பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

22 Mar, 2025 | 04:56 PM
image

தயாரிப்பு : ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் - ஹாரா மியூசிக் லேபிள்

நடிகர்கள் : எஸ். லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி நாகராஜ் மற்றும் பலர்.

இயக்கம் : எஸ். லாவண்யா

பின்னணி பாடகியாக வேண்டும் என திரையுலகில் அறிமுகமாகி, அதற்காக ஹிந்துஸ்தானி இசையை கற்றுக்கொண்ட லாவண்யா, பிறகு திரைப்படத்துறையில் அனைத்து பிரிவுகளையும் கற்று தேர்ச்சி பெற்று திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம்தான் 'பேய் கொட்டு'. இது ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் நாயகியான லாவண்யா பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தம் மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் போது அவருடைய வாகனம்  திடீரென்று பழுதாகிறது. இதனால் அந்த இரவு அந்த ஊரில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர் எப்போதும் தன்னுடன் ஒரு குட்டி கமெராவை வைத்திருக்கிறார். இவர் உறங்கும் போது 'அந்த குட்டி கமெரா எம்முடையது' என ஒரு பேய் கனவில் வந்து அவரது தலையில் கொட்டி விட்டு மிரட்டுகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளரான லாவண்யாவை சிலர் வேறு பெயரில் அழைக்கிறார்கள். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும் லாவண்யா தன் கனவில் வந்து கொட்டுவது யார்? அதன் பின்னணி என்ன?  என்பதை எப்படி அறிந்து கொள்கிறார் என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சுரண்டலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படத்தின் கதையை உருவாக்கியதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

கதை நாயகியாகவும், பேயாகவும் என இரண்டு வேடங்களில் லாவண்யா நடித்திருக்கிறார். சில காட்சிகளில் தன்னால் முடிந்த அளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார். தீபா சங்கர்-  ஸ்ரீ ஜா ரவி போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் தங்களின் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

எடுத்துக்கொண்ட கதை கரு பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றாலும் அதற்காக எழுதப்பட்ட திரைக்கதை உள்ளிட்ட பல அம்சங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை.

ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை,  பாடல்கள், கலை இயக்கம், படத்தொகுப்பு, என அனைத்து தொழில்நுட்ப பணிகளும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்குரிய குறைந்தபட்ச தரத்தில் கூட இல்லாதது குறைதான்.

பேய் கொட்டு - கம்பி நீட்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right