குழிகளின் நாயகன் - `Man of the Hole' 

02 Apr, 2025 | 05:48 PM
image

ஒரே ஒரு மனிதனைக் காப்பதற்காக, கிட்டத்தட்ட 19,940 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது என்று கூறினால் நம்பமுடிகிறதா?

ஆம்… அப்படியொரு சம்பவம் அமேசான் காட்டின் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதைப் பற்றியே இங்கு பார்க்கப்போகிறோம். 

நாளுக்கு நாள் என்னதான் உலகம் நவீனமயமாக்கப்பட்டு வந்தபோதும் கூட, சாதாரண பொதுமக்கள் நுழைய முடியாத, பொது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட சில இடங்களும், பழைமை மாறா பழங்குடியினர் பற்றியும் அவ்வப்போது தெரியவந்துகொண்டே இருக்கின்றன. 

இத்தகைய சில குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்துவரும் பழங்குடியினர், பிற மனிதர்களிடம் இருந்து விலகியே வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் மழைக்காடுகளில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. 

இவர்களில், ஒவ்வோர் இனத்திலும் இரண்டு அல்லது மூன்று மனிதர்களில் இருந்து ஐம்பது பேர் வரை வாழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இங்கே கிடைக்கும் கனிம வளங்கள், மரங்கள், சுற்றுலாத்தலங்கள், விவசாய விரிவாக்கம் என பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் வரை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு காடுகள் அழிக்கப்படும்போது, அதை எதிர்த்துப் போராடிய பழங்குடியினர் பலர், ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டமையும் வரலாற்றில் பொதிந்துள்ளன.

இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக சில அமைப்புகளும் தோன்றியுள்ளன. அப்படி, பழங்குடியினரை காப்பாற்றுவதற்காக போராடிய அமைப்புகளில் ஒன்று தான் FUNAI (National Indian Foundation).

இந்த அமைப்பு, பழங்குடியின மக்களை காப்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவர், ரியலி பிரான்சிஸ்கடோ என்பவர், சுமார் 30 வருடங்களுக்கு முன், இம்மக்களை கண்காணிக்க காடுகளுக்கு சென்றபோது, அவர்களால் கொல்லப்பட்டார்.

வெளியிலிருந்து வரும் மனிதர்களைக் கண்டு அஞ்சிய பழங்குடியின மக்கள் அவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் காடுகளை அழிப்பதற்காக மனித விலங்குகளால் கொல்லப்பட்டுள்ளனர். 

அப்படி, பிரேசில் - பொலிவியாவின் எல்லையான ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில் வசித்துவந்த ஒரு பழங்குடி மக்கள், காடழிப்பு மற்றும் இன்னோரன்ன காரணங்களால் மனிதரால் அழிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பழங்குடி குழுவினர் 1970இன் ஆரம்பத்தில் நிலத்தை விரிவுபடுத்த முயன்ற பண்ணையாளர்களால் அடித்து விரட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை தெரியவருகிறது.

இந்த கொலைவெறி தாக்குதலில் இறுதியாக உயிர்பிழைத்தவர்கள் 7 பேர் மட்டுமே. ஆனால், இவர்களும் 1995ஆம் ஆண்டு மீண்டும் தாக்கப்பட்டனர். அதில் 6 பேர் கொலை செய்யப்பட, 13 வயதான சிறுவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருந்தான்.

அந்த சிறுவனே பின்னர், `Man of the Hole' (குழிகளின் நாயகன்) என்று அறியப்படுகிறார். விலங்குகளை வேட்டையாடவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் அவர் வசித்த பகுதியில் வித்தியாசமான குழிகளைத் தோண்டி வைத்திருந்ததால், அவருக்கு இப்பெயர் வந்தது. இவர், கடந்த 26 ஆண்டுகளாக தனியே அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் திடீரென கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஃபுனாய் அமைப்பினரின் வலியுறுத்தலால், இம்மனிதனை காக்க, மேற்கூறிய பகுதி பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது, 1996ஆம் ஆண்டு முதல் பிரேசிலின் உள்நாட்டு விவகார ஏஜென்சியின் ஃபுனாய் முகவர்களால், இந்தக் குழிகளின் நாயகன், அரசின் சொந்த பாதுகாப்புக்காக கண்காணிக்கப்பட்டு வந்தார். 

அதைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் ஃபுனாய் உறுப்பினர்கள் காட்டில் ஒரே ஒரு முறை அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். 

இதற்கிடையே, இவர் இல்லாத நேரங்களில், உரிய அனுமதியுடன் புகைப்படம் எடுக்க இங்கு வந்தவர்கள், இவர் அறியாதவாறு பல இடங்களிலும் கெமராக்கள் வைத்து கண்காணித்து வந்தனர். 

இவ்வாறு கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்த இவர், திடீரென காணாமல் போனதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, அவர் சடலமாக மீட்கப்பட்டார். அங்கே வாழும் குவாக்கமாயா என்ற பறவையின் இறகுகள் விரிக்கப்பட்டு, அதன் மீது இவரது உடல் கிடந்தது. இது ஓர் இயற்கை மரணம் என்று கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் வெளியுலக மனிதர்கள் அவர்களின் இடங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியமையே என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், வனக்காவலர்களான இவர்கள் பல நாடுகளிலும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பது வலி நிறைந்த உண்மை! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்