நடிகர் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது

22 Mar, 2025 | 12:02 PM
image

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, சுமார் 150 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளதோடு தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல சேவைகளையும் செய்து வருகிறார். 

இந்நிலையில் அவர் சினிமாவில் கொடுத்துள்ள பங்களிப்பு மற்றும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதத்தில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட திங்க் டேங் பிரிட்ஜ் இந்தியா எனும் அமைப்பு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் கீழவையான ஹவுஸ் ஒஃப் கொமன்ஸில் இவ் விருதை வழங்கியது.

இவ் விழாவில் பாராளுமன்ற பிரித்தானியா - இந்திய உறுப்பினர் நவேந்து மிஸ்ரா மற்றும் சோஜன் ஜோசப், பாப் ப்ளாக்மேன் ஆகியோர் இணைந்து நடத்தியுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தூதர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

நடிகர் சிரஞ்சீவி தனது நன்றிகளை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ’இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மதிப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணைச் செயலாளர்கள் என பலரால் கௌரவிக்கப்பட்டமையால் என் இதயம் நன்றியால் நிறைந்துள்ளது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதால் எனது மனம் நெகிழ்ந்தது. 

இதனைக் கூறுவதற்கு வார்த்தைகள் போதாது. எனது அன்பான ரசிகர்கள், இரத்த உறவுகள், எனது திரைப்படக் குடும்பம், நலன் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் அனைவருக்கும் எனது பயணத்துக்கு எல்லா வகையிலும் உறுதியாக நிற்கும் மற்றும் என்னுடன் சேர்ந்து மனிதாபிமான நோக்கங்களில் பங்கேற்று வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டில் நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததோடு, ANR தேசிய விருது மற்றும் சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமியின் 'இந்திய சினிமாவில் சிறந்த சாதனை' என்ற கௌரவத்தையும் பெற்றார்.

இவர் 156 படங்கள், 537 பாடல்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்ததன் காரணமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். அத்துடன் அவரது நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக  ANR விருதைப் பெற்றார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு உயரிய விருதான பத்ம பூஷன் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right