மா. உஷாநந்தினி
நாடளாவிய ரீதியில் தற்போது தேசிய மகளிர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பானது (ஐக்கிய நாடுகளின் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் நிறுவனம்) பால்நிலை சமத்துவத்தை அடைவதற்கான இலக்கு நோக்கிய தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பிக்கும் வகையில் “சமதீவு - சமத்துவம் விருத்தியடைந்துள்ள தீவு” என்கிற பொது நிறுவலை கொழும்பில் திறந்துவைத்துள்ளது.
ஒரு கூட்டு நடவடிக்கையின் மூலம் உடனடியாகவும் அவசியமாகவும் அடையவேண்டிய பால்நிலை சமத்துவ உலகமான இந்த “சமதீவு” பொது நிறுவல் கண்காட்சி கொழும்பு 7இல் அமைந்துள்ள லயனல் வெண்ட் கலை மையத்தில் வியாழக்கிழமை (6) காலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டது.
சனிக்கிழமை மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெய்ஜிங் பிரகடனம் மற்றும் அதன் செயற்பாட்டுத் தளத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும் இந்த பொது நிறுவல் நிகழ்வுகளும் கண்காட்சியும் நடத்தப்படுகின்றன.
இதன் ஆரம்ப நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, இலங்கைக்கான ஐ.நா. பெண்கள் அமைப்பின் அலுவலகத் தலைவர் ரமாயா சல்காடோ ஆகியோருடன் பல்வேறு துறை சார்ந்த சாதனைப் பெண்கள், பல்வேறு பெண் அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், மகளிர் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன உரையாற்றுகையில்,
“பால்நிலை சமத்துவம் 1995 முதல் முன்னேற்றமடைந்து வருகின்றபோதும், பல நெருக்கடிகள் காரணமாக பால்நிலை சமத்துவம் குறித்த பல குறிகாட்டிகளுக்கு எதிராக இலங்கைப் பெண்களின் நிலை தேக்கமடைந்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த ஆண்டு பெய்ஜிங் பிரகடனத்தின் 30ஆவது ஆண்டு நிறைவினை சந்தித்திருப்பது ஒரு முக்கியமான தருணம்.
அத்துடன் நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பால்நிலை சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு உறுதிபூண்டுள்ளது.
இலங்கையில் 2019, 2020 ஆண்டுகளில் பாலின சமத்துவமின்மை குறியீடு மிகவும் குறைந்திருந்தது.
கடந்த தேர்தலின்போது பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் நாமும் பங்கெடுத்திருந்தோம்.
கடந்த 9ஆவது பாராளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்களே இருந்தனர். ஆனால், இம்முறை 10ஆவது பாராளுமன்றத்தில் 9.8 வீதமளவில், 22 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தால் மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் அனைவருக்குமான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாக இது காணப்படுகிறது” என தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் தெரிவிக்கையில்,
“பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் கடப்பாடுகள் தொடர்பாக சமீபத்தில் மீளாய்வு செய்யப்பட்டது. இதனால், இந்நிகழ்வு நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் இடைவெளிகளைக் கண்டறிவதற்கும், மிக முக்கியமாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் குறித்த அதனது அர்ப்பணிப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் மிக முக்கிய தருணமாகிறது. இந்தப் பயணத்தில் இலங்கையை ஆதரிப்பதில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளது” என்றார்.
1995இல் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டில் கலந்துகொண்டு பெய்ஜிங் பிரகடனம் மற்றும் அதன் செயற்பாட்டுக்கான தளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கை பெண் ஆர்வலர்களில் ஒருவரான பேராசிரியர் சாவித்திரி குணசேகர தனது உரையில்,
"பெய்ஜிங் பிரகடனம் மற்றும் அதன் செயற்பாட்டுத் தளத்தை ஏற்றுக்கொண்டதன் 30ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதென்பது, நிச்சயமாக பால்நிலை சமத்துவம் தொடர்பான கடந்த கால முன்னேற்றங்களைப் பற்றி சிந்திப்பதற்கும், தகவல் தொழில்நுட்பம், இணையவழி குற்றங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சவால்களை எதிர்கொண்டு சமத்துவத்தை அடைவதற்கும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்குமான ஒரு புதிய பாதையை, முன்னோக்கிச் செல்வதற்கான வழியை உருவாக்குவதற்கான தருணமாகிறது.
நாட்டிலும் பல்வேறு சமூகங்களிலும் பாகுபாடு நிலவுவதோடு வாழ்க்கைக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது.
இந்நிலையில், பால்நிலை சமத்துவத்தை உணர்வதற்காக புதிய தலையீடுகளை உருவாக்கும்போது, ஆர்வலர்களும் மகளிர் குழுவினரும் தமது கடந்தகால முன்னேற்றங்கள், போக்குகள், சந்தித்த தோல்விகள், இடைவெளிகள் மற்றும் வரம்புகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும்...” என தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐ.நா. பெண்கள் அமைப்பின் அலுவலகத் தலைவர் ரமாயா சல்காடோ கூறுகையில்,
“அனைவருக்கும் மனித உரிமைகள் மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்தியை நிலைநிறுத்துவதே ஐ.நா பெண்கள் அமைப்பினதும் எங்களதும் குறிக்கோளாகும்.
உலகளாவிய தரவுகள், பால்நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவரும் சமமாக மதிக்கப்படுகின்ற, சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற மற்றும் நியாயமான நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்ற சமூகங்கள், செழித்து காணப்படுவதுடன் மேலும் இந்த இலக்குகளை அடைவதற்கு கூட்டு முயற்சிகள் தேவை என்பதை காட்டுகின்றன" என்று கூறினார்.
உரைகளை தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டிருந்த “சமதீவு” பாதை விருந்தினர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த சமதீவு பொது நிறுவல் கண்காட்சியானது ஒரே மாதிரியான உள எண்ணம் இல்லாத பாதை, கல்விப் பாதை, சமமான வாய்ப்புள்ள பாதை, வன்முறை இல்லாத பாதை, சமத்துவ பாதை, சமமான பிரதிநிதித்துவ பாதை, நல்வாழ்வுப் பாதை முதலான பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதன் கடந்துவரும் ஒவ்வொரு பருவங்களிலும் பல்வேறு நிலைகளிலும் பல துறைகளிலும் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டுமென்பதை உணரவும் பால்நிலை சமத்துவம் எதுவென்பதை புரிந்துகொள்ளவும் இந்த சமதீவு பொது நிறுவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான எல்லா விதமான வன்முறைகளோடு பாகுபாடு, பாலின சுரண்டல் முதலானவற்றையும் எதிர்த்து போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தை அடைய முடியும் என்பதை சமதீவு எடுத்துக்காட்டுகிறது.
அத்துடன் கல்வி, தொழில், தலைமைத்துவப் பண்புகளையும் பார்வையாளர்களிடத்தில் “சமதீவு” பொது நிறுவல், கண்காட்சி ஊக்குவிக்கிறது.
இந்த சமதீவு பொது நிறுவலானது லயனல் வெண்ட் கலை மையத்தில் மார்ச் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி புதன்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
இதன்போது பால்நிலை சமத்துவம், பெண்களின் உரிமைகள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பான உரைகள், நாடகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நிகழ்த்தப்படும்.
சமதீவு பொது நிறுவலின் இறுதி நாளான மார்ச் 12ஆம் திகதி காலை 9 மணிக்கு பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான தமிழ் நாடக நிகழ்வை கண்டுகளிக்கவும் காலை 10.40 மணிக்கு தமிழ்மொழி வழிகாட்டலில் சமதீவு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM