காட்டில், கரினாவைக் காப்பாற்றியது நாய்தான்.

இரவில் உறைய வைக்கும் குளிர். பெரிய மரத்தின் வேர்களுக்குள் கரினாவைப் படுக்க வைத்து, அவள் மீது நாய் படுத்துக் கொண்டது. இதனால் கரினா குளிரிலிருந்து காப்பாற்றப்பட்டாள். 

பெர்ரி பழங்களைச் சாப்பிட்டு, ஓடையில் நீர் அருந்தி, 9 நாட்களைக் கடத்தினாள். இந்நிலையில், ஒரு காவல்படை கரினாவை மீட்டது. சில மாதங்கள் கரினா மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.

இப்படி விலங்குகளால் வளர்க்கப்பட்ட மனிதர்கள் பற்றி, பல குறிப்புகள் வரலாற்றில் பொதிந்துள்ளன.

இருப்பினும், விலங்குகள் தங்களுக்கு இருக்கும் அறிவைக் கொண்டு குழந்தைகளை வளர்க்கும்போது அத்தனை பாதுகாப்பாகவும் முறையாகவும் இருக்காது. சிந்திப்பது, செயல்படுவது, பேசுவது, சாப்பிடுவது என்று அனைத்துமே விலங்கிலிருந்து வித்தியாசப்படுகிறான் மனிதன்.

ஆகவே, விலங்குகளால் மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடிகிறதே தவிர, அவர்களை மனிதர்களாக வளர்க்க இயலாது. விலங்குகள் வளர்த்த குழந்தைகள் ஒவ்வொன்றுமே, மனித இயல்புகளோடு இயல்பாக மாறுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்