(எம்.மனோசித்ரா)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது தொழிநுட்ப, வலுசக்தி, பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளுடனும் இணைப்புக்கள் வலுப்படுத்தப்படவுள்ளன. அதற்கமைய இருதரப்பு ஒத்துழைப்பு வரலாற்றின் மைல் கல்லாக அமையவுள்ள சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலைய திட்டத்தையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஷ்ரி தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அரசாங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் மீனவ சமூகங்களுக்கிடையிலான பேச்சுக்கள் என தீர்வுக்கான வழிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார்.
டில்லியில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயமானது பிரதமரின் முதலாவது விஜயமல்ல. மாறாக 4 முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இரு நாடுகளினதும் உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவமளித்துள்ளார். குறிப்பாக 2019ஆம் ஆண்டு இலங்கை விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.
ஏனெனில் அந்த கால கட்டத்தில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன. அப்போது நாட்டுக்கு விஜயம் செய்து இலங்கைக்கு தேவையான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார். அதேபோன்று தான் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகளின் போது முதலாவது பங்காளியாக இந்தியா தனது ஆதரவை வழங்கியது.
உதவிகள் வழங்குவதில் மாத்திரமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களுடன் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கியது. இலங்கை - இந்திய உறவு என்பது வரலாற்று நாகரிகத்தின் பிரிக்க முடியாத ஒன்றாகவுள்ளது. எனவே தான் அயலகத்துக்கு முதலிடம் என்ற இந்திய கொள்கையில் இலங்கை முதன்மை பெறுகின்றது.
பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தொழிநுட்ப, வலுசக்தி, பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளுடனும் இணைப்புக்களை வலுப்படுத்தவுள்ளார். ஐந்தாம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கொழும்பில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை இந்திய இருதரப்பு ஒத்துழைப்பு வரலாற்றின் மைல் கல்லாக அமையவுள்ள சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலைய திட்டத்தையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இலங்கையின் வலுசக்தி துறையை மேம்படுத்துவதில் சம்பூர் மின் நிலையம் முக்கிய பங்களிப்பை வழங்கும். அதேபோன்று இலங்கையின் வலுசக்தியைப் பாதுகாப்பதில் இந்தியாவின் பங்காளித்துவம் எப்போதும் இருக்கும்.
குறிப்பாக இலங்கையில் உத்தேசிக்கப்படுகின்ற வலுசக்தி மையம் தொடர்பான கலந்துரையாடல்களையும் பிரதமர் மோடி கொழும்பில் முன்னெடுப்பார். இதேவேளை கடன் மறுசீரமைப்புக்களில் இலங்கை குறிப்பிட்டளவு வெற்றியைக் கண்டுள்ளது. இன்னும் குறுகிய காலத்தில் மறுசீரமைப்புக்கள் இறுதிபடுத்தப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பயணத்தில் இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும்.
இதேவேளை பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை என்பது. இன்று நேற்று உருவானதொன்றல்ல. வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையில் மீன் பிடிப்பது தொடர்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கைதுகளும் இடம்பெறுகின்றன. பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் மீனவ சமூகங்களுக்கிடையிலான பேச்சுக்கள் என தீர்வுக்கான வழிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இரு நாட்டு தலைவர்களினதும் நிலைப்பாடாகும். அத்துடன் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கை விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. விஜயத்தின் இறுதி நாளான 6ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஒன்றாக அநுராதபுரத்துக்கு விஜயம் செய்து மஹா போதியில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM