படவா - திரைப்பட விமர்சனம்

12 Mar, 2025 | 11:29 AM
image

படவா - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : J ஸ்டுடியோ இன்டர்நேஷனல்

நடிகர்கள்: விமல் , சூரி,  ஸிரித்தா ராவ், 'கே ஜி எப்' ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், சாம்ஸ் மற்றும் பலர்.

இயக்கம் : கே. வி. நந்தா

மதிப்பீடு : 2/5

நடிகர் விமல்- சூரி கூட்டணியில் உருவான படம் என்பதாலும், பி அண்ட் சி என திரையுலக வணிகர்களால் குறிப்பிடப்படும் சிறு நகர மற்றும் கிராமிய ரசிகர்களின் ரசனைக்குரிய படைப்பு என்பதாலும், இந்த 'படவா' படத்திற்கு பார்வையாளர்களிடம் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக் குழுவினர் நிறைவேற்றினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழக கிராமம் ஒன்றில் வேலை வெட்டிக்குச் செல்லாமல் பொறுப்பற்ற இளைஞர்களாக விமலும், சூரியும் திரிகிறார்கள். இவர்கள் மது அருந்தினால் ஊர் மக்களை - அவர்களின் அமைதியையும், நிம்மதியையும் குலைத்து விடுகிறார்கள்.

இதனால் ஒன்று திரண்ட ஊர் மக்கள் ..இந்த இருவரில் விமலை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். அந்த ஊரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நபரை சந்தித்து விமலை ஊரை விட்டு... நாட்டை விட்டு.. வெளிநாட்டுக்கு கடத்த வேண்டும் என தங்கள் விருப்பத்தை சொல்ல.. அவரும் ஆமோதித்து, மலேசியாவிற்கு விமலை பார்சல் செய்கிறார்.

மலேசியாவில் மதுபானக் கூடம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றும் விமல்.. ஒராண்டிற்குள் அந்நிறுவன மேற்கொள்ளும் ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்து ஊருக்கு திரும்புகிறார். திரும்பும் போது அவருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைக்கிறது. விமலுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. 

அதற்குப் பிறகுதான் மலேசியாவில் உள்ள அவனது நண்பன், சூரிக்கு போன் செய்து, விமலுக்கு மலேசியாவில் லொத்தரில் இந்திய மதிப்பில் பத்து கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது என பொய் ஒன்றை சொல்லிவிட்டார் என விமலுக்கு தெரிய வருகிறது. இதனால் ஊரில் விமலை அனைவரும் விழுந்து விழுந்து உபசரிக்கிறார்கள். 

அவரிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளதால்ஊர் தலைவர் பதவியும் தேடி வருகிறது. தன் காதலியின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து மலேசியாவிற்கு சென்ற விமல் அங்கிருந்து வேலை இழந்து ஊர் திரும்பிய கவலையில் இருக்க...  தன் நண்பன் சொன்ன பொய்யால் ஊர் மக்கள் வரவேற்பு அளித்து, ஊர் தலைவர் பதவியை வழங்க, எப்போது உண்மை தெரிந்து விடுமோ..!? என கவலை அடைகிறார். ஆனால் அந்தப் பதவியை வைத்துக் கொண்டு ஊரில் நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறார். 

குறிப்பாக தங்களுடைய மண்ணில் விவசாயம் மடிந்து போனதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதனை மீட்டு மீண்டும் விவசாயத்திற்காக பயன்படும் நிலமாக மாற்றி அமைக்கிறார். 

இந்த தருணத்தில் ஊரில் நிலம் மாசு அடைந்ததால் செங்கல் சூளையை வைத்து வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் 'கே ஜி எஃப்' ராம்  வாழ்க்கையில் தடை ஏற்படுகிறது. 

இதனால் கே ஜி எஃப் ராமிற்கும், விமலுக்கும் நேரடி மோதல் ஏற்படுகிறது. இவர்களில் யார் வென்றார்கள்? என்ற என்பதுதான் இப்படத்தின் கதை.

தமிழக பகுதிகளில் குறிப்பாக வறட்சி பாதித்த மாவட்டங்களில் சீமகருவேல மரங்களால் மண்மலடாகிறது என்ற அறிவியல் பூர்வமான உண்மையை முதன்மையான கதையாக யோசித்து அதற்காக கலகலப்பான திரைக்கதையை வழங்கிய இயக்குநரை ஒரு பிரிவினர் பாராட்டுகிறார்கள். 

ஆனால் இந்த விடயத்தை நேரடியாக பிரச்சார பாணியில் விவரித்து... ரசிகர்களுக்கு கருத்து ஊசியை வலிந்து திணித்திருப்பதால்.. ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது.

முதல் பாதியில் விமலும், சூரியும் நடத்தும் கலாட்டா பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. குறிப்பாக சாதாரண நாட்களில் இரவு நேரத்தில் பட்டாசை கொளுத்தி ஊர் மக்களின் உறக்கத்தை கெடுக்கும் காட்சி ரசனை.

விமல் வழக்கம் போல் நடிக்க முயற்சிக்காமல் தன்னிடம் என்ன உள்ளதோ அதை கொடுத்து ரசிகர்களை சமாதானம் செய்கிறார். சூரி வழக்கமான கொமடிகளால் ரசிக்க வைக்கிறார். அதிலும் குறிப்பாக கழிவறையில் அவர் படும் பாடு சிரிப்பை வரவழைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஸிரித்தா ராவ் வழக்கமான நாயகியாக வருகிறார். முதல் இருக்கை ரசிகர்களை கூட கவராமல் செல்கிறார்.

பாடல்களை தயாரிப்பாளரான ஜோன் பீற்றர் இசையமைத்திருப்பதால் அவை பழைய 90 களின் பாடலாக இருப்பதால்.. ஒரு பிரிவு ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஒளிப்பதிவு - காட்சி உருவாக்கம் - என அனைத்திலும் சிறிய முதலீட்டு திரைப்படம் என்பது  பட்டவர்தனமாக தெரிகிறது.

படவா - முன்பாதி கலகல.. பின்பாதி நறநற 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-18 21:38:39
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40