நாக்பூர்: அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி வன்முறை நடந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 163-ன் கீழ் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்திர குமார் சிங்கால், மறு உத்தரவு வரும்வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார். கோட்வாலி, கணேஷ்பேத், லக்கட்கஞ்ச், தேஷில், சாந்திநகர், பச்பாவ்லி, சக்கர்தரா, நந்தவனம், இமாவாடா, யோசோதரா நகர், கபில் நகர் உள்ளிட்ட காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? முன்னதாக நேற்று (மார்ச் 18) நாக்பூரின் மஹல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் என 200 முதல் 250 பேர் திரண்டனர். அவர்கள் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவுரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட சுவரொட்டிகளை எரித்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது.
இதன் எதிரொலியாக சுமார் இரவு 7.30 மணியளவில் பல்தர்புராவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை சூறையாடுவது, வாகனங்களை சேதப்படுத்துவது, தீ வைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
அதிரடி காவல்படையினர் திரண்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் காயமடைந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அமைதியை உறுதி செய்யும்வகையில் சட்டப்பிரிவு 163-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 5-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த உத்தரவு அரசுப் பணியாளர்கள், அத்தியாவசிய சேவைப் பணியில் உள்ளோர், பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையின் பின்னணி என்ன? மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. 1707 மார்ச் 3-ம் தேதி அவுரங்கசீப் இறந்தபின் அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு உடல் புதைக்கப்பட்டது. அந்த கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக இந்த கல்லறை உள்ளது.
இந்நிலையில் இந்த சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாலிவுட் வரலாற்று திரைப்படம் ‘சாவா’ தான் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதற்கு காரணமாகியுள்ளது. சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகராஜின் கதையான இந்த திரைப்படம் குறித்து மகாராஷ்டிராவின் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் எழுந்தது.
அப்போது சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி பேசும்போது, “பலரும் நினைப்பது போல் அவுரங்கசீப்பை நான் கொடுங்கோலர் எனக் கருத மாட்டேன். சமீபத்திய ஆட்சியாளர்களாலும், திரைப்படங்களாலும் அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுகிறது.” என்று கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அபு ஹாஸ்மி மார்ச் 26 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
ஆதரவும், எதிர்ப்பும்.. அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பிரச்சினையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர் அவுரங்கசீப் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்தச் சூழலில் தான் நாக்பூரில் கலவரம் மூண்டு தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த ஊடகப் பேட்டியில், “நாக்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் அமைதி காகக் வேண்டும். அவுரங்கசீப்பை பெருமைப்படுத்தும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM