அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது : சாணக்கியன்

15 Mar, 2025 | 06:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்டலந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு  எந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் செய்த படுகொலைகளும் தற்போது வெளிவருகின்றன. 

பட்டலந்த  அறிக்கையை உணர்வுபூர்வமாக பார்ப்பதை போன்று ஏன் தமிழர்கள் தொடர்பான அறிக்கைகளை உணர்வுபூர்வமாக பார்ப்பதில்லை. சர்வதேச அரங்கில் அநுர அரசாங்கமும் குற்றவாளிகளை பாதுகாக்கிறது. வெளிவிவகாரத்துறை அமைச்சரின் உள்ளக பொறிமுறை தீர்மானம் வெட்ககேடானதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15)   நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்    சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கத்தின்  கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் அதிருப்திக்குரியன. வெளிவிவகாரத்துறை அமைச்சர் தனது உரையில் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஏதோ குறிப்பிட வேண்டும் என்பதற்காக  ஒருசில விடயங்களை வரையறுத்துக் குறிப்பிட்டார்.  

உள்ளக பொறிமுறையின் ஊடாக  தீர்வு காண்பதாகவும்,தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதாகவும் குறிப்பிட்டார். இதுதான் காலம் காலமாக குறிப்பிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா  ஊடகத்துக்கு  வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்களை   சுட்டிக்காட்டுகிறேன். 

நாட்டை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு குற்றவாளிகளையே அனைவரும் பாதுகாக்கிறார்கள். யுத்தத்தின் போது வைத்தியசாலைகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் வடக்கில் பெரும்பாலான வைத்தியசாலைகள் மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

இதனையும் நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். வைத்தியசாலைகள் மீது  மிலேச்சத்தனமான முறையில்  குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டன என்பதற்கு தெளிவான சாட்சியங்கள் உள்ளன. ஏன் நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

இது தான் இந்த நாட்டின் பிரச்சினை .  குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ராஜபக்ஷர்களுக்கு வாக்களிக்கவில்லை. 

ஆனால் இந்த அரசாங்கத்துக்கு  வாக்களித்துள்ளார்கள். ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது. அதற்காக வெட்கப்படுங்கள்.

வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் உள்ளக பொறிமுறையில் தீர்வு என்று குறிப்பிடுகிறார். உள்ளக பொறிமுறையை தமிழ் மக்கள்  நிராகரித்துள்ளார்கள். எந்த பிரச்சினைக்கும்  உள்ளக பொறிமுறையின் ஊடாக  தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு இதில் நம்பிக்கை கொள்வது.

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையை  சபை முதல்வர் நேற்று  சபைக்கு சமர்ப்பித்தார். அறிக்கையின் உள்ளடக்கத்தை சபை முதல்வர் வாசிக்கும் போது சபாநாயகர் உணர்ச்சி பொங்கினார். அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

பட்டலந்த அறிக்கையை  சமர்ப்பித்ததை வரவேற்கிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைளை எடுங்கள், நீதியை நிலைநாட்டுங்கள். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பல அறிக்கைககள் இந்த பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பரணகம மற்றும் உதலாகம அறிக்கைக்கு  என்னாயிற்று, என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள். ஒன்றுமில்லை. இதனால் தான் எமது மக்கள் இந்த நாட்டில் நீதியை தொடர்ந்து கோருகிறார்கள்.

பட்டலந்த சித்திரவதை பற்றி பேசப்படுகிறது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான எமது மக்கள்  கொடூரமான முறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 

தமிழர்கள்  படுகொலை செய்யப்பட்டதுடன், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. 

தமிழர்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பற்றி எவரும் பேசுவதில்லை. தற்போது பட்டலந்த அறிக்கை பற்றி உணர்வுபூர்வமாக பேசுகின்றீர்கள்.

பட்டலந்த  விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்துள்ளதால் மாத்திரம்  குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாது.

 மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் பட்டலந்த  விவகாரத்தை தொடர்ந்து மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான விபரங்களும் தற்போது வெளிவருகின்றன.

உண்மையில் இந்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலானோர் விரும்பவில்லை. தற்போது  பட்டலந்த அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். பட்டலந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்பதை  உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பட்டலந்த அறிக்கையை  சபைக்கு சமர்ப்பிக்காவிடின்  முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சோசலிச கட்சியினர் மக்கள் விடுதலை முன்னணியை  மேலும் பிளவுப்படுத்தும்   என்ற அச்சத்தில் தான் தற்போது அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அனைத்துக்கும்  உணர்வுபூர்வமாக செயற்பட்டால் அது நன்றாக இருக்கும். இனவாதமில்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்த அரசாங்கம்  முழு இனவாதத்துடன் செயற்படுகிறது. 

கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களை இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிப்படையாக இனவாதத்துடன் செயற்பட்டார்கள். ஆனால் இவர்கள்  மறைமுகமாக இனவாதமாக செயற்படுகிறார்கள்.

தமிழர்களுக்கு  அரசியல் தீர்வு வழங்கலில் இந்த அரசாங்கமும் ஏமாற்றுகிறது. பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தோல்வி அடைந்த மற்றும் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளையே அரசாங்கம் பின்பற்றுகிறது.  இது மிகவும் வெறுக்கத்தக்கது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51