வைத்தியகலாநிதி சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்
இலங்கையின் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் மறைந்த ஏ.கே.கருணாகரன் மற்றும் பத்மபூஷன் மதுரை டி.என்.சேஷகோபாலன் ஆகியோரின் மாணவியான வைத்திய கலாநிதி. சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் "சாயி சுருதி லயா" இசை நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இரண்டாவது கர்நாடக இசை அரங்கேற்றம் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கரிஷ்மா கந்தகுமாரினால் நிகழ்த்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக செஞ்சொற்செல்வர், புகழ்பெற்ற கலாநிதி. ஆறு திருமுருகன் மற்றும் கௌரவ விருந்தினராக கலாநிதி. சுகன்யா அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தன்னுடைய இசை அரங்கேற்க நிகழ்வின் தொடக்க உருப்படியாக, இராக மாளிகையில் அமைந்த, ஆதி தாளத்தில் அமைந்த, நவரச வர்ணத்தை இசைத்து, தனது அரங்கேற்ற நிகழ்வை களை கட்டச் செய்தார்.
அதைத் தொடர்ந்து பாமர மக்களுக்கும் பொதுவாக புரிகின்ற, பட்டி தட்டி எங்கும் பிரபல்யமாகிய பாடலாகிய, ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த, ஆதி தாளத்தில் அமைந்த "வாதாபி கணபதிம்" என்கின்ற பாடல் மூலம் அரங்கைக் கட்டிப் போட்டார்.
மற்ற மூத்த இசைக் கலைஞர்களே, எடுத்துக் கையாள தயங்குகின்ற பஞ்சரத்தின கிருதிகளில் ஒன்றாகிய, நாட்டை ராகத்தில் அமைந்த "ஜகதானந்தகாரக" என்கின்ற, ஸ்ரீ சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இயற்றிய, நாட்டை இராக கீர்த்தனையை இசைத்து சபையோரின் அப்பிளாசை அள்ளிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கண்ட சாப்பு தாளத்தில் அமைந்த, சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த, "தாயே திரிபுர சுந்தரி" என்கின்ற க்ருதி, எல்லோருடைய மனங்களையும் கசியச் செய்தது.
பொதுவாக, ஒரு இசை அரங்கேற்றம் செய்கின்ற சாதகர் அல்லது சாதகி, தன்னுடைய சங்கீத திறமையை அதாவது கற்ற அல்லது கல்பனா சங்கீதத்தினுடைய திறமையை, நிரூபிப்பதற்காக மிகவும் புகழ் பூத்த இசை வாக்கியக்காரர்கள் உடைய, க்ருதியை எடுத்து அதை, ராக ஆலாபனை பாடி, நிரவல் செய்து, பின்னர் அந்த ராகத்தின் உடைய சாயல் பல்வேறு வகையிலே, விளங்கக்கூடிய வகையில் சபையோருக்கு அந்த ராகத்தினுடைய தன்மையையும், தன்னுடைய இசைத் திறமையையும் நிரூபிப்பர்.
அந்த வகையில், கரிஷ்மா கந்தகுமார் அவர்கள் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளினால் பாடப்பட்ட, ஆபேரி ராகத்தில் அமைந்த ஆதிகால (ரெண்டு களை) கீர்த்தனையாகிய நகுமோ என்கின்ற க்ருதியைப் பாடி, இராக ஆலாபனை பாடி, அதற்கு நிரவல் செய்து தன்னுடைய கற்பனா சங்கீதத்தின் உடைய திறமையை, நிரூபித்து சபையினரின் பாராட்டை பெற்றுக் கொண்டார்.
அடுத்ததாக குறிஞ்சி தாகத்தில் அமைந்த, ஆதி தாளத்தில் அமைந்த, "முத்துக் காரே" என்கின்ற கிருத்தியையும் இசைத்து சபையினரை கட்டி போட்டார்.
ஒரு சாதகர் மாணவனாக இருந்த காலத்தில் அவருக்கு கற்பிக்கப்பட்ட அல்லது அமைத்துக் கொடுக்கப்பட்ட சங்கீத பிரிவை சேர்ந்த கீதம், ஜதிஸ்ரம், ஸ்வரஜதி, வர்ணங்கள், கிருத்திகள், இராகமாளிகை உருப்படிகள், தில்லானா, போன்ற இசை உருப்படிகளை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் கூட, மனோதர்மம் என்கின்ற சொல்லிற்கு மனதின் தர்மம் என்பது பொருள்.
அதாவது இசைக் கலைஞன், தன்னுடைய கற்பனையினால் அதாவது மனத்தால் உண்டாக்கும் இசை என்றும் இதனை கூறலாம். ஆனால், அதே மனோ தரமத்தை எந்த விதிகள் முறைகளும், பரப்புகளும், இன்றி முழு சுதந்திரத்துடன் மனதுக்கு ரஞ்சகமாக பாடலாம் என கொள்ளவும் முடியாது. கல்பித சங்கீதத்திற்கும் அப்பாற்பட்ட இதன், அடிப்படையில், இசை வடிவங்கள் இருக்கின்றன.
ஒன்று இராக ஆலாபனை அதாவது ஒரு இராகத்தை பிரதானமாக எடுத்துக் கண்டு அதனை நன்றாக ஆலாபனை செய்து பாடுவது அல்லது அந்த ராகத்தினை அடிப்படையாகக் கொண்டு கற்பனா ஸ்வரங்கள் பாடுவது.
பொதுவாக மிகவும் எளிய இசை அல்லது கருத்துடன் கூடிய ஒரு ஆவர்த்தன அளவிற்கான சங்கீத சொற்றொடரானது, பல்லவி எனப்படுகின்றது. எனினும் இறுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நிரவல், கற்பனா ஸ்வரங்கள் பாடுவது வழக்கமாக உள்ளது.
இது அப்பாடல் முழுமையாக பாடிய பின் பாடப்படுவது வழக்கம் பல்லவி பின் நிரவல், கற்பனா ஸ்வரம் ஆகியவை பாடும்பொழுது மனோதர்ம சங்கீதம், தன் முழு சொரூபத்தை அடைகின்றது. இந்த மொத்த நிகழ்ச்சி பல்லவி பாடும் முறை என்றும் அழைக்கப்படுகின்றது.
அந்த வகையிலே செல்வி கரிஷ்மா அவர்கள், தர்மபுரி ராகத்தில் அமைந்த திஸ்ர திரிபுடையில் அமைந்த ராகம், தானம், பல்லவியை பாடி அதற்கு கற்பரா ஸ்வரத்தினால் மெருகேற்றி பார்வையாளர்கள் எல்லோருடைய கரகோஷத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.
பொதுவாக இசை அரங்கேற்ற நிகழ்வுகளையும், இசை கச்சேரிகளையும், மெருகூட்டவும், ரசிகர்களை அப்படியே மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் கட்டி போடவும் பயன்படுத்தப்படும் உருப்படிகளில், துக்கடாக்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அந்த வகையிலே, கதா நாயகி அவர்கள், அடுத்ததாக கமாஸ் ராகத்தில் அமைந்த, மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த, "சத்திய தெய்வமே" என்கின்ற பாடல் அடுத்ததாக இடம் பெற்றது.
இந்தப் பாடலானது, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மேல் மிகவும் தீவிர பக்தி கொண்ட, வைத்திய கலாநிதி சாய் லக்ஷ்மி அவர்களின் தெரிவாகக் கூட அமைந்திருக்கலாம். ஏனெனில் அந்தப் பாடல் மிகவும் உருக்கமாகவும், அதே நேரம், பகவான் பாபாவின் உண்மையான அருளையும் பக்தியையும் வேண்டி பாடப்பட்டதாக அமைந்திருந்தது.
அடுத்ததாக, ஆதி தாளத்திலும், இராகமாளிகையிலும் அமைந்த அமரர், ப்ரம்மஸ்ரீ, இணுவையூர். ஸ்ரீ வீரமணி ஐயா அவர்களினால் இயற்றப்பட்ட "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" என்கின்ற பாடல் சபையோரைக் கட்டிப்போட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
ஏனெனில் இந்தப் பாடல் ஆனது அமரர். ப்ரம்மஸ்ரீ. வீரமணி ஐயா அவர்களின் எழுத்துருவாக்கத்தில், திரு மயிலாப்பூரில் உள்ள, திரு கபாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அம்மன் சன்னதியில், இந்தப் பாடல்கள் யாவும் உயர் கல்வெட்டு முறையிலே புடைக்கப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக இன்றும் கூட வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பாடலானது ஆனந்த பைரவி ராகத்திலே, "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" என்று ஆரம்பித்து, கல்யாணி ராகத்தில் "எல்லோருக்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி" என்று தொடர்ந்து, பாக்ய ஸ்ரீ ராகத்தில் "நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்" என்று வளர்ந்து, ரஞ்சனி ராகத்தில் "அஞ்சன மையிடும் அம்பிகை எம்பிரான்" எனத் தொடர்ந்து, முடிவு பெறகின்றது. இந்தப் பாடல், முடிவுற்றதும் சபையினரின் கரகோஷம், வானைப் பிளந்தது.
அடுத்ததாக, ஆதி தாளத்தில் அமைந்த, செஞ்சுருட்டி இராகத்தில் அமைந்த, "நல்லூரன் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி கிளியே" என்கின்ற நல்லையம்பதியில் உறைகின்ற எல்லாம் வல்ல அந்த முருகப்பெருமானின் பெருமையை எடுத்து இயம்புகின்ற, ஸ்ரீ யோக ஸ்வாமிகள் அவர்களுடைய பாடலைப் பாடி கைதட்டலை அள்ளிக்கொண்டார்.
அடுத்ததாக நிரோஷ்டா ராகத்தில் அமைந்த, ஆதி தாளத்தில் அமைந்த, தில்லானாவைப் பாடி, ரசிகர்களின் மனதையும் உடலையும், நாயகியவர்கள் கட்டிப்போட்டிருந்தார்.
மங்களம் இசைப்பதற்கு முத்தாய்ப்பாக, சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த, கண்ட ஜம்பை தாளத்தில் அமைந்த, "வசன மிக வெற்றி" என்கின்ற திருப்புகழை இசைத்து தனது அரங்கேற்ற நிகழ்வுக்கு மணிமகுடமாக சூடிக்கொண்டார்.
இறுதியாக மங்களத்தை இசைத்து சர்வ உலகமும் நன்றாக வாழ வேண்டும் என்கின்ற பொதுப் பிரார்த்தனையோடு தன்னுடைய இசை அரங்கேற்ற நிகழ்வை கரிஷ்மா கந்தகுமார் அவர்கள் நிறைவு செய்தார்.
இந்த நிகழ்விற்கு, பின்னணி சேர் இசைக்கலைஞர்களாக, வயலின் இசைத்து சுவையூட்டியவர், முதுகலை மானி. சுவர்ணாங்கி சுகர்தன், மிருதங்கம் இசைத்து நிகழ்வை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர், மூத்த மிருதங்க வித்துவான். இசைச்செல்வர். வை வேனிலான்.
அத்தோடு அவர்களுடைய இரு மாணாக்கர்களும் கடம் இசைத்தும் கஞ்சிரா இசைத்தும் நிகழ்வுக்கு சுவை சேர்த்தனர். இவர்களுடைய புனித அளப்பெரிய பங்கு, கரிஷ்மா அவர்களுடைய இசை அரங்கேற்றம் மேலும் மேலும் சிறப்புற உதகியதென்ற கூறலாம்.
மொத்தத்தில் அன்றாடம் நோய்களோடும் ஊசிகளோடும் மருந்துகளோடும் வாழ்வை கொண்டாடுகின்ற எங்களுக்கு வளருகின்ற இசைக்கலைஞர்களுடைய அரங்கேற்ற நிகழ்வுகளும் இசை நிகழ்வுகளும் எங்கள் உள்ளங்களையும் மனங்களையும் குளிர வைக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில் கரிஷ்மா கந்தகுமார் அவர்கள், எங்கள் மனங்களை தன்னுடைய இசையினால் கட்டிப்போட்டு கொள்ளை கொண்டு விட்டார் என்றே கூற வேண்டும். அவருக்கு என்றென்றும் கலைவாணியின் பூரண கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM