லண்டனிலுள்ள பள்ளிவாசலொன்றில்   தொழுகையை முடித்து விட்டுத் திரும்பி வந்தவர்கள் மீது நபரொருவர் தனது வெள்ளை வேனை மோதி நேற்று திங்கட்கிழமை அதி காலை  நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானதுடன்  10  பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பின்ஸ்பரி  பார்க் பள்ளிவாசலுக்கு அருகில் முஸ்லிம் நலம்புரி இல்லத்துக்கு  முன்பாக   சென்ற மக்கள் மீதே குறிப்பிட்ட நபர் தனது வேனை மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து 48  வயதான வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய வேன் சாரதி, ” நான் அனைத்து முஸ்லிம்களையும் கொல்லப் போகிறேன்.  நான் எனது பழிவாங்கலை நிறைவேற்றி விட்டேன்"  எனக் கூச்சலிட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 00.20  மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் பிராந்தியத்தித்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலை நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரா என்ற சற்தேகத்தில் அவரை மனநலம் தொடர்பான பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேற்படி தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில்,  

நகரிலுள்ள சமூகங்களின் - குறிப்பாக ரமழான் நோன்பை அனுஷ்டிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  மேலதிக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கொடூரமான தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தான் இத்தருணத்தில்  பிரார்த்திப்பதாக  அவர் தெரிவித்தார்.

"மான்செஸ்டர்,  வெஸ்ட்னிஸ்டர் மற்றும் லண்டன் பாலம் என்பவற்றில்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைப் போன்று குறிப்பிட்ட சமூகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ளதாக தோன்றும் இந்தத் தாக்குதல்  எமது சகிப்புத்தன்மை, சுதந்திரம் மற்றும் மரியாதை ஆகிய எமது அனைவரதும் பகிரப்பட்ட விழுமியங்கள் மீதான தாக்குதலாக உள்ளதாக  சாதிக் கான் கூறினார்.

 தனது வேனால் மோதி தாக்குதலை நடத்திய குறிப்பிட்ட நபர்  தப்பிச் செல்லும் முயற்சியில் வேனை விட்டு இறங்கியதாகவும் இதன்போது அவர் "நான் முஸ்லிம்களைக் கொல்ல விரும்புகிறேன். நான் முஸ்லிம்களை கொல்ல விரும்புகிறேன்"  என்று கூச்சலிட்டவாறு ஓடியதாகவும் சம்பவத்தை நரில் கண்ட ரஹ்மான் என்பவர் தெரிவித்தார்.

இதன்போது தான்  அந்நபரின் வயிற்றில் தாக்கி அவரை தடுமாறச் செய்ததாகவும் அதன் பின்னர் தானும் ஏனையவர்களும் இணைந்து  நிலத்தில்  வீழ்த்தி  மடக்கிப் பிடித்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

அது தொடர்பில் மேற்படி சம்பவத்தை நேரில் கண்ட  அப்துல் என்பவர் கூறுகையில்,  ' கொல்லுங்கள். நான் எனது .பணியை செய்து விட்டேன்"  என அந்நபர் சத்தமிட்டதாக தெரிவித்தார்.

அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த போது குறிப்பிட்ட பள்ளிவாசலின் இமாம் வெளியில் வந்து,  "அவரைத் தாக்க வேண்டாம். பொலிஸாரிடம் ஒப்படையுங்கள்" என  அவர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறிப்பிட்ட மத நம்பிக்கை  கொண்டவர்கள் மீதும் அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் சமூகங்கள் மீதுமான  தாக்குதலாக உள்ளதாக  பின்ஸ்பரி பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் மொஹமட் கொஸ்பார் கூறினார்.