நான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேனா இல்லையா என்று எனக்கே தெரியாது. தெரிவுக்குழு என்னை அணியில் இணைத்தால் விளையாடுவேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்தார்.

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் கிண்ணத தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தமையினால், அத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று நாடு திரும்பியது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே லசித் மலிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேனா இல்லையா என்று எனக்கே தெரியாது. தெரிவுக்குழு என்னை அணியில் இணைத்தால் விளையாடுவேன். எனினும் தற்பொழுது நுவன் பிரதீப், சுரங்க லக்மால், குலசேகர, திஸர போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கின்றனர்.

எனக்கு இப்பொழுது 33 வயதாகின்றது. நான் முன்னர் பல சாதனைகளைப் படைத்துள்ளேன். எனினும் இப்பொழுது முடியாமல் உள்ளது. ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இருந்தபோதிலும் நான் தற்போது போட்டிகளை வெற்றி பெற வைக்கும் பந்து வீச்சாளராக இல்லை. எனது முன்னைய திறமை என்னிடம் இருக்கின்றது என நான் நினைக்கவில்லை.

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பிடியெடுப்புக்களை தவறவிட்டபோது எனக்கு கோபம் வரவில்லை. நான் இதைவிட அதிகமான பிடியெடுப்புக்களை தவறவிட்டுள்ளேன். எந்த ஒரு வீரரும் சிறப்பாக செயற்படும்போது அது குறித்து கதைக்காத ரசிகர்கள், வீரர்கள் தவறுவிடும்பொழுது அது குறித்தே கதைப்பதை ஏற்க முடியாது. அதேபோன்று, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் களத் தடுப்பில் சில தவறுகள் விடப்பட்டாலும், ஒரே அணியாக நாம் சிறந்த முறையில் செயற்பட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க காயம் காரணமாக சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக விளையாடாது இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு -20 தொடரில் விளையாடியிருந்தார்.

இதேவேளை, மலிங்க சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடியதன் மூலம் 19 மாதங்களின் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணியில் இணைந்துகொண்டார்.

சும்பியன்ஸ் தொடரில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் லசித் மலிங்க மொத்தமாக 3 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.