அபிலாஷனி லெட்சுமன்
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
“இசைப்பேரொளி” கலாநிதி ஆரூரன் அருணந்தியின் மாணவர்களும் வீணா கலா நிகேதன இசைப் பள்ளியின் இயக்குநர் சங்கீத வித்துவான் நந்தினி விஜயரத்தினத்தின் மாணவியும் இணைந்து நிகழ்த்திய காண்பதற்கும் கேட்பதற்கும் இனியதொரு வீணை மற்றும் மிடற்றிசை அரங்கேற்றம் சிறப்புக்குரியது.
கிருஷ்ணகுமார் - மாலினி தம்பதியின் புதல்வர்களான தில்ஷா மற்றும் மோஹித்ஷால் ஆகியோரின் வீணை மற்றும் மிடற்றிசை அரங்கேற்றம் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக (நெலும் பொக்குன) அரங்கில் நடைபெற்றது.
இந்த கலை நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய, சிறப்பு விருந்தினராக மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மாஸ் கெப்பிற்றல் தனியார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சக்தி ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒரே மேடையில் தில்ஷா மிக சிறப்பாக வீணை மீட்டியதையடுத்து, தாளம், ராகம் மற்றும் லயத்தோடு கம்பீரம் பொருந்திய குரலில் தில்ஷா மற்றும் மோஹித்ஷால் வழங்கிய மிடற்றிசையும் அரங்கத்தை மிளிரச் செய்தது.
இந்த அரங்கிலே மிருதங்கம் “கலாநிதி” திவ்யரூப சர்மா, கடம் “விசாரத” ஸ்ரீ.ரட்ணம் ரட்ணதுரை ஆகியோர் இணைந்து தில்ஷா வழங்கிய வீணையிசைக்கு இசை பங்களிப்பு வழங்கினர்.
தொடர்ந்து தில்ஷா மற்றும் மோஹித்ஷால் வழங்கிய மிடற்றிசைக்கு வயலின் ஸ்ரீ.பி.சியாமா கிருஷ்ணா, மிருதங்கம் “வாத்ய விசாரத” ஸ்ரீ.அபிநவ் ரட்ணதுரை, கடம் “விசாரத” ஸ்ரீ.ரட்ணம் ரட்ணதுரை ஆகியோர் இணைந்து பக்க இசை வழங்கினர்.
வீணாகானம்
ஆயகலைகள் ஈந்திடும் சரஸ்வதி அன்னை ஏந்தியிருக்கும் அற்புதமான இசைக்கருவியினை தன் கைகளில் ஏந்தி அழகாக வீணையினை மீட்டி அரிய இசை அனுபவத்தை வழங்கினார், தில்ஷா.
வீணை இசைக்கருவியினை முறையாகக் கற்று வாத்திய பங்களிப்புக்கு நிகராக வீணை மீட்டுவது என்பது எளிதான விடயம் அல்ல. அந்த வகையில் தில்ஷா வழங்கிய வீணை அரங்கேற்றம் ஒரு சாதனை என்று கூறவேண்டும்.
அரங்கிலே மீட்டப்பட்ட வீணை மார்க்கங்களான வர்ணம், க்ருத்தி, கீர்த்தனம் என அனைத்தையும் திறம்பட வீணையினால் மீட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தமை சிறப்பானது.
மாணவியின் ஆற்றல், பயிற்சி, தகைமை ஆய்ந்து அரங்கேற்றத்திற்குரிய கீர்த்தனைகளை, பாடல்களை தேர்ந்து எடுத்திருந்தமை வீணை மார்க்கங்களில் தென்பட்டன.
வீணை இசை கற்பித்தலில் ஆசிரியை நந்தினி விஜயரத்தினத்தின் பல நாள் அனுபவத்தை உணர்த்தப்பட்டதோடு, அரங்கேற்றச் செல்வியின் ஆற்றலையும் ஆசிரியையின் நெறியாள்கையில் அவர் மேற்கொண்ட ஆக்கபூர்வமான பயிற்சியையும் வெளிப்படுத்தின எனலாம். இந்த இடத்தில் சிறப்பாகக் குறிப்பிடவேண்டிய விடயம் இதுவாகும்.
வீணை இசையில் ஸ்வர கோர்வைகள் தாள வேறுபாடுகளுடன் மீட்ட போதெல்லாம் பக்க வாத்தியக் கலைஞர்கள் தாள உறுதியுடன் தத்தம் வாத்தியங்களை ஆர்வத்துடனும் ஆனந்தத்துடனும் இசைத்து அவையோரிடத்தில் பாராட்டை ஈட்டிக் கொடுத்தனர்.
வீணை வாத்தியத்தினை வெகு எளிதாக கையாண்டு தனது வாசிப்பில் காலப்பிரமாணம், இராகபாவம் என்பவற்றில் மிகவும் கரிசனை கொண்டவர் என்பதற்கு தியாராஜர் இயற்றிய “மீ வல்ல குண தோஷ மேமி...” என்ற க்ருத்தி அவரது வீணை மீட்டலுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.
நேரம் போவதே தெரியாமல் பார்வையாளர்கள் தம்மை மறந்து தில்ஷாவின் வீணாகானத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள் என்றே கூறவேண்டும்.
இசை நுணுக்கங்களை அறிந்து பாடல்களின் இராக, தாள வகைகளைத் தெளிவாக உள்வாங்கி வீணை வாத்தியத்தினை மிகவும் இலாவகமாகவும், உள்ளத்தால் அனுபவித்தும் இறுதியில் கீர்த்தனையுடன் வீணாகானத்தை நிறைவு செய்தார், தில்ஷா.
மிடற்றிசை
தொடர்ந்தும், அரங்கில் தில்ஷா மற்றும் மோஹித்ஷால் இருவரும் இணைந்து வழங்கிய மிடற்றிசையும் வீணை அரங்கேற்றமும் சிறப்பென்றே கூறவேண்டும்.
மனிதனது குரல் கூட ஓர் இசைக்கருவி என முன்னோர்கள் கூறியது பொய்யில்லை என்பதற்கு இந்த மிடற்றிசை அரங்கேற்றம் சான்றாக அமைந்தது.
நாட்டை இராகத்தில் அமைந்த “ஜெய ஜெய ஸ்வாமின் ....” என்ற மிடற்றிசை மார்க்கத்தை இருவரும் பாடியபோது, அது சபையோரின் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது.
சகோதரர்கள் இருவரதும் இசைப்பற்று, இசை ஞானம் புலப்படும் வண்ணம் ஆரூரன் அருணந்தி நிகழ்வை நெறியாள்கை செய்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
ஆரூரன் அருணந்தி தொடர்ந்து 40 மணிநேர நீண்ட தொடரிசை மூலம் இசைத்துறையில் உலக சாதனை படைத்த முதலாவது இலங்கையர், தமிழர், பிரபல கர்நாடக சங்கீத கலைஞர், இசைத்துறை விரிவுரையாளர் ஆவார். இவரது நெறியாள்கையில் சிறப்புற மேடையேற்றப்பட்ட இசை கச்சேரிகள் பல.
அந்த வகையில் தில்ஷா மற்றும் மோஹித்ஷால் ஆகிய இருவரது அரங்கேற்றமும் அவர்களது கலைப் பயணத்துக்கு படிக்கல்லாக அமைந்தது.
சகோதரர்கள் இருவரும் இணைந்து சபையோரை தன்வசப்படுத்தி இசையால் மகிழ்வித்து பாடிய ஒவ்வொரு பாடலும் இனிமையானது.
ஒரு கலைஞனின் இசைஞானம் ராகம், தானம், பல்லவி பாடும்போது புலப்படும். இதனை பாடும்போது உருப்படிகளின் நிறைவை சரியாக பூர்த்தி செய்து ஸ்வரங்களில் உள்ள கோர்வைகளை அழகாக பாடி நிறைவு செய்தமை இருவரது இசை ஞானத்தை வெளிப்படுத்தியது.
எத்தனையோ ஆற்றல் மிக்கவர்கள் பல பயிற்சிகளை மேற்கொண்டு தங்களது அரங்கேற்றத்தை ஆரம்பித்தாலும் சிறதளவேனும் தடுமாற்றம் இருந்தே தீரும்.
ஆனால் ஒரே மேடையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து தடுமாற்றம் இல்லாமல் பக்கவாத்தியத்தின் இசைக்கும் சமமாக ஒன்றாக பாடி இசைக்கு தன் குரலை அர்ப்பணித்தனர் என்றே கூறவேண்டும்.
தொடர்ந்து, வாணி சரஸ்வதியின் கலை அருளும், திருவருட்கடாட்சமும், பரந்த இசைஞானமும் இருந்தால் மட்டுமே இந்த இசைக்கலை கைகூடும். இந்நிகழ்வில் பெற்றோரையும் குருவினையும் மகிழ்வித்து தன் இசை அரங்கேற்றத்தை தில்ஷா மற்றும் மோஹித்ஷால் ஆகிய இருவரும் இனிதே நிறைவு செய்தார்கள்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய , அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆகியோர் உரையாற்றினார்கள்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய
“சிறப்புமிக்க திறமை வாய்ந்த உடன்பிறப்புகளான தில்ஷா கிருஷ்ணகுமார் மற்றும் மோஹித்ஷால் கிருஷ்ணகுமார் ஆகியோரின் மிடற்றிசை - வீணை அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்வது ஒரு முழுமையான மரியாதை மற்றும் பாக்கியமாக நினைக்கின்றேன்.
பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தெய்வீக கலையான இசையின் மீது கொண்ட பக்தி ஆகியவற்றின் உச்சக்கட்டத்தை காண்கிறோம். தில்ஷாவின் வீணை நிகழ்ச்சி, இந்த பழமையான, ஆத்மார்த்தமான இசைக்கலையின் மீதான உங்கள் தேர்ச்சிக்கு சான்றாகும்.
இருவரினதும் திறமை கடின உழைப்பையும், உங்கள் குருக்களின் வழிகாட்டுதலையும் பறைசாற்றுகிறது.
தில்ஷா மற்றும் மோஹித்ஷால் இருவருக்கும் இந்த அரங்கேற்றம் ஒரு மைல்கல் மட்டுமல்ல, இசையில் ஒரு வாழ்நாள் பயணத்தின் ஆரம்பமாகவும் இந்த மேடையில் அமையட்டும்.
உங்கள் திறமையை வளர்த்து, இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த உங்கள் பெற்றோர், குருக்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
“தில்ஷா மற்றும் மோஹித்ஷால் இந்த அரங்கேற்றத்தில் பங்கெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கிறது.
இவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் மற்றும் அழகியல் கலைகளிலும் சிறந்து விளங்குவதை கண்கூடாக காணக்கிடைக்கிறது.
வளர்ந்து வருகின்ற நவீன யுகத்திலே பிள்ளைகளை தவறான வழியில் செல்லவிடாது நல்வழியில் ஆற்றுப்படுத்துகின்ற பெற்றோர்கள் பெருமைக்குரியவர்கள். இந்த அரங்கேற்றம் ஒரு தனித்துவமானது. ஏனென்றால், ஒரே மேடையில் இரு விதமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளமை சிறப்பு.
இவர்களை சிறப்பான முறையில் வழிநடத்துகின்ற குரு கலாநிதி ஆரூரன் அருணந்தி, நந்தினி விஜயரத்தினம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தக் குழந்தைகள் மென்மேலும் கலைகளிலும் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும். நாட்டிலே சிறந்த பிரஜையாக வலம் வர வேண்டும்” என்றார்.
வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி
“வீணை மற்றும் மிடற்றிசை” அரங்கேற்றத்தில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
தற்போதைய பரபரப்பான காலத்தில் சமூக ஊடகங்களில் சிக்கி தவிப்பதை தவிர்த்து இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறான அரங்கேற்றத்தை நிகழ்த்துவதற்கு துணையாக நின்ற குருக்களுக்கும் பெற்றோருக்கும் எனது பாராட்டுக்கள்.
தில்ஷா மற்றும் மோஹித்ஷால் இருவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுக்களை கூற கடமைபட்டுள்ளேன் . மனதுக்கு அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய வகையில் இந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டமை சிறப்புக்குரியது.
இந்த மகிழ்வான தருணத்தில் என்னை அழைத்து அரிய இசை அரங்கேற்றத்தை கண்முன் காட்டிய தில்ஷா மற்றும் மோஹித்ஷால் இருவரும் இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM