தமிழக அரசு கவிழ்க்கப்படவேண்டும் என்று தமிழக சட்டபேரவையின் எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டபேரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் ஆரம்பித்ததும் மறைந்த 6 சட்டன்றஉறுப்பினர்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடர்புடைய பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், திமுக கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ப.தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். "வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சரவணனே குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை எல்லாம் விவாதிக்க முடியாது. கூவத்தூர் பேரம் தொடர்பாக ஆதாரம் கொடுத்தால் விவாதிக்க அனுமதியளிக்கிறேன்" என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால், இதை திமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

காவிரி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றனர். 

சபாநாயகர் குறுக்கிட்டு அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவையை நடத்த ஒத்துழைக்குமாறும் அமைதி காக்குமாறும் சபாநாயகர் தனபால் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ‘சட்டமன்ற உறுப்பினர் விற்பனைக்கு ’ என்ற பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அவைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். 

அங்கிருந்து ஸ்டாலின் தலைமையில் வெளியேறிய திமுகவினர், கூவத்தூரில் நடைபெற்ற பண பேர விவகாரம் வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றினர். ராஜாஜி சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பொலிஸார் ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ‘ கூவத்தூர் பேரம் நடந்ததாக அதிமுக எம்.எல்.ஏ., அளித்த வீடியோ வெளியானது. சினிமா படங்களில் வெளியான காமெடி சீன் போல் சரவணன் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். வீடியோ பேரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் விளக்கம் அளிக்கவேண்டும் . இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு கவிழ்க்கப்பட வேண்டும். கலைக்கப்பட வேண்டும். தமிழக அரசு அராஜக போக்குடன் செயல்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறது.’ என்றார்.  

தமிழக சட்டபேரவையில் தொடக்கநாளே பரபரப்பாக காணப்பட்டது.

இதனிடையே தமிழக சட்டபேரவையில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே சி வீரமணி தாக்கல் செய்தார்.

தகவல் : சென்னை அலுவலகம்