விஜய் நடிக்கும் 61 ஆவது படத்திற்கு "மெர்சல்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ள படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 100 ஆவது படமாகும். படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்து வந்தனர். 

படத்தின் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலும், விஜய்யின் தோற்றத்தைத் தெரிந்து கொள்வதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய்யின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், டுவிட்டரில் அடிக்கடி டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை இன்று அறிவித்துள்ளனர். படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு காளைகளின் பின்னணியில் கிராமத்து ரோலில் விஜய் இருக்கிறார்.