நேர்காணல் ஆர்.ராம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மரணச்சடங்கினை வைத்து அரசியல் செய்யும் எமது கட்சியின் இழிவான அணியுடன் இணைய முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி: 2023 ஜனவரி 27ஆம் திகதி, 17ஆவது தேசிய மாநாட்டை நடத்துவதற்கு முன்னதாக நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில், சிறிதரனுடனான உரையாடலில் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக பொதுச்செயலாளர் பதவியை கோரியிருந்தீர்கள். ஆனால், அது நடைபெறவில்லை. அன்றைய தெரிவுகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு ஆண்டொன்று கடந்துள்ள நிலையில் நீங்கள் இலக்கு வைத்த பதவியைப் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்களே?
பதில்: 2014ஆம் ஆண்டு எமது கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றபோது நான் முதன்முதலாக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டேன். 2019இல் நடைபெற்ற மாநாட்டில் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட நிலையில், வைத்தியர் சத்தியலிங்கமும் இரண்டாவது துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பொதுச்செயலாளராக இருந்த துரைராஜசிங்கம் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில் யாப்பின் அடிப்படையில் அப்பதவிக்கு நான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், மறைந்த தலைவர் சேனாதிராஜா, தேர்தல் திணைக்களத்திற்கு யாருக்கும் தெரியாமல் சத்தியலிங்கத்தின் பெயரை அனுப்பிவைத்துவிட்டார். மத்திய செயற்குழுவில் அனுமதியின்றி அந்தவிடயம் நடைபெற்றிருந்தாலும், அதனை அறிந்தவுடன் உடனடியாக மத்திய செயற்குழுவைக் கூட்டி, நானே முன்னின்று சத்தியலிங்கத்தின் நியமனத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தேன்.
இந்நிலையில், தற்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியிருக்கின்ற நிலையில் அந்த வெற்றிடத்துக்கு யாப்பின் அடிப்படையிலும், மத்திய செயற்குழுவின் அனுமதியிலும் நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.
கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற புதிய நிருவாகத்தெரிவுக்கும், தற்போதைய நியமனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதுமட்டுமன்றி, அந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் நானும், சிறிதரனும் இணங்கிச் செய்த தெரிவுகளின்போது எந்தவொரு பதவிகளையும் நான் எடுக்கப்போவதில்லை என்று தான் கூறியிருந்தேன்.
இதேநேரம், இரு அணிகளாகப் பிரிந்துள்ள கட்சியை ஒன்றுபடுத்துவதாக இருந்தால் சிறிதரன் தலைவராகவும், நான் பொதுச்செயலாளராகவும் இருக்க வேண்டும். ஆனால,; தலைவர் வடக்கிலிருந்து தெரிவானால் கிழக்கு மாகாணத்துக்கே பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது சம்பிரதாயமாக இருக்கிறது.
ஆகவே நான் பிரேரிக்கும் பெயர்களில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமித்தால் எமது இலக்குகளை அடையலாம் என்று தான் கூறியிருந்தேன். ஆனால், நான் பொதுச்செயலாளர் பதவியை கோரியதாக தவறானதொரு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.
கேள்வி: கட்சியின் மத்தியசெயற்குழுவில் உங்களுடைய ஆதிக்கம் இருக்கையில், நீங்கள் பிரேரிக்கும் நபர் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகையில் அவரும் உங்களின் கைபொம்மையாக செயற்படுவார் என்ற அச்சம் இருக்குமல்லவா?
பதில்: கட்சியின் யாப்பினை நான் எழுதவில்லை. யாப்புக்கு அமைவாகவே பொதுச்செயலாளர் செயற்பட முடியும். நியமிக்கப்பட முடியும்.
கேள்வி: பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வைத்தியர் சத்தியலிங்கத்தின் திடீர் இராஜினாமா, அவருக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கும்போது உங்களும் அவருக்கும் ஏற்படுத்திக்கொண்ட முன்கூட்டிய உடன்பாட்டின் அடிப்படையிலானதா?
பதில்: எனக்கும், சத்தியலிங்கத்துக்கும் எவ்விதமான உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் உரையாடப்பட்டபோது சத்தியலிங்கம் எனது பெயரையே முன்மொழிந்திருந்தார் என்பதும் இங்கே முக்கியமான விடயமாகும்.
கேள்வி: வட மாகாண முதலமைச்சர் தொடர்பில் உங்களது கருத்துக்களை சிவஞானம் சிறிதரன் நிராகரித்திருக்கின்ற நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிவதற்கு ஏற்கெனவே பரிசீலிக்கப்பட்ட நபர் ஆளுநராகியிருக்கின்ற சூழலில் அப்பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்: மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தெரியாதுள்ளது. எனினு,ம் தேசியப் பட்டியல் நியமனத்தின்போது பலர் என்னுடைய பெயரை முன்மொழிந்தபோது, சிறிதரன், 'வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எம்.பி பதவி அவரது மடியில் வந்து விழும்' என்று பூடகமாக கூறியிருந்தார். என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், அவருக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்குகளைக் கொண்டிருப்பதால் அவர் இராஜினாமாச் செய்தால் மட்டுமே நான் அந்தப் பதவியைப் பெற முடியும். ஆகவே தான் அவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப்போகின்றார் என்றேன். இப்போது அவர் அந்தக் கருத்தினை மறுத்துள்ளார். ஆகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நாம் உரிய வேட்பாளரை நிறுத்துவோம். இப்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு தயாராகின்றோம்.
கேள்வி: இந்திய எதிர்ப்பு மனோநிலையையும், மாகாண சபைகள் 'வெள்ளை யானைகள்' என்ற சிந்தனையையும் கொண்டிருக்கும் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமென்று கருதுகின்றீர்களா?
பதில்: நீங்கள் கூறுகின்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் கிடைத்தவொரு விடயமாக மாகாண சபைகளைக் கருதுவதால் அம்முறைமையை நீக்கப்போவதில்லை என்று தொடர்ச்சியாக கூறுகின்றார்கள்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நான் கொண்டுவந்திருந்த தனிநபர் பிரேரணையை, சாணக்கியன் முன்னகர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிடத்தில் உரையாடியபோது, அவ்வாறு தேவையில்லை. தமது அரசாங்கமே அந்த விடயத்தினை முன்னெடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. எம்மைப ;பொறுத்தவரையில் உள்ளூராட்சி தேர்தல் நிறைவடைந்தவுடன் மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.
கேள்வி: மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் நீங்கள் பங்கேற்கவில்லை, சிறிதரன், சுமந்திரன் அணி முரண்பாடு எப்போது முடிவுக்கு வரும்?
பதில்: சேனாதிராஜா சுகவீனம் அடைந்ததும் அவரை வைத்தியசாலையில் பார்வையிட்டேன். பின்னர் அவருடைய மரணச்செய்தி கேட்டதும் நேரடியாக வீட்டுக்குச் சென்று அஞ்சலித்து அவரது குடும்பத்தாருடன் ஒன்றரை மணிநேரத்துக்கும் அதிகமாக உரையாடியே வந்திருந்தேன்.
ஆனால், எனக்குப் பின்னர் சென்றவர்கள் தவறாக நடத்தப்பட்டார்கள். சேனாதிராஜாவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட குலநாயகம் அங்கு முழுமையாகவே செல்ல முடியாத நிலைமையே இருந்தது.
இறுதிச்சடங்கில் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று நான் உள்ளிட்டவர்களின் புகைப்படத்துடன் பதாகைகளை கட்டினார்கள். நாங்கள் சென்றால் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு குண்டர்களும் இருந்தார்கள்.
ஆகவே, மறைந்த தலைவருக்கு நான் இறுதி அஞ்சலி செலுத்தவதற்காகச் சென்று அங்கு சலசலப்பு ஏற்பட்டால் அது சேனாதிராஜாவிற்கே அகௌரவத்தினை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் அதனால் ஒதுங்கியிருந்தேன்.
அதுமட்டுமன்றி, மரணச்சடங்களில் அரசியல் செய்கின்ற மிக மோசமான நிலைமை இருந்தது. அந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும், எமது கட்சியின் சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.
நான் உள்ளிட்டவர்களின் பங்கேற்பின்மையை பெருவெற்றியாகக் கொண்டாடுபவர்களும் கட்சிக்குள் இன்னமும் இருகின்றார்கள். இந்நிலையில், அணிமுரண்பாடு பற்றிய உங்களின் கேள்விக்கு இப்போது பதிலளிப்பாக இருந்தால் மரணச்சடங்கை அரசியலுக்காக பயன்படுத்துகிற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்? ஆகவே அந்த வேறுபாடுகள் தான் இரு அணிகளாக தெரிகின்றன.
குறித்த விடயம் சம்பந்தமாக நாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம். கட்சித்தலைவர் தற்போது பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். விசாரணைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதன் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவார்கள்.
கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தது ஏன்?
பதில்: பாராளுமன்றத் தேர்தல்களில் கொழும்பில் போட்டியிடுவதற்கான கோரிக்கைகள் வரும். எனினும் ஒரு பிரதிநிதித்துவத்தினையே பெறமுடியும் என்பதால் அதனை தவிர்ப்போம். ஆனால் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை. தமிழ் பிரதிநிதித்துவங்கள் தான் அதிகரிக்கும். ஆகவே, எமது கட்சியின் கொழும்பு கிளை உறுப்பினர்களின் கோரிக்கையை இம்முறை பரீட்சார்த்தமாக பார்ப்பதற்காக போட்டியிடுவதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த முரண்பாடுகளும் நட்பு சக்திகளுடன் ஏற்படாது.
கேள்வி: 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதனை தொழில்நுட்ப ரீதியாக கையாள்வதாகக் கூறி தனியாகப் போட்டியிடத் தீர்மானித்த தமிழரசுக் கட்சி தற்போது அதேதேர்தலுக்காக ஒன்றுபட்டு போட்டியிட முயற்சிகளை எடுத்திருப்பது ஏன்?
பதில்: களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் தான் தொழில்நுட்ப ரீதியாக அந்தத் தேர்தலை முகங்கொடுப்பதற்கு தீர்மானித்தோம். அது கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் அறிவிப்பு அல்ல. சம்பந்தன் வீட்டில் நடைபெற்ற கூட்டத்திலும் அதனை பங்காளிக்கட்சிகளுக்கு தெளிவுபடுத்தினோம். ஆனால், அவர்கள் அதனை புரிந்துகொள்ளாது நாம் தனியாக பிரிந்து விட்டதாகவே அறிவித்தனர். தற்போதும் அவர்களின் கடிதங்கள் அவ்வாறு தான் அர்த்தம் தருகின்றன.
தற்போதைய சூழலில் எமக்கு பொது எதிரியாக இருப்பது தேசிய மக்கள் சக்தி தான். அந்தவகையில் நாடு அநுரவோடும், நமது ஊர் நம்மோடும் இருப்பதாக இருந்தால் உள்ளூராட்சி சபையின் ஆளுகையை கைப்பற்ற வேண்டும். அதற்காக சில இடங்களில் வியூகங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.
அந்த வகையில் தான் எமது கட்சியின் தற்போதைய தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பிற கூட்டணியை அமைத்துவிட்டார்கள். அதற்கு அவர்களுக்கு உரித்துண்டு.
எவ்வாறாக இருந்தாலும், தேர்தலின் பின்னர் பல இடங்களில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமைகள் வரும். ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி தனித்தே போட்டியிடப்போகின்றது, அது ஏனைய தரப்புடன் கூட்டணியை அமைக்காது. ஆகவே, தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்புக்கள் உருவாகும். விரும்பியோ விரும்பாமலோ ஆளுகைக்காக கட்சிகள் ஒன்று சேர வேண்டியிருப்பது தவிர்க்க முடியாது என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM