உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சியை எப்போது செய்வது சிறந்தது ?

Published By: Digital Desk 2

13 Mar, 2025 | 05:17 PM
image

அனேகமானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு முறைகளை முயற்சி செய்கிறார்கள். அதில் நடைப்பயிற்சியும் முக்கியமான ஒன்று. நடைப்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது நல்லதா? சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது உடல் எடை குறைப்பு செயல்முறையை விரைவுபடுத்துமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.

நடைப்பயிற்சிக்கு உகந்த நேரம் எது என்பதை வரையறுப்பதில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. சிலர் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை ஆதரிப்பார்கள். ஒரு சிலரோ உணவு உட்கொண்ட பிறகு நடப்பதற்கு பரிந்துரைப்பார்கள்.

இந்த இரு வகையான நடைப்பயிற்சிக்கும் இடையேயான மாறுபாடு, எப்போது நடப்பது சிறந்தது என்பது பற்றி பார்ப்போம்.

வெறும் வயிற்றில் நடப்பது, 

நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். இப்படி தொடங்குவதற்கு அதிகபட்சமாக, ஒரு கிளாஸ் தண்ணீரை உட்கொள்வதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது, சுமார் 10-14 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, வேகமான நடைப்பயிற்சி செய்வதற்கு சமம் அழைக்கப்படுகிறது. எனவே வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிற்றில் நடப்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும். குறிப்பாக உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். இவை உடல் எடை இழப்புக்கு அவசியமானவையான கருதப்படுவதோடு, வெறும் வயிற்றில் நடப்பது மனத்தெளிவை மேம்படுத்தவும் உதவும்.

வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யும் போது, இன்சுலின் அளவு பொதுவாக குறைவாக இருக்கும். இது உங்கள் உடலை ஆற்றலுக்காக சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை சிறப்பாக திரட்டவும் பயன்படுத்தவும் அனுமதிக்கும். இது எடை இழப்புக்கு உதவும்.   

சாப்பிட்ட பின்பு நடப்பது,

உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். செரிமான பாதை வழியாக உணவு செல்லும் செயல்முறையை துரிதப்படுத்தி, விரைவாக செரிமானம் நடைபெறுவதற்கு ஊக்குவிக்கும்.

அதனால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது  உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவிடும்.

உணவுக்குப் பிறகு நீங்கள் நடைப்பயிற்சி செய்யும்போது, உங்கள் உடல் ஆற்றலுக்காக நீங்கள் உட்கொண்ட உணவில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது.

இதன் போது, உங்கள் உடலில் எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றலுக்கு ஆதாரம் உள்ளது.

இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

சாப்பிட்ட பிறகு நடப்பது கலோரிகளை எரிக்கவும் வழிவகை செய்யும். அதிலும் உடல் எடை குறைவதற்கு அவசியமான கலோரிகளை எரித்து அந்த செயல்முறைக்கு பக்கபலமாக அமைந்திருக்கும்.

இவற்றில் எது சிறந்தது?

இந்த இருவிதமான நடைப்பயிற்சிகளுமே உடல் எடை குறைவதற்கு உதவிடுகின்றன. எனினும் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருப்பவர்களுக்கு வெறும் வயிற்றில் மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சியே சிறந்ததாகும்.

செரிமான பிரச்சினை கொண்டவர்கள் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் இந்த நடைப்பயிற்சி உதவிடும்.

அதேவேளையில் தினசரி பழக்கவழக்கம், உடல் எடை அளவு, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி முறை உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டும், உடற்பயிற்சி-ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கலந்தாலோசித்தும் உங்களுக்கு பொருத்தமான நடைப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right