கோஹ்லி பொறுமைகலந்த அரைச் சதம்; ஆஸி.யை 4 விக்கெட்களால் வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published By: Vishnu

04 Mar, 2025 | 10:38 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய முன்னாள் சம்பியன் இந்தியா, ஒன்பதாவது சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா ஐந்தாவது தடவையாக தகுதிபெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 265 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விராத் கோஹ்லி குவித்த அரைச் சதம், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன இந்தியாவை இறுதிப் போட்டிக்குள் இட்டுச் சென்றன.

ஷுப்மான் கில் (8), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (28) ஆகிய இருவரும் முதல் 8 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (43 - 2 விக்.)

இந் நிலையில் விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 3ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

ஷ்ரேயாஸ் ஜயர் 45 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அக்சார் பட்டேல் தனது துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் அவரால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் 27 ஓட்டங்களுடன் வெளியேறினார். (178 - 4 விக்.)

கடைசி 8 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 48 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் கே.எல். ராகுல் ஓட்ட வேகத்தை அதிகரிக்கும் நோக்கில்   43ஆவது ஓவரில் சிக்ஸ் ஒன்றை விளாசினார்.

அதுவரை மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த விராத் கோஹ்லி அநாவசியமாக அவசரப்பட்டு சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். அவர் 98 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனிடையே கே.எல். ராகுல் 33ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த ஹார்திக் பாண்டியா 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (259 - 5 விக்.)

கே. எல். ராகுல் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ் உட்பட 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நேதன் எலிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவர் பெற்ற அரைச் சதங்கள் அவுஸ்திரேலியாவை கௌரவமான நிலையில் இட்டது.

உபாதைக்குள்ளான மெட் ஷோர்ட்டுக்கு பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட கூப்பர் கொனலி ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (4 - 1 விக்.)

எனினும் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 3 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியை நல்ல நிலையில் இட்டார். ஆனால்,  அவுஸ்திரேலியாவுக்கு அவை பலன் தராமல் போயின.

39 ஓட்டங்களைப் பெற்ற ட்ரவிஸ் ஹெட்டுடன் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் 29 ஓட்டங்களைப் பெற்ற மானுஸ் லபுஷேனுடன் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரியுடன் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் பகிர்ந்தார்.

ஸ்டீவன் ஸ்மித் 96 பந்துகளில் 73 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36