பெருசு - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 04:47 PM
image

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & பெவாஜா ஸ்டுடியோஸ் & எம்பார் லைட் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : சுனில், வைபவ், சாந்தினி தமிழரசன், நிஹாரிகா, கஜராஜ், பால சரவணன், 'லொள்ளு சபா' சுவாமிநாதன் , ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், கருணாகரன், தீபா சங்கர்  தனலட்சுமி மற்றும் பலர்

இயக்கம் : இளங்கோ ராம்

மதிப்பீடு : 2 / 5

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உலக அளவிலான திரை ஆர்வலர்களின் கவனத்தையும்,  பாராட்டையும் பெற்ற டென்டிகோ  (Tentigo) எனும் திரைப்படத்தின் தமிழ் உருவாக்கம் தான் 'பெருசு'. இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு வெகுஜன பார்வையாளர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் நகரான தஞ்சாவூர் எனும் மாநகரத்திற்கு அருகே இருக்கும் ஒரத்தநாடு எனும் ஊரில் பெருசு @ ஹாலாஸ்யம் என்பவர்- அவரது வீட்டில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது இறந்து விடுகிறார். இவரது மூத்த மகன் சாமிக்கண்ணு ( சுனில்) - இளைய மகன் துரை ( வைபவ்) ஆகியோர் அந்த ஊரில் நற்‌பெயருடன் வாழ்ந்து வரும் தந்தைக்கு இறுதி சடங்கு செய்வதில் ஒரு சிக்கல் எழுகிறது. அந்த சிக்கலை அந்த குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

சடலத்தை வைத்துக்கொண்டு அவல நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்க படக் குழு கடுமையாக முயற்சி செய்திருக்கிறது. ஆனால் சிரிப்பிற்கு பதிலாக எரிச்சல் ஏற்படுகிறது. இறந்தவர்களை அதிலும் அவர்களுடைய அந்தரங்கங்களை பகடியாக விமர்சிப்பது .. படைப்பாளியின் சமூக பொறுப்பற்ற வக்ர பார்வையையே வெளிப்படுத்துகிறது. படைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் இருந்தாலும் ஒரு படைப்பிற்குள் செயற்கைத்தனமான விடயம் என்பது சிறிய அளவில்தான் இருக்க வேண்டும் என்பது மரபு. இங்கு மூல கதையும், கதை மாந்தர்களும் சிக்கலாகவும், அரிதானவர்களாகவும் வடிவமைத்திருப்பதும் பலவீனம்.

சகோதரர்களாக நடித்திருக்கும் அசல் சகோதர நடிகர்களான சுனில் - வைபவ் இவர்களில் மூத்தவரான சுனிலின் நடிப்பு கவனம்  ஈர்க்கிறது. வைபவ் மதுக்கு அடிமையானவராக நடித்திருக்கிறார். அப்பட்டமான செயற்கைத்தனம் தெரிகிறது.

பால சரவணன்-  முனீஸ் காந்த் கூட்டணி சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்கள். 

ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், விடிவி கணேஷ் போன்ற நட்சத்திர நகைச்சுவை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் சிரிப்பு மிஸ்ஸிங்.

திரைக்கதையில் சுவாரசியமான திருப்பம் இருந்தாலும், அடல்ட் கொமடி என்பதால் காமநெடி தூக்கலாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் உரையாடல் சவத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலை எளிமையாக விவரிக்க முயற்சி செய்தாலும் ரசிகர்களிடத்தில் படக்குழு எதிர்பார்த்த தாக்கம் ஏற்படவில்லை என்பதுதான் நிஜம்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம், என அனைத்து தொழில்நுட்ப பணிகளும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தரத்தில் இருக்கிறது.

படத்தை பட மாளிகையில் பார்த்த பெருசு ஒருவர், 'தம்பதிகளின் தாம்பத்திய குறைபாட்டிற்காக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படாத வயாகரா எனும் மாத்திரையை விளம்பரப்படுத்துவதற்காக இத்தனை கோடி ரூபாய் செலவில் படமெடுத்திருக்க வேண்டுமா..!? 'என குறிப்பிட்டார். இதை பலரும் ஆமோதிக்கிறார்கள்.

பெருசு - மொட்டை கோபுரம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right