(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
எந்த முறைமையிலாவது அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு குறிப்பிட்டுள்ள போதும் அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்குகாணப்படுகின்றபோதும் நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதில்லை.
நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கவில்லை. ஒருசில விடயங்களை திருத்தம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமா று 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.
இருப்பினும் எமது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. நிலையியல் கட்டளைக்கு முரணாக அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவி ஆளுங்கட்சி உறுப்பினருக்கு வழங்கப்பட்டது.இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கம்கொள்கை ரீதியில் தீர்மானித்து,அதற்கான பணிகளை முன்னெடுத்து நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பை 48 மாத காலத்தை வரையறுத்து பெற்றுக்கொண்டது.
ரணிலின் பொருளாதார கொள்கையை முழுமையாக மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாணய நிதியம் விதித்த பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்கமைய செயற்படுகிறார்கள்.
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றது என்பது பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலும், தடயவியல் அறிக்கைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான அறிக்கையின் அடிக்குறிப்பில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே இதனை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல், முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கு அரசாங்கம் கடந்த மாதம் 11 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி' விதிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறோம். நிபந்தனைகளின் இலக்குகளை அடைந்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் நிதி பதில் அமைச்சராக அனில் ஜயந்த கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருமுறை நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பி வைத்த போது நாட்டில் இருக்கவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டார். பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அந்த கடிதத்தில் தான் கைச்சாத்திடவில்லை என்று மக்களிடம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் தற்போது இவ்வாறே செயற்படுகிறார். நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பும் தினத்தன்று அவர் நாட்டில் இருக்கவில்லை. டுபாய் சென்று விட்டார். இவரும் தான் கடிதத்தில் கைச்சாத்திடவில்லை என்றே எதிர்காலத்தில் மக்களிடம் குறிப்பிடுவார்.
2024 ஆம் ஆண்டு பொருளாதாரம் சடுதியாக வளர்ச்சியடைந்தது .இந்த பெறுபேற்றை அரசாங்கத்தால் ஏற்க முடியாது. 2025 ஆம் ஆண்டு பொருளாதார மேம்பாட்டுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன ? வாய்க்கு வந்தப்படி குறிப்பிடுவதை எல்லாம் பொருளாதார கொள்கைகள என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மொத்த தேசிய உற்பத்தியை இந்தாண்டு 1.6 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. அதற்கான திட்டங்கள் என்ன,
கூட்டுத்தாபன வருமான வரியை 15 ச தவீதத்தால் அதிகரித்துக் கொள்ளவும் அதனூடாக6.8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கான வரியை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அனைத்தும் வாய்ச்சொல்லுக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவைத்துறைக்கான வரியை 18சதவீதத்தால் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. புகிங். கொம் சேவை ஊடாக முறையான வரி கிடைக்கப்பதில்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். அமைச்சரவை தவறாக வழிநடத்தும் நபரை பார்த்து அமைச்சர் ' பைத்தியமா ' என்று கேட்க வேண்டும்.
பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் விளைவால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே தவறான ஆலோசனை கோரலை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த முறைமையிலாவது அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இந்த ஆண்டு 400 பில்லியன் ரூபாய் அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு . ஆனால் நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதில்லை. நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கவில்லை. ஒருசில விடயங்களை திருத்தம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM