(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பட்டலந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கவும், எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்றை அமைப்பதற்கும், பொருத்தமான சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோமென சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
25 வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தின் இருண்ட களஞ்சியத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டலந்த அறிக்கை இன்று சூரிய ஒளியை காண்கிறது.இந்த அறிக்கையானது தாய் நாட்டின் உரிமைகளை பறித்தெடுத்தவர்களின் கொடூரத்தன்மை தொடர்பான அறிக்கை மாத்திரமன்றி, தமது அரசியல் நோக்கத்திற்காக நாடொன்று பல யுகங்களுக்கு முன்னர் இருந்து எவ்வாறு அழிக்கப்பட்டு வந்தது என்பது தொடர்பிலான சாட்சியாகவும் இருக்கும்
தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் குறிப்பிடதக்க கலந்துரையாடலை உருவாக்க பட்டலந்த வீட்டுத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு நிலையம் மற்றும் சித்திரவதை முகாமை நடத்திச் சென்றமை தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையின் நிலைப்பாட்டை இங்கு அறிவிக்க வேண்டியுள்ளது.
1988ஆம் ஆண்டில் 6/5 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி சர்வஜன வாக்கெடுப்பும் இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கொண்டுவந்தது.
ஆட்சிக்கு வந்த 1977ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் எதிரான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்ததுடன் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியவேளையில் 1978ஆம் ஆண்டில் பயங்காரவாத அடக்குமுறை சட்டம் போன்ற ஒடுக்குமுறை சட்டத்தை கொண்டு வந்து ஜனநாயக விரோதமான சட்டவிரோத செயற்பாடுகளை ஆரம்பித்தது. 1980ஆம் ஆண்டில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட இலட்சக் கணக்கான அரச ஊழியர்களின் தொழில்களை இல்லாமல் செய்தது.
அத்துடன் 1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி சபை தேர்தலை பச்சை பச்சையாக கொள்ளையடித்தது. அதன் பெறுபேறாக யாழ்ப்பாணம் நூலகத்தையும் தீ வைத்து அழித்தது.
இதேவேளை உரிய காலத்தில் நடத்த வேண்டிய பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தாது, சர்வஜன வாக்கெடுப்பு என்ற பெயரில் இலங்கை வரலாற்றில் ஊழல் மிக்க தேர்தலாக அது இருந்ததுடன், சர்வஜன வாக்குகளையும் கொள்ளையடித்து அதனூடாக பாராளுமன்ற அதிகாரத்தைதத மேலும் 6 வருடங்களுக்கு சட்டவிரோதமாக நீடித்துக்கொண்டது.
அதேபோன்று நாட்டின் ஜனநாயக ரீதியான தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மாணவர் சங்கங்கள், மதத் தலைவர்களை ஒடுக்கி 1983இல் கறுப்பு ஜுலையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு அப்போதிருந்த அரச தலைவர்களின் வழிநடத்தலிலேயே ஆரம்பிக்கப்பட்டதுடன், அது மூன்று தசாப்த சிவில் யுத்தத்திற்கு கொண்டு சென்றது.
அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டட கறுப்பு ஜூலையை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சிலவற்றை தடை செய்து அவற்றின் உரிமைகளை மீறியும், சர்வஜன வாக்குகளை கொள்ளைக்கு மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ரோஹன விஜேவீரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவையும் தள்ளுபடி செய்தும் 1983இல் ஆரம்பிக்கப்பட்ட சட்டவிரோத, ஜனநாயக விரோத ஒடுக்குமுறை ஆட்சி மற்றும் அரச பயங்கரவாதத்தை ஒரே ஆட்சி முறையாக மாற்றி கொலைகார சர்வாதிகார ஆட்சியாக செயற்பட்டு எந்தளவுக்கு திரிபுபடுத்தல்களை மேற்கொண்டு அந்த வரலாறுகளை மாற்றி எழுத முயற்சித்தாலும் மக்களே தமது வரலாற்றை எழுதி ஆரம்பித்த யுகம் கடந்த செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமாகியது என்பது உங்களுக்கு தெரியும்
1987 - 1990 சிவில் யுத்த காலத்தில் அரச தலையீட்டில் செய்யப்பட்ட குற்றங்களில் ஒன்றான பட்டலந்தவில் நடத்திச் செல்லப்பட்ட பெரியளவிலான கொலை முகாம் தொடர்பாக முன்னெடுக்கப்பபட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கவனம் ஏற்பட்டுள்ளது.
1977 முதல் 1994 வரையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தோற்கடித்து 1994இல் இந்த அரசாங்கத்தை தோற்கடித்து மீண்டும் ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக புதிய அரசாங்கம் உருவானது. இருண்ட யுகமாக இருந்த 17 வருடங்களில் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீதியை நிலைநாட்ட எதிர்பார்க்கப்பட்டது.
சூரியகந்த மனித புதைகுழி மற்றும் பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் அப்போதிருந்த தலைவர்களால் அவ்விடத்திற்குசென்று ஆராய்ந்த போது நீதி நிலைநாட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
இதன்படி 1995 செப்டம்பரில் பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத சித்திரவதை முகாம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இதன் இறுதி அறிக்கை 1988 மே 21ஆம் திகதி அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜீ.கே.ஜீ.பெரேரா என்பவரால் அப்போதைய ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்று உறுதிப்படுத்துகிறது.
இந்த அறிக்கை ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் சாட்சி பதிவுகளை கொண்டதாக உள்ளது. இங்கு சித்திரவதைக்கு உள்ளானவர்கள் தாம் சாட்சியமளிக்கும் போது சித்திரவதையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்த போதும் சாட்சியாளர்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அங்கு வந்து சாட்சியமளித்துள்ளனர்.
மனோராணி சரவணமுத்து போன்ற ஆயிரக் கணக்கான தாய்மார்களும், தந்தைமார்களும், பிள்ளைகளும், காதலன் - காதலிகளும் அந்த ஆணைக்குழுவின் முன்னால் மயங்கி விழுந்து சாட்சியமளித்து தமது அன்பானவர்களுக்கு நீதியை எதிர்பார்த்தனர்.
இதன்படி அதன் இறுதி அறிக்கை 1998 மே 22ஆம் திகதிக்கு முன்னர் அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளித்திருக்க வேண்டும். ஆனால் தேசிய ஆவண காப்பக திணைக்களதத்திற்கு பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலைலயில், இதன் பிரதி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்காமைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அத்துடன் 2000ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி அரச அச்சக திணைக்களத்திற்கு அறிவித்தலை விடுத்துள்ள அப்போதைய ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், குறித்த அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பெயர்ப்பை அச்சிடுமாறும், அதன்படி 500 சிங்கள பிரதிகளையும் 250 தமிழ் பிரதிகளையும் 2020 மார்ச் 27ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவற்றில் எதுவும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படாமை ஆச்சரியமாக உள்ளது. இதன்படி அந்த அறிக்கையை கோரியவர்களே உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவோ, அதன் பரிந்துரைகளை செயற்படுத்தவோ நடவடிக்கை எடுக்காது அதனை தேர்தல் காலத்தில் அரசியல் பந்தாக பயன்படுத்தியுள்ளனர் என்பதே தெளிவாகின்றது. அதேபோன்று அல்ஜெசீராவில் கூறப்படுவதைப் போன்று அது பாராளுமன்றத்திலேயும் முன்வைக்கப்படவில்லை.
1990இல் இருந்து 35 வருடங்களும் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களும், ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி 25 வருடங்களும் ஆகும் நிலையில், எமது கட்சி மற்றும் அமைச்சரவையினால் இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 25 வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தின் இருண்ட களஞ்சியத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அறிக்கை இன்று சூரிய ஒளியை காண்கிறது.
இந்த அறிக்கையானது தாய் நாட்டின் உரிமைகளை பறித்தெடுத்தவர்களின் கொடூரத்தன்மை தொடர்பான அறிக்கை மாத்திரமன்றி, தமது அரசியல் நோக்கத்திற்காக நாடொன்று பல யுகங்களுக்கு முன்னர் இருந்து எவ்வாறு அழிக்கப்பட்டு வந்தது என்பது தொடர்பிலும் அந்த அழிவுகளை வெளிப்படுத்துவதற்காக ஜனநாயக ரீதியில் கிடைத்த மக்கள் ஆணையை தமது வகுப்பு தோழர்களுக்காக பயன்படுத்தும் உயிராந்த சாட்சியாகவும் இருக்கும்.
அதேபோன்று 25 வருடங்களாக சூரிய ஒளி படாதவாறு களஞ்சியத்தில் இருந்த அறிக்கைக்கு நீதி, நியாய ஒளி கிடைப்பதன் ஊடாக அறிக்கையின் பரிந்துரைகளை நியாயமாக எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாக எதிர்கால சந்ததிக்கு சாட்சியாகவும் இருக்கும்.
1989இல் ரோஹண விஜேவீர அடங்கலாக ஆயிரக் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் எனது மனதிலும் இதயத்திலும் பதிவாகிய பெரிய சுமையொன்று உள்ளது. அது என்னிடம் மாத்திரமல்ல இலட்சக் கணக்கான எமது கட்சி உறுப்பினர்களின் மனங்களிலும், சரியான பக்கத்தில் இருக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்களின் மனங்களிலும் பதிந்த சுமையாக இருக்கும். அந்த சுமையில் ஒரு பகுதியை 2024 செப்டம்பர் 21ஆம் திகதி இறக்கி வைத்திருந்தாலும் இவர்களுக்கான நீதி கிடைப்பதன் ஊடக அதனை முழுமையாக இறக்கி வைக்க முடியும்.
அதனை, சர்வஜன வாக்கெடுப்பென்ற பெயரில் சட்டவிரோத வாக்கு கொள்ளையின் மூலம் இலங்கை அரச அதிகாரத்தை கொள்கையிட்டு, முழு நாட்டையும் சீர்குலைத்த பட்டலந்தவின் சித்திரவதை பிரதானி அடங்கலாக குற்றவாளிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே செய்ய முடியும்.
பட்டலந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கவும், இந்த அறிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்றை அமைப்பதற்கும், பொருத்தமான சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் இந்த பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் வாசிப்பதற்காக அதனை அச்சிடுமாறும் நான் சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் ஆணைக்குழு தொடர்பாக சாட்சியங்களுடனான 28ஆவது தொகுதியை இந்த பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM