இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ' EMI மாத தவணை ' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Published By: Digital Desk 2

22 Mar, 2025 | 05:01 PM
image

புதுமுக நடிகர் சதாசிவம் சின்னராஜ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ' EMI  மாத தவணை ' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் கே. பாக்யராஜ் பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' EMI மாத தவணை ' எனும் திரைப்படத்தில் சதாசிவம் சின்னராஜ், சாய் தன்யா, பிளாக் பாண்டி, ஆதவன் ,ஓ எ கே சுந்தர் , லொள்ளு சபா மனோகர் , டிகேஎஸ் , செந்திகுமாரி , இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ‌நாத் பிச்சை இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மல்லையன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், அரவிந்தராஜ் , பேரரசு , வெங்கடேஷ் , எஸ். ஆர். பிரபாகரன்,  தயாரிப்பாளர் பி எல். தேனப்பன் , நடிகை தேவயானி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் பேசுகையில், '' இ எம் ஐ படத்தின் கதையை என் வாழ்வில் நேரடியாக பார்த்திருக்கிறேன். என் நண்பன் கடனுக்காக பொருளை வாங்கிவிட்டு, மாத தவணை கட்ட இயலாமல் தடுமாறும் போது அதனை கட்டுமாறு அவர்கள் கொடுக்கும் தொல்லைகளால் மன அழுத்தம் ஏற்பட்டது. ஆகவே இதனை திரைப்படமாக உருவாக்கலாம் என திட்டமிட்டேன்.

இந்த திரைப்படத்தில் சமூகத்திற்கான விடயங்களை விவரித்து இருக்கிறோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்‌ '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right