போர்த்துக்கல்லில் பரவி வரும் பாரிய காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 57 பேர் பலியானதுடன் 59 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கொம்டரா நகரின் தென் கிழக்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெட்ரோகவோ கிரான்ட் பிராந்தியத்திற்கு தமது கார்களில் தப்பிச்செல்ல முயன்ற வேளையிலேயே பலர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காயமடைந்தவர்களில் அநேக தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர். இது அந்நாடு கடந்த பல வருட காலப் பகுதியில் எதிர்கொள்ளாத வகையிலான மோசமாக காட்டுத் தீ அனர்த்தமாகவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தோனியோ கொஸ்தா தெரிவித்தார். 

அதேசமயம் இந்தத் தீயில் சிக்கி மரணமடைந்தவர்கள் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அவர் கூறினார். 

இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் இடி மின்னல்களும் இந்த அனர்த்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.