தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி தேர்தல்களில் பெரிய வெற்றியை பெறுமா?

16 Mar, 2025 | 03:31 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

" தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்."  கடந்த வியாழக்கிழமை ( மார்ச் 13)  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான ஆள் அமைச்சர் சந்திரசேகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையை சேர்ந்தவராக இருந்தாலும், சந்திரசேகரிடம் யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகாரங்களை  யேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவரே யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி நிருவாக  மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இந்த இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாகும். சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல்களில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குறிப்பாக  ஊடகங்களுடன் பேசும்போது வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாக தெரிகிறது. தேர்தல் வெற்றி மீதான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு  சாசுவதமாக பீறியெழும். அது வழமையாக எதிர்பார்க்கப்படுவதே. நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற இயலாத வேட்பாளர்களும் கூட தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். யதார்த்தமாக நோக்கும்போது தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக தாங்கள் வெற்றி பெறுமாட்டார்கள்  என்று எந்த வேட்பாளரும் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட பலர் தங்களுடன் போட்டியிட்டவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது வாக்குகள் எண்ணும் செயன்முறைகளில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

இந்த பின்புலத்தில் பார்க்கும்போது,  ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சந்திரசேகர் எதிர்வு கூறுவதைப் போன்று உண்மையில் பெரிய வெற்றியை பெறுமா அல்லது அவரது நம்பிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சந்திரசேகர் இவ்வாறு கூறியிருந்தால், அவர் கேலி செய்யப்பட்டிருப்பார். தேசிய மக்கள் சக்தி போன்ற சிங்கள ஆதிக்கத்திலான ஒரு தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது நம்பமுடியாதது.

ஆனால், கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலைவரத்தை முற்றாக மாற்றிவிட்டது. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் திருப்பமாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது.  போனஸ்  ஆசனம் ஒன்றுக்கும் அது  உரித்துடையதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. அதற்கு அங்கு 80, 830 ( 24. 85 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசியவாத கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தி கூடுதல் வாக்குகளைப் பெற்றது. இந்த கட்சிகளுக்கு முறையே  63, 327 ( 19.47 சதவீதம்), 22,513(6.92 சதவீதம் ), 27, 986 (8.60 சதவீதம்)  வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பி.க்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகள் கருணானந்தன் இளங்குமரனுக்கே கிடைத்தன. அவருக்கு 32, 102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தென்மராட்சி பிராந்தியத்தின்  உசனை சொந்த இடமாகக் கொண்ட  இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஊழியரான அவர் தற்போது யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கிறார். ஐந்து வருடக்களாக தேசிய மககள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்துவரும் இளங்குமரன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்கினார்.

யாழ்ம்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டாவதாக தெரிவான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவுக்கு 20, 430 விருப்பு வாக்குகள் கிடைத்தன. முப்பது வருடங்களுக்கும் கூடுதலான காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் அண்மையில் பிரதி் பணிப்பாளராக ஓய்வு பெற்றார். 

தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினரான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனுக்குை17, 579 விருப்பு வாக்குகள் கிடைத்தன யாழ்ப்பாணத்தில் அவர் நன்கு பெயர்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ரஜீவன் அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட அவர் அநுரா குமாரவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டார்.

சந்திரசேகர்

யாழ்ப்பணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் சிற்பி அதன் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரேயாவார். அவர் ஜே.வி.பி.யின் மத்தியகுழுவிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரானஅவர் இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு  அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில் அமைச்சராக இணைத்துக் கொள்ளப்ட்டார்.

ஜே.வி.பி.யின் அமைப்பாளர் என்ற வகையில் சந்திரசேகர்  யாழ்ப்பாணத்தில் பல வருடக்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்வாக்குமிக்க யூரியூபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்ட அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  விவசாயிகள், மீனவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போன்ற யாழ்ப்பாணச் சமூகத்தின்  பல பிரிவினரையும் அணிதிரட்டிய அவர்  தேசிய மக்கள் சக்தியின் அணிகளுக்குள்   அவர்களை இணைத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சந்திரசேகர் பரவலாக்கினார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அவர்களில் இலட்சிய நோக்குடன் கூடிய சில படித்த இளைஞர்களும் அடங்குவர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பட்டியலை  அநுராாகுமார, பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் ஆலோசனை கலந்து சந்திரசேகர் இறுதி செய்தார். முன்னதாக,  2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  அநுரா குமாரவுக்கு சுமார் 27,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை சுமார் மூன்று மடங்காக அதிகரித்தது.

இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன?  தமிழரசு கட்சி,  தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு இந்த கட்சிகள் சகலதிலும் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்தும் வாக்குகள் வந்து சேர்ந்தன என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில்  ஒரு  கணிசமானவை பெண்களினாலும் இளைஞர்களினாலும் போடப்பட்டவையாகும்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த  மிகவும் கூடுதலான தபால்மூல வாக்குகள் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டின. மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும்  பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் ' திசைகாட்டி ' முதலாவதாக வந்தது. ஏனைய கட்சிகளினால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( தமிழரசு கட்சி ), சாவகச்சேரி ( சுயேச்சைக்குழு 17) ஆகியவையே அந்த தொகுதிகளாகும்.

அநுரா குமார திசாநாயக்க

அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் முதலாவதாக வந்தார், ஆனால் 42.31 சதவீதமான வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவதாக வந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற வேட்பாளரினால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறமுடியாத சந்தர்ப்பமாக 2024 ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அதனால் ஏனைய வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அநுரா 55.89 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார்.

அநுராவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு தடுமாற்றமானதாக இருந்த போதிலும், பிறகு ஒரு அரசியல் அதிசயம் நிகழ்ந்தது.அநுரா தனது கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தலைமை தாங்கி முன்னெடுத்தார். ஜனாதிபதியாக அவர் நாடுபூராவும் பயணம் செய்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார். அலை திரும்பியது. நாட்டை ஒரு அநுரா அலை சூழ்ந்து கொண்டது. பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்தது.

அநுரா அலை

தமிழ்த் தேசியவாத கோட்டையான யாழ்ப்பாணம் அநுரா அலையின் கீழ் சென்றது.25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில்  மூன்று ஆசனங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியைக் குதூகலிக்க வைத்தன. யாழ்ப்பாண வெற்றி ஒரு மகுடச்சாதனை என்று பல தலைவர்கள் வர்ணித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண முடிவுகள் ஒரு அணிகலனாக அமைந்தன.அதை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியவாதத்தின்  முடிவு என்றும் கூட சில அவதானிகள் எதிர்வு கூறினர்.

இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினால் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்று அமைச்சர் சந்திரசேகர்  அதிவிசேடமான  நம்பிக்கையைக் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் பதின்மூன்று பிரதேச சபைகள் இருக்கின்றன. எல்லாமாக பதினேழு உள்ளூராட்சி சபைகள். பாராளுமன்ற தேர்தலில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து  தொகுதிகளில் எட்டு தொகுதிகளில்  தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்ததால், உள்ளூராட்சி தேர்தல்களில் ஒரு முற்றுமுழுதான  வெற்றி சாத்தியம் என்று தோன்றலாம்.

தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்று தெரிகிறது. அதற்கு ஆதரவு பெருகியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால், யாழ்ப்பாண மக்கள் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு வாக்களிக்க விரும்புவர். அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் வடக்கிற்கு ஓரளவு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறது. நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் '   வண்டிலில் ' தொங்கிக் கொண்டுபோவது சிறந்தது என்று விளங்கிக்கொள்வர்.

வல்வெட்டித்துறை 

அநுரா அலை யாழ்ப்பாணத்தில் தணிந்துவிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உணருகின்றன. அநுரா அண்மையில்  யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயம் அதற்கு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள். வல்வெட்டித்துறையிலும் மிருசுவிலிலும் இடம்பெற்ற வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாதாரண மக்கள் அநுரா மீது தன்னியல்பாகவே அன்பை வெளிப்படுத்தினார்கள். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று இந்த தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

வல்வெட்டித்துறை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைலர்களின் சொந்த ஊராகும். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதத்தின் தொட்டில் என்று வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. அந்த ஊரில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தமை  உண்மையில் அதன் செல்வாக்கு வளருவதன் ஒரு அறிகுறியாகும் என்று இந்த வட்டாரங்கள் கூநுகின்றன.

உறுதிமொழியும் செயற்பாடும்

தேசிய மக்கள் சக்திக்குள் நம்பிக்கை நிலவுகின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தல்களில் யாழ்ப்பாண மக்களின் போதுமான  ஆதரவை கட்சியினால் பெறக்கூடியதாக இருக்குமா என்று சந்தேகமும் இருக்கிறது. உறுதிமொழிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வெளியே இதற்கு பிரதான காரணமாகும். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது பொதுவில் தேசிய மக்கள் சக்தியும் குறிப்பாக அநுராவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள்,  காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கையாளப்படும்,  இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் அவற்றுக்கு உரித்தானவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும், பாதுகாப்பு படைகளின் முகாம்களும் வீதிச்சோதனை நிலையங்களும் குறைக்கப்படும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் வீதிகளும் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன.

இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வீதிச்சோதனை நிலையங்களும் முகாம்களும் மூடப்பட்டன. ஒரு சில வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டன. முக்கியமான எந்த காரியமும் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செயதல்,  காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகளை திருப்பிக் கையளித்தல் போன்ற விவகாரங்களில் நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னோக்கிய செயற்பாடு எதையும் காணக்கூடியதாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதியமைச்சர் இப்போதுைஅரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கம் கூறுகிறது.

இன்னொரு கசப்பான விடயம் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பானதாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று  கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும்  என்று தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. ஆனால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டம் இப்போது பின்போடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ அல்லது மாகாணசபைகள் பற்றியோ எந்த குறிப்பும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அவரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பவைக்க இயலுமாக இருந்தது 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களில் அத்துமீறில் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்திய மீனவர்களின் படகுகள்  வருவதையும் அவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்துவதாக 2024 தேர்தல் பிரசாரங்களின்போது சந்திரசேகரும் அநுரா குமார திசாநாயக்கவும் விசேடமாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். 

ஆனால்,  இதுவரையில் அர்த்தமுடைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திய படகுகள் பெரும் எண்ணிக்கையில் வந்து வடபகுதி கடலில் தொடர்ந்து இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்திய மீனவர்களை இடைக்கிடை கைதுசெய்து அவர்களி்ன் படகுகளையும் கைப்பற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்கிறது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு ' மனிதாபிமான அடிப்படையில்' அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 'சட்டவிரோத மீன்பிடியை ' முடிவுக்கு கொண்டுவருவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி வளர்ந்து வருவது  தேசிய  மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகலாம். வடபகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கரையோரப்பகுதி மக்களிடம் தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களன  வாக்குக் கேட்கச் சென்றபோது அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அந்த மக்கள் முத்துக்கு நேரே கூறினார்கள்." நாங்கள் இந்த தடவை ஜே.வி.பி.க்கே வாக்களிக்கப் போகிறோம்.ஏனென்றால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி ஜே வி.பி.யே என்று நாம் நம்புகிறோம்"  என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் பலர் இப்போது ஏமாற்றமடைந்து விட்டார்கள்.  " கதையே தவிர காரியம் எதுவும் இல்லாத " ஒரு கட்சியாக ஜே வி.பி. இப்போது பலராலும் நோக்கப்படுகிறது.

இது தவிர, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் நடத்தைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் காணப்படுகிறது. யாழ்ப்பாண வெற்றியை தங்களது கிரீடத்தில் உள்ள அணிகலன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கொக்கரித்துக் கொண்டு 

 திரிகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான மூவரும் செயற்திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது அபூர்வம். அவ்வாறு அபூர்வமாகப் பேசுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி எதையும் கூறுவதை காணமுடியவில்லை. அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களால் சந்திக்க  முடியாமல் இருக்கிறது. அவர்களிடம் மக்கள் பிரச்சினை கிளப்பும்போது " இந்த விவகாரத்தில் எமது கட்சியின் தலைமைத்துவம் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும்" என்று ஒரு பதிலை கைவசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் திசைகாட்டிக்கு வாக்களித்த மக்கள்  சலிப்படைந்து போகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆனால்,  இந்த அதிருப்திப் போக்கு ஒரு தொடக்கமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு தொடக்கமாக இருந்தால்  வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரும்பவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த அதிருப்தி ஆழமானதாக வளருமானால்  யாழ்ப்பாணத்தில் உள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் அமைச்சர் சந்திரசேகரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வெறும் பகற்கனவாக மாத்திரமே இருக்க முடியும்.

இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருக்கிறது என்ற உண்மையை கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். செல்வாக்கான இடத்தை தேடியோடும் அருவருப்பான பேர்வழிகளுக்கு அது ஒரு காந்தம் போனறு இருக்கும்.  அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் விரும்புவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியில் இணைகின்ற அல்லது  ஆதரிக்கின்ற அந்த சந்தர்ப்பவாத பேர்வழிகளினால் பெருமளவில் வாக்குகளைக் கொண்டுவர முடியுமா என்பது மிகவும் சந்தேகமே.

எண்கணிதக் காரணி

எண்கணிதக் காரணியை கருத்தில் எடுக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களில் அரைவாசியைக் கைப்பற்றியதன் மூலமாக தேசிய மக்கள் சக்தி மிகச்சிறந்த வெற்றயைப்  பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் நான்கில் ஒரு பங்கிற்கு சமமானது மாத்திரமே. அநுரா அலை  தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைக் கவர்ந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்குமே  சென்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெரும்பாலானவறனறை " தமிழ்த் தேசியவாத அமைப்புகள் " என்று வகைப்படுத்த முடியும்.

அதனால், தமிழ்த் தேசியவாத கட்சிகளினாலும்  குழுக்களினாலும் ஒரு வகையான ஐக்கியத்தை  ஏற்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூட்டணிகளாக தேர்தலில் களமிறங்க முடியுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்க முடியும். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசாயவாத கட்சிகளும்  கூட்டணிகளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் உயர்வான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கிறது. தவிரவும், தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சி ஒன்று முதலாவதாக வந்தது குறித்து குறிப்பிட்ட சில வட்டாரங்கள் கவலைப்படுகின்றன.

தமிழ்த் தேசியவாத கட்சிகள்

அதனால், தமிழ்த் தேசியவாதக்கட்சிகள் திருப்பித்தாக்கி அநுயா அலையைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது. இது தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளினால் எந்தளவு ஐக்கியத்தைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு கூட்டங்களும்  கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இதுவரையில் அவற்றினால் பயன் கிட்டவில்லை. ஐக்கியம் சாத்தியமாகாமல் போனாலும் கூட, தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்குவதைத் தவிர்த்து தேசிய மக்கள் சக்தியை தனியொரு இலக்காகக் கொண்டு தாக்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்துகொள்ள முடியும்.

மேலும், தமிழ்த் தேசியவாத கட்சிகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமானால் புதிய, நடைமுறைச் சாத்தியமானதும் கற்பனைத் திறனுடையதுமான கொள்கைகளை அவை வகுக்க வேண்டும். பழைய கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றிக்  கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படும் பயன்விளைவுகளைத் தராது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுத்துக்கான அவாவேயாகும் என்பதை  நினைவிற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க வேண்டுமானால் இந்த முதன்மையான காரணியை கருத்தூன்றிக் கவனத்துக்கு எடுக்கவேண்டும். தங்களது தற்போதைய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளினால் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து வாக்காளர்களை கவரக்கூடியதாக இருக்குமா என்பதை தமிழ்த் தேசியவாத கட்சிகள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்முறை 

உள்ளூராட்சி சபைகளுக்கென்று தேர்தல் முறையொன்று இருக்கிறது. 60 சதவீதமான ஆசனங்கள் வட்டாரங்கள் மூலமாகவும் 40 சதவீதமான ஆசனங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலமும் தெரிவு செய்யப்படுவதே அந்த முறையாகும். இந்த தேர்தல் முறையின் விளைவாக 2018  பெப்ரவரி  தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளினால் உள்ளூராட்சி சபைகளில் ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அது 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்ட  48 உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் மாத்திரமே பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. 

அதனால் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபை ஒன்றில் கூடுதலான வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பானமைப் பலத்தை பெறமுடியாத சூழ்நிலை தோன்றுவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்டக் கூடியதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்ட...

2025-04-30 15:08:55
news-image

திருகோணமலையில் குப்பை மேடுகளை நோக்கி படையெடுக்கும்...

2025-04-29 18:34:58
news-image

பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் 1957 ஆம் ஆண்டில்...

2025-04-29 09:47:18
news-image

கனடாவில் தேர்தல் - வாக்காளர்கள் டிரம்பின்...

2025-04-28 16:40:55
news-image

மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்கான...

2025-04-27 17:30:23
news-image

மூலோபாய பாதைகள்

2025-04-27 16:55:00
news-image

ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையை வலுப்படுத்தி சர்வதேச...

2025-04-27 16:42:49
news-image

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆதரவளிக்கும்...

2025-04-27 16:53:09
news-image

காஷ்மீர் தாக்குதலின் மதரீதியான பரிமாணம்

2025-04-27 15:45:00
news-image

போரைத் தடுக்குமா அமெரிக்க - ஈரானியப்...

2025-04-27 15:31:35
news-image

முஸ்லிம் வாக்காளர்கள் முன்னுள்ள பொறுப்பு

2025-04-27 15:23:56
news-image

தரை வழி மார்க்கமும் தள்ளி நிற்கும்...

2025-04-27 14:54:04