உலகளவில் தெற்காசியர்கள் தான் அதிகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. அத்துடன் இதய நோய் இளம் வயதிலேயே வரத் தொடங்கியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணத்தினாலேயே இதயம் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்று சொல்லலாம். அதிலும் எம்மாதிரியான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் கொடுத்தாலும் புகைப் பிடிக்கும் பழக்கம் இன்றும் அதிகரித்துக் கொண்டேதானிருக்கிறது. உடல் உழைப்பையும் குறைத்துக் கொண்டுவிட்டோம். 

உங்களுடைய இடுப்பளவு 36க்கு அதிகமாக இருந்தால் உடற்பருமன் என்பதும், இதயத்திற்கு பாதிப்பு வரும் என்பதையும் தற்போது கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். உடற்பயிற்சியின்மை, உணவு பழக்கம் இவற்றின் காரணமாகத்தான் இதயத்தில் கோளாறுகள் உருவாகின்றன.

துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றை தவிர்க்கவேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனை முற்றாக தவிர்க்கலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுவையான உணவுகளில் ஆரோக்கியம் குறைவாக இருக்கும். ஆரோக்கியம் அதிகமாக இருக்கும் உணவுகளில் சுவை குறைவாக இருக்கும். அதனால் இதயத்தை பாதுக்காக்கவேண்டும் என்றால் சுவை குறைவான உணவுகளை அதிகமாகச் சாப்பிடவேண்டும்.

அதே சமயத்தில் பெண்களை விட ஆண்களின் இதயம் சற்று பலவீனமானது தான் என்ற அறிவியல் பூர்வமான உண்மையையும் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹோர்மோன் இதயத்தை பாதுகாக்கும் காரணியாக செயல்படுகிறது. அதனால் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் தருணம் வரை அவர்களின் இதயத்திற்கு கோளாறுகள் வருவது இயற்கையாகவே குறைந்திருக்கும்.

Dr.கார்த்திக் ஆஞ்சநேயன் M.D.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்