அபிலாஷனி லெட்சுமன்
( படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன் )
கர்நாடக இசையின் தனித்துவமானது கற்பனைகளுக்கும் மனோதர்மத்துக்கும் இனிமைக்கும் நிறைய இடம் கொடுப்பது. இவற்றை வாய்ப்பாட்டில் கொண்டு வருவது மிகக் கடினம் என்றாலும் அரங்கமே வியப்புக்குள்ளாகும்படி மொழியும் கலையும் கலாசாரமும் பண்பாடும் நிரம்பிய இராகம், தாளத்தோடு கரிஷ்மா கந்தகுமார் கர்நாடக இசை அரங்கேற்றத்தை நிகழ்த்தியமை சிறப்பானது.
சாயி ஸ்ருதி லயா கலைக்கூடத்தின் இயக்குநர் வைத்திய கலாநிதி சாயி லக்ஷ்மி லோகீஸ்வரனின் மாணவியும் திரு திருமதி கந்தகுமாரின் புதல்வியுமான கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றமானது கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 06இல் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர், “செஞ்சொற்செல்வர்”, கலாநிதி ஆறு. திருமுருகன் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழகத்தின் இசைத்துறை, முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
இசைத் துறையில் மேலும் வளர்ந்து தனது சங்கீத குருவின் வழிநடத்தலில் சாதனைகள் புரிய மைல்கல்லாக இந்த கர்நாடக இசை அரங்கேற்றத்திற்கு கரிஷ்மா வழங்கிய பங்களிப்பு மகத்தானது.
கரிஷ்மா கந்தகுமார் கனடா நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராயினும் இசை அரங்கேற்றத்தின் ஊடாக தமிழை சரியாக உச்சரித்து தமிழ் சாகித்தியங்களை சரிவர கையாண்ட தன்மை செவிக்கு விருந்தானது.
இக் கலை நிகழ்விலே வயலின் இசை கலைஞராக “முதுகலைமானி” சுவர்ணாங்கி சுகர்தன் , மிருதங்கம் “இசை செல்வர்” வை.வேனிலான் , கடம் இசை கலைஞராக “கலாவித்தகர்” “லயஞானபாரதி ” ஸ்ரீ சதன்யன் அசோகன் , கஞ்சிரா இசை கலைஞராக “லயஞானபாரதி” ஸ்ரீ நிசாத் இக்பால் மற்றும் தம்புரா இசை கலைஞராக சக்திகா ஸ்ரீ குமரன் ஆகியோர் இணைந்து வழங்கிய பக்கவாத்திய இசை அற்புதம்.
இசையை இசையினாலே புரிந்துகொள்வதற்கான ஆரோக்கியமான மனநிலையையும் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்த தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் கனவோடு, அவரது 10ஆவது ஆண்டு நினைவுநாளில் நினைவுகூர்ந்து, பன்னிரு ஆண்டுகளாக தான் கற்ற கர்நாடக இசையினை குரு கலாநிதி சாயி லக்ஷ்மியின் துணையோடு அரங்கப் பிரவேசம் செய்தமை சிறப்பு.
பண்பாட்டு அம்சமாக திகழ்ந்த கர்நாடக இசை அரங்கேற்றத்தில் கரிஷ்மாவின் கம்பீரமான குரலுக்கு பொருந்தும் வகையிலான ராகங்களையும் பாடல்களையும் அமைத்துக் கொடுத்து செவிக்கு இனிமையான இசை அரங்கேற்றமாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல இசை கச்சேரியாகவும் வடிவமைத்துள்ளார், குரு சாயி லக்ஷ்மி.
பார்வையாளர்கள் நிரம்பிய அரங்கில் இத்தகைய கடினமான ஸ்வர அமைப்புக்களையும் ராகங்களையும் கொண்ட பாடல்களை எப்படி பாடி நிறைவு செய்வாள் என்ற அச்சத்தை ரசிகப்பெருமக்களுக்கு வழங்கியிருந்த நிகழ்ச்சி நிரல் ஏற்படுத்தியது.
எனினும், சபையின் நடுவே கரிஷ்மா தனது அழகிய குரலில் கம்பீரமான உச்சரிப்போடும் “ அங்கையர் கண்ணி ...” என்று தொடங்கும் “நவரஸ வர்ணம்” பாடியபோது எல்லோரிடமும் எழுந்த அச்சம் பாட்டின் நிறைவில் கரகோசமாக மாறியது.
கரிஷ்மாவினால் பாடப்பட்ட “வாதாபி கணபதீம்..” பெரும்பாலான கர்நாடக இசை அரங்கேற்றங்களில் பாடப்படும் பாடல். ஆனால், சங்கீதம் அறிந்தவர்களுக்கே அந்தக் கீர்த்தனை முழுமையாகத் புரியும்.
கனடாவில் பிறந்து வளர்ந்த கரிஷ்மா இந்த கீர்த்தனையில் வரும் ஒவ்வொரு சொல்லையும் ஸ்வரங்களையும் ரசித்து அனுபவித்து பாடியமை சிறப்பென்றே கூறவேண்டும்.
தொடர்ந்து, “ஜகதானந்தகாரக...”, “தாயே திரிபுர சுந்தரி...”, “நகுமோ..”, “முத்து காரே..” , “இராகம் தானம் பல்லவி...”, “ஸத்ய தெய்வமே..”, “கற்பகவல்லி...”, “நல்லூரான் திருவடியை ..” ஆகிய பாடல்களோடு தில்லானா, திருப்புகழ் ஆகிய உருப்படிகளையும் பாடி சிறப்பாக நிறைவு செய்தமை எல்லோர் மனங்களையும் நிறைத்த அதேவேளை அவரது இசைஞானமும் புலப்பட்டது.
கரிஷ்மா சுமார் மூன்று மணிநேரங்களை கடந்த நிலையில் தன் இசையால் சபையோரை கட்டிப்போட்டுவிட்டார். சங்கீதக் கச்சேரியை கேட்டு ரசித்த உணர்வில் சபையோர் எழுப்பிய கரகோஷத்தால், அருமையான நிறைவு கண்டுவிட்ட திருப்தியை கரிஷ்மாவின் தாயாரது முகத்தில் பார்க்க முடிந்தது. கரிஷ்மாவிற்கு இசை ஞானத்தை புகட்டிய சாயி லக்ஷ்மியின் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.
சாயி லக்ஷ்மி லோகீஸ்வரன்
கரிஷ்மாவின் குருவான “சாயி லக்ஷ்மி லோகீஸ்வரன்” மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தும் இசையின் மீது கொண்ட காதலை முறையான இசைக் கலையாக போதிக்கும் ஒரு சிறந்த இசைக் கலைஞரும் ஆசிரியையும் ஆவார். பல மாணவர்களுக்கு முறையான சங்கீதத்தை கற்றுக்கொடுத்து இவர் கண்ட அரங்கங்கள் பல.
இந்த இசை அரங்கேற்றத்தில் கலந்துகொண்ட கலாநிதி ஆறு. திருமுருகன் உரையாற்றுகையில்,
சிறப்பான முறையில் வெற்றிகரமான அரங்கேற்றத்தை நெறியாள்கை செய்த சாயி லக்ஷ்மி லோகீஸ்வரனுக்கும் அரங்கேற்றத்தை நிகழ்த்திய கரிஷ்மாவுக்கும் எனது பாராட்டுக்கள்.
காத்திரமான உருப்படிகளை தெரிவுசெய்து சிறப்பான முறையில் அரங்கேற்றத்தை நிகழ்த்தி அனைவரது மனதிலும் பூரிப்பை ஏற்படுத்திவிட்டார் கரிஷ்மா ஏற்படுத்திவிட்டார்.
எல்லோராலும் பாடல்களை அழகாக பாடமுடியாது. ஆனால் கரிஷ்மா சிறு வயதிலிருந்தே இசையினை கற்று தன் தந்தையின் நினைவு நாளில் அருமையான ஓர் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
இந்த அரங்கேற்றத்தில் அணிசேர் கலைஞர்களின் இசை பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
சாயி லக்ஷ்மி லோகீஸ்வரன் இசையினை பெயருக்காக கற்றுக்கொடுக்காது இசையினை உயிராக போதிப்பது இந்த அரங்கிலே தென்பட்டமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
கரிஷ்மா இசைக்கலையினை நிறைய கற்று நிலையின்பமாக அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி சுகன்யா அரவிந்தன் குறிப்பிடுகையில்,
இசை அரங்கேற்றம் என்பது உருப்படிகளிலிருந்து ஆற்றுகையினை மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டு சமர்ப்பணம் செய்வது. தாய், தந்தையின் கனவை நிறைவேற்றும் நோக்கில் அரங்கேற்றத்தை சிறப்பாக சமர்ப்பணம் செய்தார் கரிஷ்மா.
கரிஷ்மாவினால் தெரிவுசெய்யப்பட்டு பாடப்பட்ட உருப்படி ஒவ்வொன்றும் மிகவும் காத்திரமானதும் சவால்கள் நிறைந்ததுமாக காணப்பட்டது. ஆனால் அதனை மிக சிறப்பாக பாடி மனதை குளிரச்செய்துவிட்டார்.
உண்மையில் ஓர் ஆற்றுகை கலைஞர் என்ற வகையில் சபையோரை இசையினால் கட்டிப்போட்டது கரிஷ்மாவின் குரல்.
பார்வையாளர்களுக்கு சிறப்பான ஓர் அரங்கேற்றத்தை கரிஷ்மா வழங்கியமை பாராட்டுக்குரியது.
கரிஷ்மாவினால் பாடப்பட்ட ஆபேரி ராகத்தில் அமைந்த “நகுமோ...” பாடல் மிக அருமையாக காணப்பட்டது. தன் நிலை தடுமாறாமல் இசையினை முன்வைத்தார்.
இத்தகைய திறமை கொண்ட மாணவியை செதுக்கிய குருவுக்கு வாழ்த்துக்களை கூறியே ஆகவேண்டும்.
குருவினால் கற்றுக் கொடுக்கப்பட்ட இசை, ஒழுக்கம் என்பன எந்நிலையிலும் மாறாது இந்த மேடையில் அரங்கேற்றமாக ஆற்றுகை செய்யப்பட்டமை சிறப்புக்குரியது என தெரிவித்தார்.
இந்த இசை அரங்கேற்றத்தில் கரிஷ்மா அவரது தந்தையுடன் காணப்பட்ட பல நினைவுகள் உள்ளடங்கிய காணொளியானது ஓர் உணர்வுபூர்வமான தருணத்தை ஏற்படுத்தியது.
இதேவேளை, அரங்கேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ததையிட்டு சான்றிதழினையும் பெற்றுக்கொண்டு வெற்றிகரமான அரங்கேற்றத்தை நிறைவு செய்தார் கரிஷ்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM