(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பட்டலந்த சித்திரவதை முகாமில் நடந்ததை போன்று வடக்கு மற்றும் கிழக்கில் பல முகாம்களில் சித்திரவதைகள் நடந்துள்ளன. அந்த முகாம்களில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. மனித உரிமைகளை மீறியவர்கள், மனிதர்களை கடத்தியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.
அதேபோன்று 1990ஆம் ஆண்டில் சத்துருகொண்டான் பகுதியில் ஒரே நாளில் நான்கு கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை பட்டப்பகலில் அழைத்துச் சென்று அன்று இரவு அவர்களை படுகொலை செய்துள்ளனர்.
அங்கு வளைந்து காணப்பட்ட மரமொன்றில் குழந்தைகளை மீன்களை வெட்டுவதை போன்று படை முகாமில் இருந்தவர்கள் செய்ததாக இப்போதும் கூறுவர். இதுவரையில் சத்துருக்கொண்டான் முகாமில் கடத்திக் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
அதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகம் அகதி முகாமாக இருந்தபோது அதிலிருந்து இரண்டு தடவைகளில் நாவலடி படை முகாமுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்கள் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதுகூட இன்று வரையில் தெரியாது.
முறக்கொட்டாஞ்சேனை, கல்லடி, கரடியனாறு,ஊரணி, கொண்டவட்டுவான் போன்ற முகாம்களில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
பட்டலந்த சித்திரவதை முகாமில் நடந்ததை போன்று வடக்கு மற்றும் கிழக்கில் பல முகாம்களில் சித்திரவதைகள் நடந்துள்ளன. அங்கு நடந்தவை தொடர்பான காணொளிகளை பார்க்கும்போது தலைகீழாக கட்டி அடிப்பதும், அமில திரவங்களில் அமிழ்த்தி கொலை செய்வதும் போன்ற சித்திரவதைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது என்றால் அதனை அனுபவித்தவர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதனை நாங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் மனித உரிமைகள் மீறல்கள் நடந்துள்ளன. உள்நாட்டு பொறிமுறைகளில் எந்தவொரு பிரச்சினைகளும் கடந்த 77 வருடங்களில் தீர்க்கப்படவில்லை. இந்த பொறிமுறை சக்தி இழந்த ஒரு இனத்திற்குரிய பொறிமுறையாகவே உள்ளன. இதனால் சர்வதேச பொறிமுறைகள் ஊடாக தீர்வுகளை காண வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM