மலேசியாவில் ஐவர் கொண்ட குழுவினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மற்றும் பலமாக தாக்கப்பட்டு கோமா நிலையில் வைத்தியசாலையில் உயிருக்காக போராடிய நவீன் என்ற மாணவன் குணமடைய வேண்டும் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை செய்துள்ளார்.

தன்னைப் போலவே ஓர் இசையமைப்பாளராக வேண்டும் என்ற இலட்சியம் கொண்டிருந்த மாணவன் நவின் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார். ஆனால், அவர் பிரார்த்தனை பதிவு செய்த இரண்டு மணிநேரத்திற்கு பிறகு கோமாவிலிருந்து மீளாமலேயே உயிர் நீத்தார் நவின்.

ஒருவேளை நவின் கோமாவிலிருந்து மீண்டிருந்தால் தான் நேசித்த ஏ.ஆர்.ரஹ்மானின் அந்த பிரார்த்தனை அறிந்து மனம் நெகிழ்ந்து போயிருப்பார். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு நவினுக்கு கிடைக்காமலேயே போய் விட்டது என்பது தான் மிக துயரமான செய்தி.

தி.நவினுக்கு (வயது 18) சிறுவயது முதலே இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதிலும் இசைப்புயலின் தீவிர ரசிகனான நவின், ஏ.ஆர்.ரஹ்மான் போலவே சிறந்த இசையமைப்பாளராக ஆக வேண்டும் என குடும்பத்தினரிடமும் தன் நண்பர்களிடமும் தெரிவித்து வந்துள்ளார்.