"அபிவிருத்தி" எனும் மண் குதிரை ஒன்றை காண்பித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் பாரிய பணப்பதுக்கலில் ஈடுபட்டு வருகிறது. இந்த பதுக்கல் நிகழ்வுக்கு அவ் வைத்தியசாலையில் கடமையாற்றும் பல துறைசார் நிபுணர்கள், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் உடந்தையாக இருப்பதாக மிக வேதனையானது.

இந்த அதிகாரிகளுக்கு நிருவாகம் பணப்பட்டுவாடா செய்வதில்லை.தமக்கு உதவுவதற்காக கடமை நேரத்தை வியாபார தேவைக்காக பயன்படுத்த உதவுவதே நிருவாகத்தின் நன்றிக்கடன்.

கடந்த மாதத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம்  100 கதிரைகளை கொள்வனவு செய்தது. இந்த கதிரைகள் நோயாளருக்கு தேவையாக உள்ளமை குறித்து எந்தவொரு பிரிவு தலைவரும் நிருவாகத்துக்கு விண்ணப்பித்திருக்காத நிலையில் நிருவாகத்தின் சுய விருப்பிலே இக்கதிரை கொள்வனவுகள் இடம்பெற்றன.

கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகள் அனைத்தும் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவில் போடப்பட்டு அங்கிருந்த நல்ல நிலையிலுள்ள, மரத்தாலான கதிரைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.

வெளியேற்றப்பட்ட கதிரைகள் அனைத்தும் இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் பயன்படுத்த கூடியவை. இருப்பினும் வைத்தியசாலை நிருவாகம் அனைத்து கதிரைகளையும் பாவனைக்குதவாதவையாக கருதி வெளியேற்றி, மழையிலும் வெயிலிலும் படும் வண்ணம் வெட்டவெளியில் குவித்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்திலும் மேலும் 125 கதிரைகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விண்ணப்பங்களும் எந்தவொரு நோயாளர் பராமரிப்பு துறையில் இருந்தும் நிருவாகத்துக்கு கிடைக்கவில்லை. இந்த கொள்வனவும் நிருவாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளே.

கதிரையொன்றின் இன் விலை 19000 ரூபா வீதம்  225 கதிரைகளுக்கும் 4.275 மில்லியன் ரூபாய்கள் இந்த கதிரை கொள்வனவுக்காக செலவு  செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த கதிரையொன்று ரூபா 18000 வீதம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கொள்வனவு செய்துள்ள நிலையில் ரூபாய் 1000 அதிகரித்த நிலையில் 225000 ரூபாய்களை மேலதிகமாக செலவு செய்து போதனா வைத்தியசாலை நிருவாகம் இக்கொள்வனவு செய்துள்ளது.

இத்தகைய  பல மில்லியன் ரூபா பெறுமதியான  கொள்வனவுக்காக  குறைந்தது 15 வீத கழிவுகள் கதிரை உற்பத்தி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்கலாம். அத்தொகை  641250 ரூபாய்களாக அமைந்திருக்கலாம். ஆக, அபிவிருத்தி எனும் பெயரில் கதிரை கொள்வனவு மூலம்  எட்டரை இலட்சத்திற்கும் அதிகமான தொகை பதுக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்வனவு குறித்து  கிடைத்த தகவலுக்கு அமைய பரிசோதனைக்கு வந்த கணக்கு பரிசோதனையாளர்கள் குழாம் வியப்பில் ஆழ்ந்தது . ஏனெனில் சகல கொள்வனவுகளும் தாபன விதிக்கோவைக்கமைய சட்டரீதியாக இடம்பெற்றுள்ளது. இருப்பினும் பாவனைக்கு உதவக்கூடிய கதிரைகளை வெளியேற்றியமையை மட்டுமே பரிசோதனைக் குழாம் குற்றமாக கண்டுள்ளது. அவற்றை மீள் பயன்பாட்டுக்கு எடுக்கும்படி உத்தரவிட்டது. அவசியமானது பலதிருக்க, உடனடி அவசியமற்ற விடயங்களில் இலாப நோக்கோடு வைத்தியசாலை நிருவாகம் செயற்படுகின்றமை மிக வேதனையானது.

விடுதிகளில் தங்கிநின்று சிகிச்சைபெறும் நோயாளிகள் படுப்பதற்கு கட்டில்கள் இல்லாத நிலையில் மர நிழல்களிலும்,  விறாந்தைகளிலும் பாய்களை கொண்டு படுத்துறங்கி சிகிச்சை பெறும் போதனா வைத்தியசாலையில், ஆடம்பர கொள்வனவுக்காக அபிவிருத்தி எனும் பெயரில் பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து இலாபமீட்டுவது மன்னிக்க முடியாத குற்றமே. பிணவறைக்கு அருகிலுள்ள நோயாளர் விடுதி 16 மற்றும் 34 இலும் விடுதி இலக்கம் 09 இலும்  பாய்களும் இல்லாது தரையில் படுத்துறங்கும் நோயாளர்களைக் காணலாம்.

பயன்படுத்தக்கூடிய அரச வழங்களை வீணடித்து வெயிலிலும் மழையிலும் நனையவிட்டு அமைப்பழியச் செய்து உருவாக்கும் அபிவிருத்தி எனும் மாயை மட்டக்களப்பின் பலரது கண்களை மறைத்து வைத்துள்ளது. 

எனவே இப்பிரதேச பொது மக்கள் வைத்தியசாலை குறித்து மிக அதிக கவனம் செலுத்தவேண்டும். இது மட்டக்களப்பு மக்களின் சொத்து என கருதி தமது அத்தியாவசிய சேவையாகிய சுகாதார சேவையை வினைத்திறனுடன் பெற்றுக்கொள்ள மட்டக்களப்பு சமூகம் முயற்சிக்கவேண்டும்.

( மட்டக்களப்பு செய்தியாளர் )