(நெவில் அன்தனி)
ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடனும் பெருமையுடனும் வழிநடத்துவதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக தெரிவான கிறிஸ்டி கவென்ட்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக கிறிஸ்டி கவென்ட்றி, முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் 131 வருட ஒலிம்பிக் தலைமைத்துவத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள கிறிஸ்டி கவென்ட்றி, அப் பதவியை வகிக்கப்போகும் முதலாவது பெண்மணி மற்றும் முதலாவது ஆபிரிக்கர் என்ற பெருமைக்குரிய வரலாற்றுச் சாதனையை 1 வயதான கவென்ட்றி ஏற்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 10ஆவது தலைவராக தெரிவாகியுள்ள கிறிஸ்டி கவென்ட்றி மிக இளவயதில் தலைவரானவர் என்ற மற்றொரு சாதனைக்கும் உரித்தாகிறார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 144ஆவது கூட்டத் தொட ர் கிரேக்க தேசத்தின் கடற்கரை உல்லாசத்துறைப் பிரதேசமான கொஸ்டா நவாரினோவில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற தேர்தலில் உலக விளையாட்டுத்துறை அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த மற்றும் மிகவும் உயரிய பதவியை கிறிஸ்டி கவென்ட்றி வென்றெடுத்தார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து பேசிய கிறிஸ்டி கவென்ட்றி,
'இது மிகப் பெரிய மரியாதை மட்டுமல்ல, இந்த அமைப்பை நான் மிகவும் கண்ணியத்துடனும் பெருமையுடனும் வழிநடத்துவேன். அதன் மதிப்புகளை மையமாகக் கொண்டு இன்று நீங்கள் எடுத்த முடிவில் உங்கள் அனைவரையும் மிகுந்த கௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கச் செய்வேன் என்பதை உறுதியுடன் நினைவூட்ட விரும்புகிறேன்' என்றார்.
'என்னை தலைவராக தேர்ந்தெடுத்தமைக்காக எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இப்போது, நாங்கள் ஒன்றாக சில வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. இந்தப் போட்டி ஒரு நம்பமுடியாத போட்டியாக இருந்தது. அது எங்களை மேம்படுத்தியதுடன் எங்களை ஒரு வலுவான இயக்கமாகவும் மாற்றியுள்ளது' என கவென்ட்றி மேலும் கூறினார்.
சர்வதேச ஒலிம்பிக் தலைவர் பதவிக்கான தேர்தலில் இளவரசர் பைசால் அல் ஹுசெய்ன் (ஜோர்தான்), சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனத் தலைவர் டேவிட் லப்பாரட்டியன்ட் (பிரான்ஸ்), சர்வதேச பணிச்சறுக்கல் (Ski) சம்மேளனத் தலைவர் ஜொஹா எலியாஸ் (பிரிட்டன்), முன்னாள் ஒலிம்பிக் குழுத் தலைவர் யுவான் அன்டோனியோ சமாரன்ச்சின் மகனும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உப தலைவருமான (கனிஷ்ட) யுவான் அன்டோனியோ சமாரன்ச் (ஸ்பெய்ன்), ஸிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் தங்கப் பதக்க நீச்சல் வீராங்னை கிறிஸ்டி கவென்ட்றி, வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் தலைவர் செபெஸ்டியன் கோ (பிரிட்டன்), சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் தலைவர் மோரினாரி வட்டானபே (ஜப்பான்) ஆகிய 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே கவென்ட்றிக்கு பெரும்பான்மை வெற்றி
இத் தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பின் முதல் சுற்றிலேயே பெரும்பான்மை வாக்குகளுடன் கிறிஸ்டி கவென்ட்றி வெற்றிபெற்று புதிய தலைவராக தெரிவானார். அளிக்கப்பட்ட 97 மொத்த வாக்குகளில் கவென்ட்றிக்கு 49 வாக்குகளும் இரண்டாம் இடத்தைப் பெற்ற யுவான் அன்டோனியோ சமாரன்ச்சுக்கு 28 வாக்குகளும் கிடைத்தது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 9ஆவது தலைவராக 2013இல் தெரிவான தோமஸ் பாக், 12 வருட பதவிகாலத்திற்கு பின்னர் பதவி கும்போது, கவென்ட்றி உத்தியோகபூர்வமாக எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி 10ஆவது தலைவராக பதவியேற்பார். கவென்ட்றியின் பதவிக்காலம் எட்டு வருடங்கங்களைக் கொண்டதாகும்.
உலகம் முழுவதும் உயர்ந்த புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, 21ஆம் நூற்றாண்டில் ஒலிம்பிக் இயக்கத்தின் திசை குறித்த கேள்விக்குறிகள் மற்றும் பாலின அடையாளம் மற்றும் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முன்னெப்போதையும் விட அதிக கரிசணை ஆகிய விடயங்களுக்கு மத்தியிலேயே கோவென்ட்ரி பதவி ஏற்கவுள்ளார்.
'இது ஒரு அசாதாரண தருணம். ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது, எங்களது இந்த வியக்கத்தக்க இயக்கத்திற்குப் பிரதிபலன் செலுத்தும்வகையில் என்றாவது ஒரு நாள் இங்கு நிற்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை' என தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கவென்ட்றி தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் ஸிம்பாப்வே வென்ற 8 பதக்கங்களில் ஏழு பதக்கங்கள் கவென்ட்றிக்கு சொந்தமானவை
சர்வதேச ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராவதற்கு முன்னர், அவர் ஸிம்பாப்வேயின் ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக பிரகாசித்தார்.
ஏதென்ஸ் 2004, பெய்ஜிங் 2008 ஆகிய இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழா அத்தியாயங்களில் ஸிம்பாப்வே வென்றெடுத்த 8 பதக்கங்களை 7 பதக்கங்களை (2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்) கவென்ட்றி வென்றெடுத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்ட விழாவில் 200 மீற்றர மல்லாக்கு நீச்சலில் தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்ற கவென்ட்றி, நான்கு வருடங்களுக்கு பின்னர் பெய்ஜிங் 2008 ஒலிம்பிக்கில் 200 மீற்றர் மல்லாக்கு நீச்சலில் தனது சம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டார்.
கவென்ட்றியின் தலைமையில் நடைபெறவுள்ள முதலாவது மிகப் பெரிய விளையாட்டு விழா
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் கவென்ட்றியின் மேற்பார்வையில் நடைபெறவுள்ள முதலாவது மிகப்பெரிய நிகழ்வு, இத்தாலியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மிலான்-கோர்ட்டினா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவாகும்.
சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக விண்ணப்பித்தபோது கவென்ட்றி தனது விஞ்ஞாபனத்தில், விளையாட்டுத்துறையை 'நாடுகளுக்கும் கலாசாரங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாகவும், நம்பிக்கையின் ஊற்றாகவும் நன்மைக்கான வலிமையாகவும்' மாற்ற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
விளையாட்டுகளில் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
'இது விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாப்பதன் மூலமும், நமது இயக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும் பெண்களின் விளையாட்டுக்களை வலுப்படுத்துவதை குறிக்கிறது' என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் (1894 இலிலிருந்து)
1894 - டிமெட்ரியஸ் விக்கிலாஸ் (முதலாவது தலைவர்)
1896 - நவீன் ஒலிம்பிக்கின் பிதா - பியரே டி கூபேர்ட்டின் (2)
1925 - ஹென்றி டி பெய்லே-லெத்தோர் (3)
1946 - ஜே. சிக்ப்றிட் எட்ஸ்ட்ரோம் (4)
1952 - ஏவ்ரி ப்ரண்டேஜ் (5)
1972 - பிரபு கில்லானின் (6)
1980 - யுவான் அன்டோனியோ சமாரன்ச் (7)
2001 - யக்ஸ் ரொகே (8)
2013 - தோமஸ் பாக் (9)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM