தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை மாற்றுங்கள் ; இராதாகிருஸ்ணன் எம்பி கோரிக்கை

14 Mar, 2025 | 04:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார  சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை  (14) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்   பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெருந்தோட்ட பகுதியில் 10 பேச்சர்ஸ் காணியில் தனி வீட்டினை நிர்மாணிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சபையில்  உறுதிப்படுத்தியதை வரவேற்கிறேன். 

பெருந்தோட்ட பகுதிகள் 22 தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  ஒருசில தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் ஏதுமில்லை.

பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பிரதேசங்களில் வாழும் மக்களை  பாதுகாக்க வேண்டும். 

50 ஆண்டுகாலத்துக்கே பெருந்தோட்டங்கள்  தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மிகுதி 20 ஆண்டுகளில் இந்த தோட்ட கம்பனிகள் எந்த தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யபோவதில்லை.

 50 ஆண்டுகால குத்தகையை நீடிப்பதா அல்லது  இரத்துச் செய்வதா என்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.  

20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டத்தொழில்துறை முழுமையாக கைவிடப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன. ஆகவே  தோட்ட  கம்பனிகளுடன்   அரசாங்கம் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

பெருந்தோட்டங்களை அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாது. ஆகவே  குத்தகை வழங்கல் தொடர்பில் தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் விரைவாக பேச வேண்டும்.

பெருந்தோட்டங்களில் தற்போது  தோட்ட நிர்வாகிகள் தான்  ஆங்கிலேயர்களை  போன்று   ஆதிக்கம் கொள்கிறார்கள். தோட்ட மக்களின் நலன்கருதி  எந்த திட்டங்களையும்  தோட்ட கம்பனிகள் மேற்கொள்வதில்லை.

பொகவந்தலாவலை பகுதியில் உள்ள பொகவான தோட்டத்தில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீதியை அந்த தோட்ட முகாமையாளர்  மறித்துள்ளார். இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. 

ஆகவே  இவ்விடயம் தொடர்பில்  கவனம்  செலுத்துங்கள்.  தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும்.இலங்கை மின்சார  சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும்.இந்த முறைமையை மாற்றுங்கள்.

தோட்ட முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே 1700  ரூபா சம்பளத்தை வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

பெருந்தோட்ட பகுதிகளில் 64,740 தனி வீடுகள், 70,444  தனி லயன் அறைகள், 65,279 இரட்டை  லயன் அறைகள் மற்றும் 10,891  தற்காலிக வீடுகள் காணப்படுகின்றன.  

பெருந்தோட்டத்துறைகளில்  10 பேச்சர்ஸ் காணியுடன்  தனி வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதியின்  எண்ணக்கருவுக்கு அமைய  முன்னெடுக்கப்படும் கிளின் ஸ்ரீ லங்கா  செயற்திட்டத்தை பெருந்தோட்ட பகுதியில் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை :...

2026-07-13 12:26:34
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள்...

2026-07-13 12:22:38
news-image

காலி முகத்திடலில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன...

2026-07-13 12:22:28
news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

யக்கல பகுதியில் 5,000 லீற்றருக்கும் அதிக...

2026-07-13 12:22:14
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19