பங்களாதேஷிற்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் தீவிரம் குறையாமல் விளையாடுவோம் என இந்திய அணி தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பர்மிங்காம் மைதானத்திலே அரையிறுதிப் போட்டியும் நடைப்பெறவுள்ளது.

குறித்த போட்டியினை பற்றி உரையாடிய இந்திய அணித்தலைவர் கோலி, "நாங்கள் பர்மிங்காம் மைதானத்தில் விளையாடியுள்ளோம். இந்த களம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் ஆட்டத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம், அந்த வெற்றியையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. முன்னேற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த 3 அணிகள் சாம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிக் கட்டத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கை என்றே நினைக்கிறேன். நெருக்கடியான ஆட்டங்களில் வீரர்கள் அதிகமாக அனுபவம் பெறுகிறார்கள் என நினைக்கிறேன். தொடரில் சில அணிகள் எதிரணியை துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் ஆச்சரியப்படுத்தியுள்ளது" என்று கோலி கூறினார்.