வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதினை அடுத்து  வடக்கு மாகாண சபையின் இடைக்கால முதல்வர் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வட மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் மொத்தமாக வட மாகாண சபையின்  21 உறுப்பினர்களின்  கையெழுத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று நள்ளிரவு கையளிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற வடக்கு வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வில்  விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவும் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன், பா.சத்தியலிங்கம் இருவரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளமையின் பின்னரே குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது தொடர்பில் இன்று யாழ்.தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.