மக்கா ஹரம் ரிபில் நடைபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இலங்கை முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தார். 

சவூதி அரேபியாவின் மன்னருடைய சிரேஸ்ட ஆலோசகர் அய்க் அந்நாசர் காலித் அல் சித்ரி தலைமையில் நேற்று மக்கா ஹரம் ரிபில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பல்வேறு நாடுகளில் இருந்து உம்ரா கடமைகளை நிறைவேற்ற மக்கா சென்றுள்ள அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இலங்கை சார்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான தூதுக்குழுவில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் பௌசுல் ஜிப்ரி, மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன்போது, சர்வதேச தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதுடன், அவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் நாடுகள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன், சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.