மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன அபிஷேக வழிபாடு..!?

Published By: Digital Desk 2

21 Mar, 2025 | 03:58 PM
image

எம்மில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைய தங்களால் திருப்பி செலுத்தக்கூடிய அளவிற்கான கடன்களை வாங்குவது இயல்பு. இன்னும் சற்று விரிவாக சொல்ல வேண்டும் என்றால் கடன் வாங்கி வணிகம் செய்வது தான் வணிக மரபு என்று குறிப்பிடுவோர்களும் உண்டு.

கடன் என்பது வருமானத்திற்கு உட்பட்டு இருக்கும் வரை அது வளர்ச்சியை தரும். மகிழ்ச்சியையும் தரும். கடன் என்பது கட்டுப்பாட்டை கடந்து அதிகரிக்கும் போது தான் மன உளைச்சலை தரும். நிம்மதியையும் குலைத்து விடும்.

கடனை கட்டுக்குள் வைத்திருப்பதும் சவாலானது தான். அதை விட கடனை திருப்பி செலுத்தும் போது ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதும் சவாலானது தான். இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களை அதிலிருந்து மீள்வதற்கு, ஒரு நூதனமான இறை வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : விருப்பாச்சி மலை வாழைப்பழத்தை பிரதானமாக கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சாமிர்தம்.

இந்த விருப்பாச்சி மலை வாழைப்பழத்தை இறக்குமதியாளர்களிடம் சொல்லி வைத்து வாங்க வேண்டும். இந்த பிரத்யேகமான விருப்பாச்சி மலை வாழைப்பழத்தை வைத்து பஞ்சாமிர்தம் செய்து, அதனை செவ்வாய்க்கிழமையும், சஷ்டி திதியும் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் முருக பெருமான் ஆலயத்திற்கு சென்று முருக பெருமானுக்கு காலை வேளையில் இந்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அலங்காரமும், ஆராதனையும் செய்ய வேண்டும்.  அந்தத் தருணத்தில் நீங்கள் கந்தர் சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் உங்களுடைய கடன் சுமை குறைய தொடங்கும். கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான புது வழி பிறக்கும். இந்த விருப்பாச்சி மலை வாழைப் பழத்தினை கொண்டு செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கு கடனை நிவர்த்தி செய்யும் சூட்சம ஆற்றல் உண்டு என்பதை எம்முடைய முன்னோர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

உடனே எம்மில் சிலர் இத்தகைய பஞ்சாமிர்த அபிஷேகம் செய்த பிறகும் கடன் குறையவில்லை என்றால் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு மனமில்லை அல்லது திருப்பி செலுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பினை உணர்த்திருக்கிறார்கள். இவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு முடி காணிக்கை கொடுப்பவர்களில் ஆறு பேர் முடி காணிக்கை கொடுப்பதை நேரில் காண வேண்டும்.

அதன் பிறகு நீங்களும் முடி காணிக்கை கொடுத்துவிட்டு, அதன் பிறகு தலை மற்றும் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு முருகப்பெருமானை வணங்கினால் கடன் பிரச்சனையிலிருந்து எப்படி வெளிவருவது என்பது குறித்த எண்ணங்கள் உங்களுடைய மனதில் எழும். அதன் பிறகு முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் செவ்வரளி பூவை சாற்றி வணங்க தொடங்கினால் கடன் சுமை தொடர்பான பிரச்சனை பாதிப்புகள் மெல்ல மெல்ல குறைவதை அனுபவத்தில் காணலாம். உணரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்