ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கைரீதியான தீர்மானத்துக்கு வருதல் மற்றும் ஆசிரிய இடமாற்றங்களுக்காக சுயாதீனமான முறைமையை அமுல்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அண்மையில் நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அரசாங்க அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறைமை தொடர்பிலும் ஜனாதிபதி வினவினார். 

நிச்சயிக்கப்பட்டவாறு ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பம் கோரி, பரீட்சைகளை நடத்தி புதியவர்களை நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். 

அத்துடன் உள்ளுராட்சி நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கொழும்பில் நடைபெறும் கூட்டங்களுக்காக உள்ளுராட்சி நிறுவன அலுவலர்களை அழைக்கும் போது, அதற்காக நிச்சயிக்கப்பட்ட திகதிகளை ஒதுக்குவது தொடர்பில் அமைச்சரவையை தெளிவூட்டி தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

மாகாண சபைகளால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஏனைய சேவைகளை வினைத்திறனாகவும் உற்பத்தித்திறனாகவும் அமுல்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் சிறந்த உறவுகளைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். 

மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீடுகள் முழுமையாக வழங்கப்பட்டமை தொடர்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.