குளுக்கோமா நோய் : 2020 ஆம் ஆண்டடில் 79 மில்லியன் பேர் பார்வை இழப்பு

Published By: Vishnu

06 Mar, 2025 | 04:09 AM
image

(செ.சுபதர்ஷனி)

குளுக்கோமா நோய் நிலைமை காரணமாக 2020 ஆம் ஆண்டு 79 மில்லியன் பேர் பார்வை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 2040 ஆம் ஆண்டாகும் போது இத்தொகை 111 மில்லியனாக அதிகரித்திருக்க கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் தில்ருவனி ஆரியசிங்க தெரிவித்தார்.

சர்வதேச குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் புதன்கிழமை (6) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பார்வை இழப்பை ஏற்படுத்தும் நோய்களில் இருந்து குளுக்கோமா சற்று மாறுபட்ட நோய் நிலைமையாக உள்ளது. மெல்ல மெல்ல பார்வை இழப்பை ஏற்படுத்துவதால் நோய் நிலைமைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதில்லை. நாளடைவில் விழித்திரை நரம்புகளுக்கு சேதம் ஏற்படுவதால் பார்வை இழப்பும், குருட்டுத் தன்மையும் ஏற்படுகிறது. விழித்திரை நரம்புகள் நேரடியாக மூளையுடன் தொடர்புடையன. ஆகையால் நரம்புகள் சேதம் அடையும் பட்சத்தில் நிலைமையை மீள சரி செய்வது முடியாத காரியமாகும்.

குளுக்கோமா நிலைமையின் போது நோயை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிகிச்சைகள் மாத்திரமே வழங்கப்படுகிறது. விழித்திரை நரம்புகளில் ஏற்படும் உயர் குருதி அழுத்தம் இந்நோய் ஏற்பட பிரதானக் காரணமாக உள்ளது. உடலின் குருதி அழுத்தத்தை அளவிடுவது போல் விழித்திரை நரம்புகளின் குருதி அழுத்தத்தை அளவிட முடியாது. அதற்காக பிரத்யேக கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கண்களில் பூ விழுதலே குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் முதன்மைக் காரணியாக உள்ளதுடன் குளுக்கோமா இரண்டாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு 79 மில்லியன் பேர் இவ்வாறான பார்வை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். எதிர்வரும் 2040 ஆம் ஆண்டாகும் போது இத்தொகை 111 மில்லியனாக அதிகரித்திருக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நோயாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாகவும், இதனால் நோயாளிகளின் வீதம் மேலும் அதிகரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் சமூகத்தில் உள்ள ஆயிரம் பேரில் 35 பேர் குளுக்கோமா நிலையால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வொன்றின் போது தெரியவந்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோர், கண்களில் காயம் ஏற்பட்டவர்கள், சிறுவயதிலிருந்தே மூக்கு கண்ணாடி அணிபவர்கள், நீரிழிவு நோயாளர்கள் ஆகியோருக்கு  குளுக்கோமா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் மரபு ரீதியாகவும் ஒருவர் இந்நோய் நிலைமைக்கு ஆளாகலாம். ஆகையால் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறையேனும் தகுதியுடைய வைத்தியரிடம் கண் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதி சர்வதேச குளுக்கோமா விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தினரால், சர்வதேச குளுக்கோமா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் குளுக்கோமா நோய் நிலைமையை கட்டுப்படுத்தல் தொடர்பில் பல தெளிவூட்டல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 29ம் திகதி கண்டி தேசிய கண் வைத்தியசாலையில் கண் பரிசோதனைக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்றும் இடம்பெற உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15