(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உர கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தப்பியோடி அரசுக்கு 40 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய ஜயகொடி என்பவர் இந்த அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைச்சர் பதவி விலக வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடற்றொழில் அமைச்சர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் ஏதும் நிராகரிக்கப்படவில்லை. மன்னாரில் நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு வேட்புமனு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். நாங்கள் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்.
தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக தலைவர் பிரபாகரனின் பெயரை குறிப்பிடும் நிலைக்கு வந்திருப்பதையிட்டு வாழ்த்துகிறோம். நீங்கள் வாயால் மாத்திரமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி பற்றி பேசுகின்றீர்கள். நிறைவடைந்த ஆறுமாத ஆட்சியில் எதனையும் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம்.
வட மாகாணத்துக்கு நீங்கள் ஏதும் செய்யவுமில்லை, செய்யபோவதுமில்லை. வாக்களித்த மக்கள் தற்போது விளங்கிக்கொண்டார்கள். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பற்றி பேசும் நீங்கள், உடளகம,மற்றும் பரணமக ஆணைக்குழு மற்றும் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றி பேசவில்லை. இதனை குறிப்பிடும் போதே அமைச்சர் சபையை விட்டு வெளியேறுகிறார்.
வரி நிவாரணம் மற்றும் வரி விதிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை நான் பலமுறை கேள்விக்குள்ளாக்கினேன். சிகரெட் நிறுவனத்துக்கு மாத்திரம் 56 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நிறுவனங்களுக்கு 96 சதவீத அளவில் வரி அறவிடப்பட்டுள்ளது. ஏன் சிகரெட் நிறுவனத்துக்கு மாத்திரம் சிறப்பு சலுகை என்று கேள்வியெழுப்பினேன். ஆனால் இதற்கு இதுவரையில் பதிலளிக்கவில்லை.
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் ஒரு தரப்பினர் பெற்றுக்கொண்ட கடன் இதுவரையில் அறவிடப்படாத நிலையில் அந்த கடன்களை மீளப்பெறுவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று வினவினேன். இதுவரையில் பதில் இல்லை. இந்த அரசாங்கமும் நடுத்தர மக்களுக்கு பாரிய அநீதி இழைத்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2004 ஆம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்த போது பொது மேலாளராக ஜயகொடி, மனிதவள முகாமையாளராக மல்லிகா ஆராய்ச்சி, தொழில்நுட்ப முகாமையாளராக திசாநாயக்க என்பவரையும் நியமித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மனித வள முகாமையாளர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜயகொடி என்பவர் உர கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றியுள்ள நிலையில், நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.இதனால் அரசாங்கத்துக்கு 40 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் இந்த அமைச்சரவையில் உள்ளார். இந்த விடயத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அந்த நபர் அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM