ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில வரிகள்…

11 Mar, 2025 | 12:24 PM
image

இ.கிருஷ்ணகுமார் 

அப்போது நான் பாரிஸில் இருந்தேன். 1985 என நினைக்கிறேன். நான் நினைத்து வந்த நகரமாக பாரிஸ் அப்போது இருக்கவில்லை. மொழி தெரியாத நிலையில் வேலை தேடியலைந்து களைத்துப் போய் 'இனிச் சரிவராது... நமது நாட்டுக்கே திரும்பி போய்விடுவோம்’ என்ற மனநிலையில் பாரிஸின் தெருக்களில் எல்லாம் அலைந்து திரிந்தேன். பாரிஸில் எனக்கு சந்தோஷத்தை தந்த ஒரே விடயம்  அங்கிருந்த நூலகங்களும் ஓவியக் கூடங்களும்தான்.  

உலகிலேயே மிகச் சிறந்த ஓவியர்களையும் ஓவியக் கூடங்களையும் அருங்காட்சி சாலைகளையும் கொண்ட  மிகச் சிறந்த நகரமாக பாரிஸ் அன்றும் விளங்கியது. இன்றும் விளங்குகிறது. உண்மையில் எனக்கு ஓவியம் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், பல ஓவியர்களின் கண்காட்சிகளை கண்டபோது மகிழ்வாக இருந்தது. குறிப்பாக பாரிஸில் இருந்த பொம்பிடு சென்டர் (National Georges Pompidou Centre of Art and Culture) என்ற நவீன கலாசார நிலையம் எனது ஓய்வு உறைவிடங்களில் ஒன்றாக மாறிப்போனது. ஆறு மாடிகளை கொண்ட கண்ணாடி மற்றும் இரும்பிலான பின் நவீனத்துவ கட்டடம் அது. வேலை தேடிவிட்டு களைத்துப்போய் அந்த கலாசார நிலையத்துக்கு செல்வேன். அது மனதுக்கு மகிழ்வைத் தந்தது. கீழ்த்தளத்தில் ஓவியக் காட்சிச் சாலை இருந்தது. அங்கு கடந்த கால, நிகழ்கால ஓவியர்களின் காட்சிப்படுத்துதல் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கும். ஒவ்வொரு மாதமும் புதிது புதிதான ஓவியக் காட்சிகளையும் ஓவியர்களின் சந்திப்புகளும் நடைபெறும். இதை விட நூலகம், உரையாடல் மண்டபம், சினிமா அரங்கு என ஒவ்வொரு தளங்களிலும் ஏதோவொரு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இலங்கையில் இருக்கும்போது இது பற்றி எல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது.  ஆனால் எனது எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஓவியக்காட்சிகள் மற்றும் திரைப்பட விழாக்கள் போன்ற நிகழ்வுகள் மாற்றியிருந்தன. 

நான் வெளிநாட்டுக்கு வந்ததால் மிஞ்சப்போவது இந்த எண்ணங்களும் காட்சிகளும் தானா என்று என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது.  ஒரு வகையில் அதுவே எனக்கு வழங்கப்பட்ட கொடையோ வரமோ என்றுதான் எண்ணினேன்.  கையில் காசு பெரிதாக இல்லை; ஆனாலும் ஏதோ ஒரு வகையில் மகிழ்வான வாழ்வாக இருந்தது. யாருமற்று தனிமையில்,  வெளியில் அலைந்து திரிவது கூட ஒரு பெரிய அனுபவம்தானே.  

இந்த வேளையில் தான் இலங்கையில் பத்மநாப ஐயரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ‘நாங்கள்  தமிழியல் ஊடாக ஓவியர் மாற்கு மாஸ்டருக்கு ஒரு சிறப்பு நூல் வெளியிட முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம்.  உங்களால் முடிந்த நிதி பங்களிப்பை வழங்க முடியுமா?' என்று கேட்டு எழுதியிருந்தார். அப்போது எனக்கு பெரிதாக நண்பர்கள் இல்லை. முக்கியமான நண்பராக என்னோடு ஒத்துப்போகக் கூடியவராக இருந்தவர் நண்பர் ‘காலம்’ செல்வமும்  அவர்கள் ஊடாக அறிமுகமான சில  நண்பர்களும்தான்.  

நான் கடிதத்தை நண்பர் செல்வத்துக்கு காட்டினேன்.  “என்னிடமும் பெரிதாக ஒன்றும் இல்லை.  ஒருமுறை நண்பர் சபாலிங்கத்திடம்  செல்வோம். அவருடன் ஆலோசித்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம்” என்று சொன்னார். சபாலிங்கம் சொன்னார் “என்னால் முடிந்த உதவியை நான் செய்வேன். கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் தானே யாழ்ப்பாணத்துக்கு புறப்படுவதாக இருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நான் தரும் பணத்தை ஐயரிடம் சேர்ப்பியுங்கள். அதை எமது பங்களிப்பாக வைத்துக்கொள்ளட்டும்” என்றார்.  அது  ஓரளவுக்கு மனதுக்கு நிறைவாக இருந்தது.  இதுதான் மாற்கு மாஸ்டர் பற்றி எனக்கு அறிமுகமான தருணம்.

பிறகு நான் பாரிஸில் இருந்து 1986இல் யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்டேன். வந்தவுடன் எனக்கு வேலை கிடைத்துவிட்டது. நான் ஏற்கனவே பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்தமையால் குருநகரில் இருந்த யாழ்ப்பாண மாநகர சபை பொது நூலகத்தின் குருநகர் கிளைக்கு என்னை நூலகராக நியமித்தார்கள். அந்த நூல் நிலையம் மாற்கு மாஸ்டர் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தது. நூலகத்துக்கு எதிரே யேசுராசாவின் வீடு. சற்று தள்ளி புஸ்பராஜனின் வீடு. இதுவும் ஒரு கொடுப்பினை தான் என்று எண்ணியபடி மகிழ்வாக வேலை செய்துகொண்டிருந்தேன். அனேகமாக வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ வேலைக்குப் போகும்போது அல்லது வரும்பொழுது மாற்கு மாஸ்டரின் வீட்டுக்குச் செல்வது ஒரு வழக்கமாகிப் போய்விட்டது. அவர் புதிதாக வரைந்த ஓவியங்களை பார்த்துக்கொண்டிருப்பேன். அதேபோல் அவரிடம் இருக்கும் சிற்பங்களையும் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் தான் மாற்கு மாஸ்டர் கழிவுப் பொருட்களில் இருந்து அற்புதமான புதிய கலைப் பொருட்களை உருவாக்கிக்கொண்டிருந்தார். அவை பார்ப்பதற்கு மிக அழகாகவும் கலைத்துவமாகவும் இருக்கும். பாவித்து முடிந்த பின் வீசப்படும் ஷாம்பூ போத்தல்கள், சிறிய நடுத்தர பிளாஸ்டிக் உபகரணங்கள் போன்ற உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு உயர்ந்த தரமான கலைச் சின்னங்களை ஆக்கிக் கொண்டிருந்தார். 

ஏற்கனவே கோட்டோவியத்தில் மிகச் சிறப்பான பரிச்சயம் உள்ள மாற்கு மாஸ்டருக்கு இந்த கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் இன்னும் ஒரு படி மேலே போய் மிக அழகான படைப்புகளாக அமைந்தன. சைக்கிள் ஹான்டில் பாரையும் சைக்கிள் சீற்றையும் கொண்டு பிக்காசோ உருவாக்கிய ‘மாட்டுத்தலை’ சிற்பத்தை நினைவூட்டியது. சாதாரண மக்கள் கூறும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது. மாற்கு மாஸ்டரின் ஆழ்ந்த அர்த்தத்தில் கூறுவதாயின் ‘எதை எண்ணுகிறாயோ எதை  உணருகிறாயோ அதைப்  படை.  ஊடகம் ஒரு தடையே இல்லை.’ 

மாற்கு மாஸ்டரின் கலைக்கூடம் ஒரு உயிர்த்துடிப்பான இடமாக இருந்தது. மாஸ்டர் யாரையும் கடிந்துகொள்ள மாட்டார். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் ஓவிய பயிற்சி வகுப்புகள் நடக்கும். எந்த ஒரு மாணவரிடமும் அவர் காசு பெற்று படிப்பித்ததாக ஞாபகம் இல்லை. தாங்களாகவே தேடி வரும் மாணவர்களுக்கு அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விட்டு அவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வளர்த்தெடுத்து ஊக்குவிப்பதே அவர் வேலை. எனது அயலவரான சீதா எனும் பிள்ளை மிகச் சாதாரணமாக ஓவியம் வரையக்கூடியவர்.  அவரை ஒரு உயர்ந்த பெறுமதி மிக்க ஓவியராக மாஸ்டர் மாற்றியிருந்தார்.  இதே போலத்தான் வாசுகி, அருந்ததி போன்ற பல ஓவியர்கள் அங்கு வந்து செல்வதை கண்டிருக்கிறேன். தன்னை எப்போதுமே முன்னிலைப்படுத்தாதவர் மாற்கு மாஸ்டர். பல்வேறு வகையான கஷ்டங்களுக்கு மத்தியில் தனது ஓவிய வாழ்வை வாழ்ந்தவர்.

இந்தத் தருணத்தில், அந்தக் கால ஆசிரியர்கள் பற்றி இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டேயாக வேண்டும். இவர்கள் ஆசிரியத்துவத்தை மனதார நேசித்தவர்கள். தாமே விரும்பித் தேர்ந்தெடுத்த ஒரு துறையாக மதித்தார்கள். அதை வெறுமனே சம்பளம் பெறும்  தொழிலாகப் பார்க்கவில்லை. கல்வியை ஒரு விற்பனைப்பண்டமாக அவர்கள் என்றுமே எண்ணியதில்லை. தம்மை ஒரு வழிகாட்டியாக, முன்னுதாரண புருசர்களாக தாமே வாழ்ந்து காட்டினார்கள். 

யாழ்ப்பாணத்தில் அப்படியான ஒரு ஆசிரிய பாரம்பரியம் தொடர்ச்சியாக இருந்துவந்தது.  ஹன்டி பேரின்பநாயகம், மு. கார்த்திகேசன், ஏ.ஜெ. கனகரத்தினா, சபாரத்தினம் மாஸ்டர், மயிலங்கூடலூர் நடராஜன், ஒறேற்றர் சுப்பிரமணியம், சொக்கன், க.பே. முத்தையா, அளவெட்டி சண்முகசுந்தரம் மாஸ்டர், அதிபர் ஜெயரத்தினம் என ஒரு நீண்ட தொடரான பட்டியலே உண்டு.  மாற்கு மாஸ்டரும் அவ்வழி வந்தவரே. 

ஒரு முறை மாஸ்டரிடம் கேட்டேன் ‘நாங்களும் சுவரோவியங்களை பாடசாலை, நூலகங்கள் போன்ற பொது இடங்களில் வரையலாம்தானே.’ ‘ஆம் எனக்கும் அது விருப்பம்தான். ஆனால் அதற்கான செலவை ஏற்கும் மனநிலை கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்? என்றார். 

எம்மிடம் ஒரு சுவரோவிய பாரம்பரியம் இருந்தது. பழைய பாங்ஷால் வீதி கிட்டங்கி சுவர்களில் இருந்ததை எனது சிறு பராயத்தில் கண்டிருக்கிறேன்.   

யாழ்ப்பாணப் புகையிரத நிலையம் யுத்தம் முடிந்த 2010ஆம் ஆண்டின் பின் புனரமைக்கப்பட்டு அதன் நிலக்கீழ் சுரங்க நடைபாதை சுவர்களில் அழகான கடல் ஓவியம் ஒரு பிரெஞ்சு ஓவியரால் வரையப்பட்டிருந்தது. கடலுக்குள்ளாக செல்லும் உணர்வை ஏற்படுத்தியது அவ்வோவியம். அதைப் பார்க்கும்போது மாற்கு மாஸ்டர் என் நினைவுக்கு வந்தார்.

மாற்கு மாஸ்டர் தனது உச்ச நிலைப் படைப்புருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில்தான் யாழ்ப்பாணம் மிக மோசமான ஷெல் வீச்சுக்களையும், வான் தாக்குதல்களையும் எதிர்கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக குருநகரில் எப்போது குண்டு விழும் என்று யாருக்குமே தெரியாது. எங்கு சண்டை நடந்தாலும் கடைசிக்குண்டை குருநகரிலே கொட்டிவிட்டுப் போகும் போக்கு படையினருக்கு இருந்தது. நானே பல தடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். இதைவிட இயக்க மோதல்கள் ஒருபுறம். எல்லா முகங்களுமே சிதைவுற்றுப் போயிருந்தன அல்லது இயல்பற்றுப் போயிருந்தன. ஆனாலும், நாளாந்த வாழ்க்கை இயல்பானதாகவும் சந்தோஷமானதாகவும் நுண்ணுணர்வுகள் உள்ளதாகவும் இருந்து கொண்டுதான் இருந்தன. 

இந்த எண்ணப்படிமங்கள் அனைத்தும் மாற்கு மாஸ்டரின் ஓவியங்களில் தெரிந்தன. அவருடைய கோடுகளில் உயிர்த்துடிப்பு இருந்தது. வளைவாகவும் இருந்தன. நேர்க்கோடுகளும் இருந்தன. அதனூடாக தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தி நின்றார். மாற்கு மாஸ்டர் முறையாக ஓவியம் பயின்றவர். எனக்கு ஓவியம் பற்றி ஒன்றுமே தெரியாது. ஒரு சாதாரணன். ஆனால், அவருடைய ஓவியங்கள் என் மனதை உலுக்கிச் சென்றன. அவருடைய முகமற்ற அல்லது முகம் சிதைந்த மனித ஓவியங்களும் சிற்பங்களும் பிகாசோவை நினைவூட்டின. 

இயேசு குறித்த அவரது ஓவியங்கள் மிகச் சிறப்பானவை. ‘சத்தியத்திற்காக’ என்ற சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஒவியம் மிகவும் உயித்துடிப்பானது. இடுப்பு வளைந்து வேதனையில் தொங்கும் அந்த காட்சி மனதை உலுக்குவது. பாவங்களுக்காக வலி சுமக்கும் வேதனை அதில் துல்லியமாக வெளிப்படுகிறது.

அது போன்றே வீணை இசையில் கரையும் கலைஞரை ‘கரைதல்’ என்ற ஓவியத்தில் காணலாம். உயிர்த்துடிப்பான ஓவியம் இது.  இசையில் கரையும் உணர்வை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கிறது. இங்கு முகத்தில் பாவங்கள் இல்லை. முகச்சரிவிலும் இசை. அது உற்றுக் கேட்கும் செயலிலும் சிறப்பான வெளிப்பாடு தெரிகிறது. அற்புதமான ஓவியம் இது. 

‘தாய்மை’ என்ற ஓவியம் நேர்கோடுகளாலும், முக்கோண வளைவுகளாலும் ஆனது. ஏனைய வளைவான கோடுகளை போல அல்லாது தாயும் குழந்தையும் கோணங்களின் வடிவில் வரையப்பட்டுள்ளனர். வித்தியாசமான ஓவியம் இது. மனதை பாதித்த ஓவியங்களில் ஒன்று. இதேபோன்று ‘அலை’ 8 மற்றும் 9 இதழ்களில் அட்டைப்படமாக வெளிவந்த ‘ஒத்திசை’ மற்றும் (தனது பிள்ளையை காலில் இருத்தி சிரம பரிகாரம் செய்யும் தாய்) பெயரிடப்படாத ஓவியங்கள் மனதை விட்டு அகலாதவை.

இப்படியாக மாற்கு மாஸ்டரின் ஓவியங்கள் மனதில் ஆழப் பதிந்து நீண்டு நிலைத்திருப்பவை. இதுவே ஒரு கலைஞனின் வெற்றி. மாற்கு மாஸ்டர் உண்மையிலேயே பலராலும் கவரப்பட்ட ஓர் ஓவியக் கலைஞர். ஒரு கலைஞர் தான் வாழும் காலத்திலேயே அங்கீகாரமும் சிறப்பும் பெறுதல் அவசியம். அந்த அங்கீகாரம் உண்மையிலேயே கிடைத்தது. அது அவரின் நண்பர்களாலும் மாணவர்களாலும் உருவாக்கப்பட்டது. இதில் யேசுராசாவின் பங்கு முக்கியமானது. வகுப்பறைகளில் இருந்த மாற்கு மாஸ்டரை வெளியே கொண்டுவந்தவர்களில் முக்கியமானவராக இவர் இருந்தார். இதை விட பத்மநாப ஐயர், கனக சுகுமார், வாசுகி, அருந்ததி ஜெய்சங்கர், நிலாந்தன் போன்ற பலரும் உழைத்தனர். ‘தேடலும் படைப்புலகமும்’ என்ற மாற்கு மாஸ்டர் பற்றிய சிறப்பு நூல் மிகப் பெறுமதியானது. மிக மோசமான போர்ச்சூழலில் ஒரு படைப்பாளியை கௌரவித்து வெளியிடப்பட்ட ஓர் அருமையான தொகுப்பு. இதற்காக உழைத்த அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்நூல் மாற்கு மாஸ்டர் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தை வெளியுலகுக்கு தந்தது.  

1995இல் ஏற்பட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு மாஸ்டரின் வாழ்க்கையில் பல இன்னல்களை தோற்றுவித்தது. இடம்பெயர்ந்து மன்னாருக்கு சென்ற அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். அப்போதும் கூட தான் நேசித்த கலையை மறக்காமல் தொடர்ந்தும் படைப்புகளை உருவாக்கிய வண்ணமிருந்தார். இறுதியாக 2000ஆம் ஆண்டில் எம்மை விட்டு பிரிந்து இயற்கையுடன் கலந்தார். 

மாற்கு மாஸ்டர் ஒரு நல்ல மாணவர் குழாத்தை உருவாக்கிச் சென்றுள்ளார். அவர்கள் தொடர்ந்தும் தமது படைப்புகளை செய்து வருகின்றனர். அவர்களினூடாக மாற்கு மாஸ்டர் என்றும் வாழ்வார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08
news-image

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள்...

2025-02-22 11:53:38
news-image

வடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் 

2025-02-21 19:24:07
news-image

“நாட்டிய கலா மந்திர்” நடனக் கலாசாலை...

2025-02-20 14:39:18
news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15