( எம்.எம்.மின்ஹாஜ் )

தீய வார்த்தைகளினால் தூற்றியதற்காகவும் தன்னை தாக்க வந்தமைக்காகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், ஜாஎல பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குப்பை மேடு விவகாரம் குறித்தான விசேட பேச்சுவார்த்தை ஒன்று கடந்த வாரம் வத்தளையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமை தாங்கினார். 

இதன்போது குப்பை குவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களும் வருகை தந்திருந்தனர். இந்த கூட்டம் நிறைவடைந்த கையோடு அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியே வந்த போது ஊடகவியலாளர் ஒருவர் வத்தளையில் குப்பை கொட்டுவதனை ஏன் தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

இதன்போது 'நான் தான் முதலில் வத்தளைக்கு குப்பை கொட்டுவதனை தடுத்து நிறுத்தினேன். அது உனக்கு தெரியுமா முட்டாள் 'என அவதூறான வார்த்தைகளை பேசி ஊடகவியலாளர் ஒருவரை தாக்க முற்பட்டார். 

இந்த தாக்குதல் சம்பந்தமாக சம்பவம் நடந்த தினத்தன்றே சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் கடந்த 8 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக குறித்த ஊடவியலாளர் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.